சதமடித்த கவாஜா; மிடில் ஆர்டரை மிரட்டிய பவுலர்ஸ் - தொடரை வெல்ல இந்தியாவுக்கு 273 ரன்கள் இலக்கு! | Australia scored 272 runs against india in 5th odi

வெளியிடப்பட்ட நேரம்: 17:12 (13/03/2019)

கடைசி தொடர்பு:17:34 (13/03/2019)

சதமடித்த கவாஜா; மிடில் ஆர்டரை மிரட்டிய பவுலர்ஸ் - தொடரை வெல்ல இந்தியாவுக்கு 273 ரன்கள் இலக்கு!

இந்திய அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா 272 ரன்களை சேர்த்துள்ளது. 

கவாஜா

ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற டி20 தொடரில் ஆஸ்திரேலிய அணி 2-0 என்ற கணக்கில் வெற்றிபெற்றது. இந்தியாவில் நடைபெறும் தொடரில் ஆஸ்திரேலியா டி20 தொடரைக் கைப்பற்றியது இந்திய ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதன் பின்னர் தொடங்கிய ஒருநாள் தொடரின் முதல் இரண்டு போட்டியில் வெற்றிபெற்ற இந்தியா 2-0 என முன்னிலை வகித்தது. ஆனால், யாரும் எதிர்பாராத வகையில் அடுத்த இரு போட்டிகளிலும் ஆஸ்திரேலியா வெற்றிபெற்று 2-2 எனத் தொடர் சமநிலையில் இருக்கும் நிலையில், தொடர் யாருக்கு என்பதை முடிவு செய்யும் 5-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று தலைநகர் டெல்லி மைதானத்தில் தொடங்கியது.

ஆஸ்திரேலியா

இந்திய அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஷமி மற்றும் ஜடேஜா அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். ராகுல் மற்றும் சஹால் நீக்கப்பட்டனர். இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் பின்ச் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். அதன்படி ஆஸ்திரேலிய அணிக்கு கவாஜா மற்றும் ஆரோன் பின்ச் தொடக்கம் கொடுத்தனர். கவாஜா ஒருபுறம் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த, 15-வது ஓவரில், ஜடேஜாவின் பந்தில் போல்டாகி ஃபின்ச் 27 ரன்களுடன் வெளியேறினார்.

இந்திய அணி

 

அடுத்ததாக களமிறங்கிய பீட்டர் ஹென்ஸ்கம், கவாஜாவுக்கு ஓரளவு கைகொடுத்து ஆடினார். இருவரும் இணைந்து அணியின் ஸ்கோரை 32 ஓவரில் 174 ரன்கள் வரை எடுத்துச் சென்றனர். இருவரையும் பிரிக்க முடியாமல் இந்திய பந்துவீச்சாளர்கள் தடுமாறினர். கவாஜா 100 ரன்களை எடுத்து அணிக்கு பக்கபலமாக திகழ்ந்தார்.  கவாஜாவின் அதிரடிக்கு முற்றிப்புள்ளி வைத்தது புவனேஸ்குமாரின் பந்துவீச்சு. விராட்கோலியிடம்  கேட்ச் கொடுத்து வெளியேறினார் அவர். பின்னர் களமிறங்கிய மேக்ஸ்வெல் பெரிதாக ரன் எதுவும் சேர்க்கமால் நடையைக் கட்டினார்.

அடுத்து ஹென்ஸ்கம் வெளியேற, 37 ஓவர்களில் 4 விக்கெட்டை இழந்து 188 ரன்களைச் சேர்த்து தடுமாறியது. தொடர்ந்து ரன் ரேட்டை இந்திய பந்துவீச்சாளர்கள் கட்டுப்படுத்தினர். கடந்த ஆட்டத்தில் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த டர்னர் 20 ரன்களிலும், மார்கஸ் 20 ரன்களிலும் அலெக்ஸ் கேரி 3 ரன்களை எடுத்து வந்த வேகத்தில் வெளியேறினர். இந்திய பந்துவீச்சாளர்களை சமாளிக்க முடியாமல், ஆஸ்திரேலியா அணி சீட்டுக்கட்டாக சரியத்தொடங்கியது. 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 272 ரன்களை குவித்தது ஆஸ்திரேலியா. இந்திய அணி தரப்பில் புவனேஸ்குமார் 3 விக்கெட்டுகளையும், ஷமி, ஜடேஜா தலா 2 விக்கெட்டையும், குல்தீப் யாதவ் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.


[X] Close

[X] Close