``உலகக்கோப்பை நெருங்குகிறது. இனிமேலும் தோற்கக் கூடாது!’’ - எச்சரிக்கும் விராட் #INDvAUS | India vs Australis 3rd ODI match report

வெளியிடப்பட்ட நேரம்: 12:22 (09/03/2019)

கடைசி தொடர்பு:12:55 (09/03/2019)

``உலகக்கோப்பை நெருங்குகிறது. இனிமேலும் தோற்கக் கூடாது!’’ - எச்சரிக்கும் விராட் #INDvAUS

``உலகக்கோப்பை நெருங்குகிறது. இனிமேலும் தோற்கக் கூடாது!’’ - எச்சரிக்கும் விராட் #INDvAUS

நாக்பூர் போட்டியில், விராட் கோலியின் 40-வது சதம் இந்திய அணிக்கு வெற்றியைத் தந்தது. ராஞ்சியில் நேற்று நடந்த மூன்றாவது ஒரு நாள் போட்டியிலும் வென்று இந்திய அணி தொடரை கைப்பற்றும் என்று எதிர்பார்த்த நிலையில், ஆஸ்திரேலியா பதிலடிகொடுத்துள்ளது. இந்த முறை, கேப்டன் கோலியின் சதம் வீணானது. இந்தியாவின் ‘ஒன் மேன் ஆர்மி’யை வென்ற ஆஸ்திரேலியா, முதல் வெற்றியைப் பதிவுசெய்துள்ளது. #INDvAUS

டாஸ் வென்று ஃபீல்டிங்கைத் தேர்வுசெய்தது இந்திய அணி. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியாவின் ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் ஆரன் ஃபின்ச் (93), உஸ்மான் கவாஜா (104) வெளுத்துவாங்க, முதல் விக்கெட்டுக்கு 193 ரன்கள் சேர்த்தனர். இந்தியாவுக்கு எதிரான போட்டிகளில், முதல் விக்கெட்டுக்கு அதிக ரன்கள் சேர்த்த கூட்டணியின் ஃபின்ச் - கவாஜா ஜோடி மூன்றாவது இடத்தைப் பிடித்தது.

ரன்கள் கூட்டணி  இடம்  ஆண்டு
231 ஆரன் ஃபின்ச் - டேவிட் வார்னர் பெங்களூரு  2017
212 டேவிட் பூன் - ஜியாஃப் மார்ஷ் ஜெய்ப்பூர் 1986
193 ஆரன் ஃபின்ச் - உஸ்மான் கவாஜா ராஞ்சி 2019

17 ரன்கள் எடுத்திருந்தபோது, தவான் தவறவிட்ட கேட்ச்சுக்குப் பிறகு, 11 பவுண்டரிகள், 1 சிக்சர் விளாசிய கவாஜா, ஒரு நாள் போட்டிகளில் தனது முதல் சதத்தைப் பதிவுசெய்தார். பேட்டிங்குக்கு சாதகமான பிட்ச்சில், இந்திய அணி பெளலர்களால் விக்கெட் எடுக்க முடியவில்லை.  அசத்தலான ஓப்பனிங் கொடுத்த ஆஸ்திரேலியா, 350 ரன்கள் எடுக்கும் என்று எதிர்பார்த்தபோது, ஃபின்ச், கவாஜா பார்ட்னர்ஷிப்பை உடைத்தார் குல்தீப் யாதவ். எனினும், 7 ரன்களில் சதத்தை நழுவவிட்ட ஃபின்ச், மீண்டு ஃபார்முக்கு வந்துள்ளது ஆஸ்திரேலியாவுக்கு பலம்.

ஷமி பந்துவீசிய ஷார்ட் பாலை அடித்த கவஜா, மிட் விக்கெட்டில் இருந்த பும்ராவின் கைகளை எட்டியது. கவாஜாவின் விக்கெட்டுக்கு பிறகு, தோனி, ஜடேஜாவின் முயற்சியால் மேக்ஸ்வெல் (47) ரன்-அவுட்டானார். குல்தீப் பந்துவீச்சில், ஷான் மார்ஷ், ஹேண்ட்ஸ்காம்ப் விக்கெட்டுகளை பறிகொடுக்க, 50 ஓவர் முடிவில், 5 விக்கெட் இழப்பிற்கு 313 ரன்கள் எடுத்தது ஆஸ்திரேலிய அணி.

