``நிதாஹஸ் டிராபி தந்த பாடம்; பும்ராவின் அட்வைஸ்” - கடைசி ஓவர் குறித்து மனம்திறந்த விஜய் சங்கர் | Vijay Shankar said he would not over-react after taking match-winning wickets

வெளியிடப்பட்ட நேரம்: 10:25 (06/03/2019)

கடைசி தொடர்பு:10:37 (06/03/2019)

``நிதாஹஸ் டிராபி தந்த பாடம்; பும்ராவின் அட்வைஸ்” - கடைசி ஓவர் குறித்து மனம்திறந்த விஜய் சங்கர்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் பெற்ற வெற்றி குறித்து விஜய் சங்கர் பேசியுள்ளார்.

விஜய் சங்கர்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் வெற்றிபெற்றதற்கு முக்கிய காரணம் இளம் வீரர் விஜய் சங்கர். பேட்டிங்கில் 46 ரன்கள் எடுத்து கைகொடுத்தவர் பௌலிங்கிலும் கலக்கினார். குறிப்பாகக் கடைசி ஓவரில் ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு 11 ரன்கள் தேவைப்பட விஜய் சங்கர் பந்துவீசினார். முதல் பந்திலேயே ஸ்டோனிஸை அவுட் ஆக்கியவர் மூன்றாவது பந்தில் ஜம்பாவையும் அவர் அவுட் ஆக்க, இந்திய அணி எட்டு ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரில் 2 - 0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. 

சங்கர்

கடந்த வருடம் நிதாஹஸ் டிராபியின்போது விமர்சனத்துக்கு உள்ளானவர் நேற்றைய வெற்றியின் மூலம் ஓவர் நைட்டில் ஹீரோவாக உருவாகியுள்ளதுடன் உலகக்கோப்பையில் தனது வாய்ப்பை பிரகாசப்படுத்தியுள்ளார் விஜய் சங்கர். இந்த வெற்றிகுறித்து போட்டிக்குப்பின் பேசிய விஜய் சங்கரிடம், உலகக்கோப்பை அணியில் இடம் பெறுவது குறித்து கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், ``நான் ஏற்கெனவே கூறியதுதான். உலகக்கோப்பை தேர்வு குறித்து ஒருபோதும் சிந்திக்கவில்லை. ஏனென்றால் உலகக்கோப்பைக்கு இன்னும் நிறைய காலம் உள்ளது. எல்லா போட்டிகளும் முக்கியமானதுதான். என்னைப் பொறுத்தவரை, என்னுடைய பெஸ்ட்டைக் கொடுத்து அணியை வெற்றிபெறவைக்க வேண்டும் என்பதே என் எண்ணம். உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் நிதாஹஸ் டிராபி எனக்கு நிறையவே கற்றுக்கொடுத்தது. 

விஜய்

அந்தத் தொடருக்குப் பின் எப்படி நடுநிலையுடன் இருப்பது என்பதைக் கற்றுக்கொண்டேன். வெற்றியோ தோல்வியோ விமர்சனமோ கொண்டாட்டமோ எது வந்தாலும் நடுநிலையுடன் இருக்க வேண்டும் என்பதை உணர்ந்துகொண்டேன். இந்தப் போட்டியில் 43 அல்லது 44வது ஓவருக்குப் பிறகு நான் பந்துவீசுவேன் எனத் தெரியும். அதனால் சவாலுக்கு ரெடியாகவே இருந்தேன். எனக்குத் தெரியும் வெற்றிக்கு நான் வீசப்போகும் ஓவர் முக்கியம் என்று. அநேகமாக அது கடைசி ஓவராக இருக்கலாம் என்பதால் நான் மனதளவில் ஏற்கெனவே தயாராக இருந்தேன். 48 ஓவர் முடிந்த பிறகு பும்ரா என்னிடம் வந்து சில ஐடியாக்களை கூறினார். 

விஜய்

`சரியான லென்த்தில் பந்துவீசினால் போதும் விக்கெட் விழும்' என அவர் கூறியதுபோலவே ரன்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றே பந்துவீசினேன். விக்கெட்டும் விழுந்துவிட்டது. கடைசி ஓவரில் இரண்டு விக்கெட் எடுத்ததற்காக ஓவர் ரியாக்ட் செய்ய விரும்பவில்லை. இந்தத் தருணத்தில் அதை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன். நான் அந்த தருணத்தை அனுபவிக்க முயற்சி செய்கிறேன். இன்னும் முன்னோக்கிச் செல்ல வேண்டும் அவ்வளவு தான்" எனக் கூறினார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close