நான்கு ஆண்டுகளுக்குப்பிறகு கோப்பையை தாரை வார்த்த இந்தியா - ஒருநாள் தொடர் ஆஸ்திரேலியா வசம்! | Australia won the series against india

வெளியிடப்பட்ட நேரம்: 21:13 (13/03/2019)

கடைசி தொடர்பு:21:35 (13/03/2019)

நான்கு ஆண்டுகளுக்குப்பிறகு கோப்பையை தாரை வார்த்த இந்தியா - ஒருநாள் தொடர் ஆஸ்திரேலியா வசம்!

இந்தியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா அணி வெற்றிபெற்றது. இதன் மூலம்  3-2 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை வென்றது ஆஸ்திரேலியா.

ரோஹித் ஷர்மா

ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற டி20 தொடரில் ஆஸ்திரேலிய அணி 2-0 என்ற கணக்கில் வெற்றிபெற்றது. இந்தியாவில் நடைபெறும் தொடரில் ஆஸ்திரேலியா டி20 தொடரைக் கைப்பற்றியது இந்திய ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதன் பின்னர் தொடங்கிய ஒருநாள் தொடரின் முதல் இரண்டு போட்டியில் வெற்றிபெற்ற இந்தியா 2-0 என முன்னிலை வகித்தது. ஆனால் யாரும் எதிர்பாராத வகையில், அடுத்த இரு போட்டிகளிலும் ஆஸ்திரேலியா வெற்றிபெற்று 2-2 எனத் தொடர் சமநிலையில் இருக்கும் நிலையில், தொடர் யாருக்கு என்பதை முடிவு செய்யும் 5-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று தலைநகர் டெல்லி மைதானத்தில் தொடங்கியது. இந்திய அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டன. ஷமி மற்றும் ஜடேஜா அணியில் சேர்க்கப்பட்டு ராகுல் மற்றும் சஹால் நீக்கப்பட்டனர். 

ஆஸ்திரேலியா

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் பின்ச் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். அதன்படி ஆஸ்திரேலிய அணிக்கு கவாஜா மற்றும் ஆரோன் பின்ச் தொடக்கம் கொடுத்தனர். கவாஜா ஒருபுறம் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த, 15-வது ஓவரில், ஜடேஜாவின் பந்தில் போல்டாகி ஃபின்ச் 27 ரன்களுடன் வெளியேறினார். அடுத்ததாக களமிறங்கிய பீட்டர் ஹென்ஸ்கம், கவாஜாவுக்கு ஓரளவு கைகொடுத்து ஆடினார். இருவரும் இணைந்து அணியின் ஸ்கோரை 32 ஓவரில் 174 ரன்கள் வரை எடுத்துச் சென்றனர். இருவரையும் பிரிக்க முடியாமல் இந்திய பந்துவீச்சாளர்கள் தடுமாறினர்.

கவாஜா 100 ரன்களை எடுத்து அணிக்கு பக்கபலமாக திகழ்ந்தார். கவாஜாவின் அதிரடிக்கு முற்றிப்புள்ளி வைத்தது புவனேஸ்குமாரின் பந்துவீச்சு. விராட்கோலியிடம்  கேட்ச் கொடுத்து வெளியேறினார் அவர். பின்னர் களமிறங்கிய மேக்ஸ்வெல் பெரிதாக ரன் எதுவும் சேர்க்கமால் நடையைக் கட்டினார். அடுத்து ஹென்ஸ்கம் வெளியேற, 37 ஓவர்களில் 4 விக்கெட்டை இழந்து 188 ரன்களைச் சேர்த்து தடுமாறியது. தொடர்ந்து ரன் ரேட்டை இந்திய பந்துவீச்சாளர்கள் கட்டுப்படுத்தினர். கடந்த ஆட்டத்தில் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த டர்னர் 20 ரன்களிலும், மார்கஸ் 20 ரன்களிலும் அலெக்ஸ் கேரி 3 ரன்களை எடுத்து வந்த வேகத்தில் வெளியேறினர். இந்திய பந்துவீச்சாளர்களை சமாளிக்க முடியாமல், ஆஸ்திரேலியா அணி சீட்டுக்கட்டாக சரியத்தொடங்கியது. 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 272 ரன்களை குவித்தது ஆஸ்திரேலியா.

புவனேஸ்வர் குமார்

இந்திய அணி தரப்பில் புவனேஸ்குமார் 3 விக்கெட்டுகளையும், ஷமி, ஜடேஜா தலா 2 விக்கெட்டையும், குல்தீப் யாதவ் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். 273 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் இன்னிங்ஸை ரோஹித், தவான் தொடங்கினர். நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த இணை 4-வது ஓவரிலே கம்மின்ஸ் பிரித்தார். 12 ரன்களில் வெளியேறினார் தவான். கோலி மைதானத்துக்குள் வர ஆட்டம் சற்று சூடுபிடிக்க ஆரம்பித்தது. ஆனால், அது நீண்ட நேரம் நீடிக்கவில்லை. ஸ்டோனிஸ் பந்தில் கீப்பருக்கு கேட்ச் போக, அதை அலெக்ஸ் கேரி லாவகமாக பிடித்தார்.

ஆஸ்திரேலியா

20 ரன்களில் நடையைக் கட்டினார் கோலி. ஒருபுறம் ரோஹித் நிலைத்து ஆட, எதிர்புறம் களமிறங்கிய வீரர்கள் பெரிய அளவில் ரன்களை சோபிக்கவில்லை. 28 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 132 ரன்களை சேர்ந்திருக்க இந்திய அணிக்கு, நம்பிக்கையாக விளங்கிய ரோஹித் ஷர்மா, ஜம்பா பந்துவீச்சில் எதிர்பாராத விதமாக ஸ்டெம்பிங் மூலம் அவுட் ஆனார். அதே ஓவரில் ஜடேஜாவையும், ஜம்பா வெளியேற்ற, 132 ரன்களில் 6 விக்கெட்டை இழந்து  இந்திய அணி தள்ளாடியது. தொடர்ந்து களமிறங்கிய கேதர் ஜாதவ், புவனேஸ்வர் குமார் இணை, ரன்களை சேர்க்க பெரும் உதவியாக இருந்தது. 223 ரன்கள் வரை இழுத்துச்சென்ற இருவரும் அடுத்தடுத்து வெளியேறியது ஏமாற்றமளித்தது. தொடர்ந்து களமிறங்கிய வீரர்கள் பெரிய அளவில் ரன்களை சோபிக்காததால், அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இந்திய அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியைத் தழுவியது.

ஆஸ்திரேலியா அணி தரப்பில் ஜம்பா அதிபட்சமாக 3 விக்கெட்டுகளையும், கம்மின்ஸ், ரிச்சர்ட்ஸ்சன் தலா 2 விக்கெட்டுகளையும், ஸ்டோனிஸ், லையன் தலா 1 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 2015-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி 4 ஆண்டுகளாக கோப்பையை தன் வசம் வைத்துள்ளது. இந்நிலையில் இந்த தொடரின் தோல்வி மூலம் தற்போது கோப்பை ஆஸதிரேலியாவுக்குச் செல்கிறது.


[X] Close

[X] Close