`கிரிக்கெட்டை அரசியலாக்குகின்றனர்!’ - இந்திய அணிக்கெதிராக பாகிஸ்தான் புகார் | Pakistan minister urges PCB to file complaint against Indian cricket team

வெளியிடப்பட்ட நேரம்: 16:20 (09/03/2019)

கடைசி தொடர்பு:16:32 (09/03/2019)

`கிரிக்கெட்டை அரசியலாக்குகின்றனர்!’ - இந்திய அணிக்கெதிராக பாகிஸ்தான் புகார்

ஆஸ்திரேலிய அணிக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில், ராணுவத் தொப்பி அணிந்து விளையாடிய இந்திய அணிமீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாகிஸ்தான் வலியுறுத்தியுள்ளது. 

இந்திய அணி

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி, ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நேற்று நடைபெற்றது. இந்தப் போட்டியில், முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 313 ரன்கள் குவித்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி, 281 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால், 32 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வென்றது. 

இந்தப் போட்டியின்போது, புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக, இந்திய ராணுவத்தின் தொப்பியை அணிந்து இந்திய வீரர்கள் விளையாடினர். மேலும், நேற்றைய போட்டியின் ஊதியத்தையும் புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் குடும்பங்களுக்கு வழங்குவதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டது. அதேபோல், ஒவ்வோர் ஆண்டும் ஏதேனும் ஒருநாள் தொடரில் ஒரு போட்டியின்போது, ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும்விதமாக இந்த நடைமுறை கடைபிடிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. 

பாகிஸ்தான் அமைச்சர் ஃபவாத் சௌத்ரி

இந்த நிலையில், ராணுவத் தொப்பி அணிந்து விளையாடியதன் மூலம் கிரிக்கெட் போட்டிகளில் அரசியலைப் புகுத்துவதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டியிருக்கிறது. இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள பாகிஸ்தானின் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஃபவாத் சௌத்ரி, `இது கிரிக்கெட்டே அல்ல. கிரிக்கெட் போட்டிகளை அரசியலாக்கியதற்காக ஐசிசி உரிய நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறேன். இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதை இந்திய கிரிக்கெட் அணி நிறுத்தாவிட்டால், காஷ்மீரில் இந்தியா செய்துவரும் அத்துமீறல்களைக் கண்டித்து பாகிஸ்தான் வீரர்கள் கையில் கறுப்புப் பட்டை அணிந்து போட்டிகளில் பங்கேற்க வேண்டும். இதுதொடர்பாக உரிய முறையில் எதிர்ப்பைப் பதிவுசெய்யுமாறு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தைக் கேட்டுக்கொள்கிறேன்’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார். 

ஃபவாத் சௌத்ரியின் ட்வீட்

ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா பகுதியில் சிஆர்பிஎஃப் வீரர்கள் பயணித்த வாகனங்கள் து பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பான ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதி, கடந்த பிப்ரவரி 14-ம் தேதி தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தினார். இதில், சிஆர்பிஎஃப் வீரர்கள் 40 பேர் வீரமரணமடைந்தனர். இதையடுத்து, இரு நாடுகளுக்கிடையே பதற்றம் ஏற்பட்டது. பதில் தாக்குதலாக பாகிஸ்தானின் பால்கோட் பகுதியில் இருந்த ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதத் தளத்தின்மீது இந்திய விமானப் படை தாக்குதல் நடத்தியது. 

இதனால், சர்வதேச எல்லையை ஒட்டிய இந்திய நிலைகள்மீது பாகிஸ்தான் விமானப் படைகள் தாக்குதல் நடத்த முற்படவே, இந்தியா தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டது. இதில், பாகிஸ்தானின் எஃப் 16 ரக விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டது. அதேபோல், மிக் 21 பைசான் ரக விமானம் ஒன்றை இந்தியா இழந்தது. இதில் பயணித்த விமானி அபிநந்தன், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தரையிறங்கவே, அவரை அந்நாட்டு ராணுவம் சிறைபிடித்தது. பின்னர், அவரை இந்தியாவிடம் பாகிஸ்தான் ஒப்படைத்தது. இதையடுத்து, இருநாடுகளுக்கிடையிலான பதற்றம் சற்றே தணிந்திருக்கிறது. 

இந்த நிலையில் இந்திய வீரர்கள், ராணுவத்தின் தொப்பி அணிந்து கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியதுகுறித்து பாகிஸ்தான் கேள்வி எழுப்பியிருக்கிறது.  


[X] Close

[X] Close