விராட் கோலி 40வது சதம்! - ஆஸ்திரேலியாவுக்கு 251 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா #INDvsAUS | India sets 251 runs target to australia in Nagpur ODI

வெளியிடப்பட்ட நேரம்: 17:02 (05/03/2019)

கடைசி தொடர்பு:17:07 (05/03/2019)

விராட் கோலி 40வது சதம்! - ஆஸ்திரேலியாவுக்கு 251 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா #INDvsAUS

ஆஸ்திரேலிய அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 48.2 ஓவர்களில் 250 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. #INDvsAUS

விராட் கோலி #INDvsAUS

Photo Credit: BCCI

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பின்ச் ஃபீல்டிங் தேர்வு செய்தார். கடந்த போட்டியில் களமிறங்கிய அதே வீரர்களுடன் இந்திய அணி களமிறங்கிய நிலையில், ஆஸ்திரேலிய அணி இரண்டு மாற்றங்களுடன் களமிறங்கியது. ஆஷ்டன் டர்னர் மற்றும் பெஹ்ரெண்டாஃப் ஆகியோருக்குப் பதிலாக ஷான் மார்ஷ் மற்றும் நாதன் லயான் ஆகியோர் ஆஸ்திரேலிய அணியின் பிளேயிங் லெவனில் இடம்பெற்றனர். 

இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி முதல் ஓவரிலேயே தொடக்க வீரர் ரோஹித் ஷர்மாவின் விக்கெட்டை இழந்தது. தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரர் தவான் 21 ரன்களில் வெளியேறினார். அடுத்து வந்த கோலி - ராயுடு ஜோடி சிறிதுநேரம் தாக்குப்பிடித்தது. ஜாம்பா பந்துவீச்சில் 18 ரன்களில் ராயுடு வெளியேறினார். இதனால், 17 ஓவர்களில் இந்திய அணி 75 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதையடுத்து கோலியுடன் கைகோத்த விஜய் சங்கர், ரன்குவிப்பில் ஈடுபட்டார். இந்த ஜோடி 4வது விக்கெட்டுக்கு 81 ரன்கள் சேர்த்த நிலையில் துரதிர்ஷ்டவசமாக விஜய் சங்கர் ரன் அவுட்டாகி வெளியேறினார். 41 பந்துகளைச் சந்தித்த அவர், 46 ரன்கள் எடுத்திருந்தார். அடுத்துவந்த கேதர் ஜாதவ் நீண்டநேரம் தாக்குப்பிடிக்கவில்லை. தோனி, தான் சந்தித்த முதல் பந்திலேயே ஆட்டமிழந்து வெளியேறினார். அவர் 11 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால், இந்திய அணி 32.3 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்திருந்தது. 

விஜய் சங்கர் #INDvsAUS

Photo Credit: BCCI

விக்கெட்டுகள் ஒருமுனையில் அடுத்தடுத்து வீழ்ந்தாலும் கேப்டன் கோலி மறுமுனையில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 107 பந்துகளில் சதமடித்து அசத்தினார். சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இது அவரது 40வது சதமாகும். சிறிதுநேரம் தாக்குப்பிடித்த ஜடேஜா, 40 பந்துகளைச் சந்தித்து 21 ரன்களுடன் நடையைக் கட்டினார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் கோலி, 48வது ஓவரில் ஆட்டமிழந்தார். 120 பந்துகளில் 116 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 48.2 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 250 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஆஸ்திரேலியா தரப்பில் கம்மின்ஸ் 4 விக்கெட்டுகளும் ஆடம் ஜாம்பா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
 


[X] Close

[X] Close