`என் வாழ்க்கையில் நான் எடுத்த மிகப்பெரிய முடிவு' - ஓய்வை அறிவித்த இம்ரான் தாஹிர் உருக்கம்! | Imran Tahir to quit ODI cricket after World Cup

வெளியிடப்பட்ட நேரம்: 09:00 (05/03/2019)

கடைசி தொடர்பு:09:00 (05/03/2019)

`என் வாழ்க்கையில் நான் எடுத்த மிகப்பெரிய முடிவு' - ஓய்வை அறிவித்த இம்ரான் தாஹிர் உருக்கம்!

தென்னாப்பிரிக்க அணியின் முக்கிய சுழற்பந்துவீச்சாளர், இம்ரான் தாஹிர். பாகிஸ்தானின் லாகூர் நகரைச் சேர்ந்தவர் என்றாலும், அங்கு வாய்ப்பு கிடைக்காததால் தென்னாப்பிரிக்காவில் தஞ்சம் புகுந்து, அந்நாட்டு கிரிக்கெட் அணியின் வீரராகக் களமிறங்கினார். அதன்படி கடந்த 2011 -ம் ஆண்டு, சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அறிமுகம் ஆனார். இவர் அறிமுகம் ஆனபோதே இவருக்கு வயது 30-ஐ தாண்டிவிட்டது. லேட்டாக கிரிக்கெட்டில் வாய்ப்பு கிடைத்ததாலும், கிடைத்த வாய்ப்பை சிறப்பாகப் பயன்படுத்தி, குறுகிய காலத்தில் முன்னணி பந்துவீச்சாளராகத் திகழ்ந்தார். குறுகிய காலத்தில் மேட்ச் வின்னிங் பௌளர் என்ற பெயரையும் எடுத்தார். எப்பேர்ப்பட்ட பேட்ஸ்மேனாக இருந்தாலும் சரி, இவரது கூக்ளியில் தடுமாறாமல் தப்பிக்க முடியாது.

இம்ரான் தாஹிர்

photo credit: @OfficialCSA

விக்கெட்டை வீழ்த்திவிட்டு மைதானத்தில் ஓடுவதுதான் தாஹிரின் ஸ்டைல். இந்த ஸ்டைல், ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்ற ஒன்று. தென்னாப்பிரிக்க அணியை நிறைய லீக் போட்டிகளிலும் ஆடிவரும் இவர், ஐபிஎல்-லில் சென்னை அணிக்காக ஆடிவருகிறார். இதற்கிடையே, வரும் உலகக்கோப்பை தொடருக்குப் பின், சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறப்போவதாக அறிவித்துள்ளார். தற்போது, இலங்கை அணிக்கு எதிரான தொடரில் விளையாடிவருகிறார். தனது ஓய்வுகுறித்துப் பேசுகையில், ``உலகக்கோப்பையில் விளையாட வேண்டும் என்ற கனவு நிறையப் பேருக்கு இருக்கும். அதேதான் எனக்கும் இருக்கிறது. தென்னாப்பிரிக்கா போன்ற சிறந்த அணிக்கு விளையாடுவதே நான் செய்த மிகச் சிறந்த சாதனை ஆகும். எனக்கும் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் போர்டுக்கும் நல்ல புரிதல் உள்ளது. இப்போது உலகக்கோப்பை ஆட்டங்களுக்குப் பிறகு, ஒருநாள் கிரிக்கெட்டில் ஓய்வுபெறப் போகிறேன். 

தாஹிர்

photo credit: @OfficialCSA

அதற்குப் பிறகு, நிறைய லீக் போட்டிகளில் விளையாட தென்னாப்பிரிக்க கிரிக்கெட் போர்டு அனுமதி கொடுத்துள்ளது. நான் எப்போதும் தென்னாப்பிரிக்க அணியுடன் டி20 போட்டிகளில் விளையாடுவதை விரும்புகிறேன். ஏனென்றால், டி20 போட்டிகளில் தொடர்ந்து விளையாடக்கூடிய அளவுக்கு உடற்தகுதி ஒத்துழைக்கிறது. 2020 டி20 உலகக்கோப்பை வரை விளையாட முடியும் என நம்புகிறேன். இதற்கு வாய்ப்பு கொடுத்த கிரிக்கெட் போர்டுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். என்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு நேரம் விளையாட விரும்புகிறேன். ஆனால், சில நேரங்களில் பெரிய முடிவுகள் எடுக்கவேண்டிய தருணங்கள் ஏற்படும். அப்படிப்பட்ட தருணத்தில்தான் நான் இருக்கிறேன். இப்போது நான் எடுத்துள்ள முடிவுதான் என் வாழ்க்கையில் நான் எடுத்த மிகப்பெரிய முடிவு" என உருக்கமாகத் தெரிவித்துள்ளார். 

தாஹிர்

photo credit: @OfficialCSA

இம்ரான் தாஹிர் இதுவரை 20 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 57 விக்கெட்டுகளும், 95 ஒருநாள் போட்டிகளில் 156 விக்கெட்டுகளும், 37 டி20 போட்டிகளில் 62 விக்கெட்டுகளும் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close