மகப்பேறு முடிந்து களத்துக்கு திரும்பிய லியு ஹாங் - மீண்டும் ஓர் உலக சாதனை படைத்து அசத்தல்! | China's star race walker Liu Hong breaks 4-hour to set women's 50km race walk world record

வெளியிடப்பட்ட நேரம்: 07:00 (10/03/2019)

கடைசி தொடர்பு:07:00 (10/03/2019)

மகப்பேறு முடிந்து களத்துக்கு திரும்பிய லியு ஹாங் - மீண்டும் ஓர் உலக சாதனை படைத்து அசத்தல்!

லியு ஹாங்

சீனாவின் ஹுவாங்ஷான் நகரில் சீனா நடைபோட்டி கிராண்ட் பிரிக்ஸ் சாம்பியன் ஷிப் நடைபெற்றது. ஆடவர், பெண்கள் என இரண்டு பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் பெண்களுக்காக 50 கி.மீ நடைப்போட்டியில் சீன வீராங்கனையும் 2016 ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றவருமான லியு ஹாங் பங்கேற்றார். போட்டியின் ஆரம்பம் முதலே லியு ஹாங் முன்னிலை வகித்தார். இவர் பந்தய இலக்கை 3 மணி நேரம் 59 நிமிடம் 15 விநாடிகளில் கடந்து சாதனை படைத்தார். 50 கி.மீ நடைப்போட்டியில் பந்தய இலக்கை 4 மணி நேரத்திற்குக் குறைவாக கடந்த முதல் வீராங்கனை என்ற சிறப்பை லியு ஹாங் பெற்றார். 

லியு ஹாங் மகப்பேறு முடிந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு போட்டி களத்திற்கு திரும்பியுள்ளார். அதுவும் மூன்றாவது பந்தயத்திலே இந்த இலக்கை எட்டிப்பிடித்து சாதனை படைத்துள்ளார். இதற்கு இவரின் தீவிரமான பயிற்சியே காரணமாக இருந்து வந்துள்ளது. லியு ஹாங்கிற்கு கடந்த 2017-ம் ஆண்டு நவம்பர் மாதம் குழந்தை பிறந்தது. இதன்பிறகு அவரது உடல் எடையும் அதிகரித்தது. சீன வழக்கத்தின் படி மகப்பேறு காலத்திற்கு பிறகு பெண்கள் முடிந்த வரை நன்கு ஓய்வு எடுக்க வேண்டும்.  இதன் காரணமாக குழந்தை பிறந்த 6 மாத காலம் முழுமையான ஓய்வில் இருந்தார். அதன்பிறகே மீண்டும் தனது பயிற்சியைத் தொடங்கினார். லியு ஹாங் கணவர் மற்றும் குடும்பத்தினர் இவருக்கு உறுதுணையாக இருந்து வருகின்றனர். குழந்தையை அவர்கள் பராமரித்து வருகின்றனர். இதனையடுத்து போட்டி களத்திற்குத் திரும்பியவர். தனது இலக்கை நோக்கிப் பயணிக்க ஆரம்பித்தார்.

குழந்தையுடன் லியு ஹாங்

பெண்கள் 20 கி.மீ நடைபோட்டியில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். 2016-ல் நடந்த ரியோ ஒலிம்பிக் போட்டியில் பெண்களுக்கான 20 கி.மீ நடைபோட்டியில் தங்கம் வென்றுள்ளார். அதற்கு ஓராண்டுக்கு முன்பே ஸ்பெனியில் நடந்த போட்டில் பந்தய தூரத்தை 1 மணி, 24 நிமிடம், 38 விநாடிகளில் கடந்து உலக சாதனை படைத்து விட்டார். உலகிற்குத் தன்னை நிரூபித்து விட்டுத் தான் ஒலிம்பிக் போட்டிக்கே வந்தார். 

ரியோ ஒலிம்பிக்கில் தங்கம்


இந்நிலையில்தான் 50 கி.மீ நடைபோட்டியில் தனது கவனத்தைத் திருப்பினார் லியு. இந்தக்களத்தில் நிறைய வீராங்கணைகள் இருப்பதால் லியு ஹாங் சற்று கடினமாகச் சவால்கள் காத்திருந்தன. மற்றோரு  சீன வீராங்கனை லியாங் ரூப் 50 கி.மீ நடைப்போட்டியில் சவால் விடுக்கும் வீராங்கனையாக இருந்து வந்தார். ஏனெனில் கடந்தாண்டு நடைபெற்ற சீனா நடைபோட்டி கிராண்ட் பிரிக்ஸ் சாம்பியன் ஷிப்  லியாங் பந்தய தூரத்தை 4 மணி நேரம், 04 நிமிடம், 36 விநாடிகளில் கடந்து இருந்தார். இதுதான் இதுவரை உலக சாதனையாக இருந்தது. இதனை தற்போது லியு ஹாங் முறியடித்துள்ளார்.


[X] Close

[X] Close