இன்று தொடங்குகிறது ஐ.பி.எல் டிக்கெட் விற்பனை - மனிதச் சங்கிலி அமைத்து விடிய விடிய காத்திருந்த ரசிகர்கள் | IPL Match Ticket Sale will start in chennai from today

வெளியிடப்பட்ட நேரம்: 07:47 (16/03/2019)

கடைசி தொடர்பு:07:55 (16/03/2019)

இன்று தொடங்குகிறது ஐ.பி.எல் டிக்கெட் விற்பனை - மனிதச் சங்கிலி அமைத்து விடிய விடிய காத்திருந்த ரசிகர்கள்

ஐ.பி.எல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடங்குகிறது. ஆனால் நேற்று இரவிலிருந்தே ரசிகர்கள் டிக்கெட் வாங்க குவியத்தொடங்கினர்.

ஐபிஎல்

பெரும் எதிர்பார்ப்புக்குள்ளாகியுள்ள 2019-ம் ஆண்டுக்கான ஐ.பி.எல் திருவிழா சென்னையில் 23 -ம் தேதி கோலாகலமாக தொடங்க உள்ளது. அண்மையில் ஐ.பி.எல் தொடரின் முதல் 17 போட்டிகளின் அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டது. அதன்படி தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியை எதிர்கொள்கிறது. சென்னையில் தொடங்க உள்ளதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

இரவு முதல் ரசிகர்களின் வருகை

இதற்கான டிக்கெட் விற்பனை இன்று முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 11மணிக்கு விற்பனை செய்யப்பட உள்ள டிக்கெட்டுகளை வாங்க, நேற்று மாலை முதலே ரசிகர்கள் குவியத்தொடங்கினர். நேரம் செல்லச் செல்ல சேப்பாக்கத்தில் கூட்டம் அதிகரிக்கத்தொடங்கியது. 

மனித சங்கிலி

குறிப்பாக நேற்று மாலை 5 மணியிலிருந்தே ரசிகர்களின் வருகை ஆரம்பித்துவிட்டது. தாமதமாக வருபவர்கள் வரிசையின் நடுவே புகுந்துவிடக்கூடாது என்பதற்காக, முதலில் வந்திருந்தவர்கள் தங்களுக்குள்ளாகவே கைகளை கோத்துக்கொண்டு மனிதச் சங்கிலி போல் நின்றுகொண்டிருந்தனர். கூட்டத்தைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

 

ரசிகர்கள்

ஏப்ரல் 5-ம் தேதிவரை நடைபெறும் இந்தப் போட்டிகளில் 8 அணிகள் பங்கேற்கின்றன. இந்த 8 அணிகளும் தங்கள் சொந்த ஊர்களில் விளையாட உள்ளன. அதேபோல சென்னையில் நடக்கும் இரண்டாம் போட்டி வருகின்ற 31-ம் தேதி நடக்கிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி,  ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. விரைவில் மற்ற போட்டிகளுக்கான அட்டவணையை பிசிசிஐ வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

 

 

 

 


[X] Close

[X] Close