#INDvAUS

314 ரன்களை சேஸ் செய்த இந்திய அணி, 48.2 ஓவரில் 281 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. இந்த போட்டியிலும் ரோஹித் ஷர்மா, தவான் கூட்டணி சொதப்ப, கேப்டன் கோலியை நம்பியது இந்திய அணி. 15-2 என்று தடுமாறிய இந்திய அணியின் ஸ்கோரை ஒற்றை ஆளாய் நின்று காப்பாற்றினார் கோலி. ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களை சமாளித்து 16 பவுண்டரிகள், 1 சிக்சர் என வெறும் 93 பந்துகளில் 123 ரன்கள் விளாசிய கோலி மட்டுமே, இந்திய ரசிகர்களுக்கான ஒரே ஆறுதல்.

ஆஸ்திரேலிய லெக் ஸ்பின்னர் ஜம்பாவின் மாயாஜாலத்தில் இந்தியாவின் மிடில் ஆர்டர் சரிந்தது. தோனி (26), ஜாதவ் (26) சோபிக்காத நிலையில், கோலி உடன் விஜய் சங்கர் மட்டும் (32) கைகொடுத்தார். இந்திய அணியின் டாப் ஆர்டரே பல போட்டிகளை வெற்றிக்கு அழைத்துச் சென்றபோது, மிடில் ஆர்டர் மட்டுமே குழப்பத்தில் இருந்தது. உலகக்கோப்பை நெருங்கும் நேரத்தில் கேப்டன் கோலியைத் தவிர மற்றவர்கள் ஃபார்மில்லாமல் திணறுவது நல்லதல்ல. 

“இன்னிங்ஸ் தொடக்கத்திலேயே விக்கெட்டுகள் சரிவதை எந்த அணியும் விரும்பாது. இரண்டு விக்கெட்டுகளுக்கு பிறகும், சமாளிக்கக் கூடிய பார்ட்னர்ஷிப் கொண்டு விளையாடினோம். ஆனால், சிறப்பாக விளையாடுவதற்கான வாய்ப்பை இழந்த வீரர்கள் அடுத்து வரும் போட்டிகளை பயன்படுத்திக் கொள்ள முயற்சி செய்வார்கள். பேட்டிங்கைப் பொறுத்தவரை இந்த இன்னிங்ஸ் என்னுடைய சிறப்பான ஆட்டங்களில் ஒன்று. உலகக்கோப்பை நெருங்குகிறது. இனிமேலும் தோற்கக் கூடாது. இங்கிலாந்துக்கு ஃப்ளைட் ஏறும் முன், இந்திய அணி சிறப்பான வெற்றிகளைப் பெற வேண்டும்” என்றார்.

#INDvAUS

ஜம்பா வீசிய 37-வது ஓவரில், முதல் பந்தில் அழகான கவர் ட்ரைவ் பவுண்டரி. அடுத்த பந்தில் மிட் விக்கெட்டில் பவுண்டரி சென்றது. ஆனால், மூன்றாவது பந்து கூக்ளி. பந்தைத் தட்டி மிட் விக்கெட் அனுப்ப முயற்சித்த கோலிக்கு ஏமாற்றம். பேட்டைத் தாண்டி சென்ற பந்து, ஸ்டம்ப்ஸானது. கோலி, தோனி, ஜாதவ் என இந்திய அணியின் பேட்ஸ்மேன்களை பெவிலியனுக்கு அனுப்பிய ஜம்பா ஆட்ட நாயகன் விருதைப் பெற்றார்.

52 பந்துகளில் முதல் 50, 33 பந்துகளில் அடுத்த 50. போட்டி கைநழுவி போகும்போதெல்லாம், கோலியின் ஆட்டம் வெறியாகவே இருந்துள்ளது. கேப்டனின் ஆட்டத்தை மட்டுமே நம்பியிருக்கும் இந்திய அணியில், மற்ற பேட்ஸ்மேன்களும் அதிரடியில் இறங்க வேண்டிய கட்டாயம் உள்ளது.இன்னும் இரண்டு போட்டிகள் உள்ள நிலையில், இந்திய பேட்ஸ்மேன்கள் சுதாரித்து கொண்டால் மட்டுமே, உலகக்கோப்பை கனவு நனவாகும்.


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close