``கோலி ஆர்.சி.பி அணிக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்!” - மோசமான கேப்டன்ஷிப் குறித்து கம்பீர் | Gambhir talks about kohli

வெளியிடப்பட்ட நேரம்: 12:30 (19/03/2019)

கடைசி தொடர்பு:12:30 (19/03/2019)

``கோலி ஆர்.சி.பி அணிக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்!” - மோசமான கேப்டன்ஷிப் குறித்து கம்பீர்

இந்தியாவில் இந்தமுறை சம்மர் கொண்டாட்டத்துக்குப் பஞ்சமே இல்லை. தேர்தல் மற்றும் ஐ.பி.எல் என இரண்டு மெகா திருவிழாக்கள் ஒரே நேரத்தில் நடைபெறவுள்ளது. இப்போது இருந்தே ஐ.பி.எல் ஃபீவர் நாடு முழுவதும் பரவ தொடங்கியுள்ளது. சென்னை சேப்பாக்கத்தில் வீரர்களின் பயிற்சியைக் காண ஆயிரக்கணக்கில் ரசிகர்கள் கூடுகின்றனர். தொலைக்காட்சிகளில், மோதும் 8 அணிகளில் யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என விவாதங்கள் தொடங்கி அனல் பறக்கிறது.

கம்பீர் 

பிரபல ஸ்போர்ட்ஸ் சேனலான ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில், இந்திய அணியின் முன்னாள் வீரர் கம்பீர் கலந்துகொண்டு ஐ.பி.எல் தொடர்பாக பேசினார். அப்போது ஆர்.சி.பி அணியின் செயல்பாடு குறித்தும் கோலியின் கேப்டன்ஷிப் குறித்தும் விவாதிக்கப்பட்டது.  அப்போது கருத்து தெரிவித்த கம்பீர்,  ``கோலி இன்னும் நிறைய பயணிக்க வேண்டியுள்ளது. இன்னமும் அவரை நான் ஒரு சாதுரியமான கேப்டனாக பார்க்கவில்லை. ஐ.பி.எல் தொடரையும் தற்போது வரை வெல்லவில்லை. 

கோலி

தற்போது வரை முடிந்துள்ள ஐ.பி.எல் தொடர்களில் 3 முறை கோப்பை வென்ற கேப்டன்கள் இருக்கிறார்கள். தோனி, ரோகித் ஷர்மா ஆகியோர் இதைச் செய்திருக்கிறார்கள் . அதனால்தான் சொல்கிறேன், கோலி இன்னும் பயணப்பட வேண்டிய தூரம் இன்னும் அதிகம் இருக்கிறது . கேப்டன்ஷிப்பை பொறுத்தவரை நீங்கள் கோலியை தோனியுடனோ ரோகித்துடனோ ஒப்பிட முடியாது . 
கடந்த  7 - 8 ஆண்டுகளாகக் கோலி ஆர்.சி.பி அணியை வழிநடத்தி வருகிறார். அதற்காக அவர் ஆர்.சி.பி அணி நிர்வாகத்துக்கு நன்றி சொல்ல வேண்டும். அவர் கொஞ்சம் லக்கி என நான் நினைக்கிறேன். காரணம், இத்தனை ஆண்டுகள் ஓர் அணி நிர்வாகம் கோப்பை வெல்லாமல் ஒருவரையே கேப்டனாக வைத்துக்கொண்டு இருக்க மாட்டார்கள்” என்றார் . 

கம்பீர் - ஸ்ரேயஸ் ஐயர்

கடந்த ஐ.பி.எல் தொடரில் மோசமான தோல்விகள் காரணமாகத் தொடரின் பாதியில் கம்பீருக்குப் பாதியில் இளம் வீர ஸ்ரேயஸ் ஐயர் கேப்டனாக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அதிரடியான, டி 20 தொடருக்கான வீரர்கள் பலர் பெங்களூரு அணியில் இருந்தாலும் அந்த அணியால் இன்னும் கோப்பையை சொந்தமாக்கிக்கொள்ள முடியவில்லை. இதனால் கோலி தொடர்ந்து விமர்சனத்துக்குள்ளாகி வருகிறார். உலகக்கோப்பை தொடர் வருவதால், தன்னை கேப்டனாகவும் நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் கோலி.