பாலு பல்வாங்கர் - தீண்டாமையைத் தகர்த்த இந்தியாவின் முதல் தலித் கிரிக்கெட்டர்! | Balu Palwankar Who Demolish Untouchability By His Game

வெளியிடப்பட்ட நேரம்: 18:40 (19/03/2019)

கடைசி தொடர்பு:18:40 (19/03/2019)

பாலு பல்வாங்கர் - தீண்டாமையைத் தகர்த்த இந்தியாவின் முதல் தலித் கிரிக்கெட்டர்!

தேநீர் இடைவெளியின் போது பாலுவுக்கு அணியின் பிற வீரர்களுடன் தேநீர் வழங்கப்படவில்லை. மாறாக, அவருக்குப் பெவிலியனுக்கு வெளியே தனியாகத் தேநீர் வழங்கினார்கள். மற்றவர்கள் கண்ணாடிக் குவளைகளில் தேநீர் அருந்தினார்கள். பாலுவுக்கோ, வேறு வகையான குவளையில் தேநீர் கொடுக்கப்பட்டது.

பாலு பல்வாங்கர் - தீண்டாமையைத் தகர்த்த இந்தியாவின் முதல் தலித் கிரிக்கெட்டர்!

கர்நாடக மாநிலத்தில் ஒரு தாழ்த்தப்பட்ட குடும்பத்தில் 1876-ம் ஆண்டு மார்ச் 19 -ல் பிறந்தவர் பாலு பல்வாங்கர். பொருளாதாரக் காரணங்களுக்காக அவரது குடும்பம் மகாராஷ்டிர மாநிலம் புனேவுக்கு இடம் பெயர்ந்தது. ஏழ்மையின் காரணமாக பாலு பல்வாங்கர் சிறு வயதிலேயே வேலைக்குச் சென்றார். ஒரு கிரிக்கெட் மைதானத்தில் இருந்த பிட்சைப் பராமரிப்பதுதான் அவரது வேலை. மாதம் 3 ரூபாய் சம்பளம். பேட்ஸ்மேன்களுக்கு பந்து வீசும் வாய்ப்பும் அவருக்கு அடிக்கடி கிடைத்தது. 

பாலு

அப்படிக் கொஞ்சம் கொஞ்சமாகத் தன் ஆட்டத் திறனை மேம்படுத்திக்கொண்ட பாலு பல்வாங்கருக்கு, திருப்புமுனையாக அமைந்த ஆண்டு 1892. ஐரோப்பியர்களால் நடத்தப்பட்ட புனே கிரிக்கெட் கிளப்பில் வேலைக்குச் சேர்ந்தார் பாலு. அங்குதான் அவரது திறமை மிகச்சரியாக அடையாளம் காணப்பட்டது. இடதுகை பந்து வீச்சாளரான பாலுவின் பந்து வீசும் திறனைப் பார்த்த அந்த கிளப்பின் தலைவர் ஜே.ஜி கிரேக் , பாலுவுக்கு ஊக்கமளித்தார். ஜே.ஜி கிரேக் பாலுவுடன் விளையாடுவார். ஜே.ஜி கிரேக்கை பாலு ஆட்டமிழக்கச் செய்த ஒவ்வொரு முறையும், பாலுவுக்கு எட்டணா அன்பளிப்பாகக் கொடுப்பார்.

பல்வாங்கர்

ஒரு முறை புனேவில் இருந்த இந்து கிரிக்கெட் கிளப், ஐரோப்பியர்களின் கிரிக்கெட் கிளப்பை ஒரு போட்டியில் விளையாட அழைத்தார்கள். அந்தப் போட்டிக்கான `இந்து கிரிக்கெட்’ அணியில் பாலு பல்வாங்கரைச் சேர்த்துக் கொள்ளலாமா என ஆலோசிக்கப்பட்டது. அதற்குக் அவரது பந்து வீசும் திறனே காரணம். ஆனால், பாலு ஒரு தாழ்த்தப்பட்டவர் என்பதால் அவரை அணியில் சேர்த்துக் கொள்ள கடும் எதிர்ப்பு நிலவியது. இருந்தாலும் வேறு வழியில்லாமல் பாலு சேர்க்கப்பட்டார். தாழ்த்தப்பட்டவர்களை இந்து கோயில்களுக்குள் அனுமதிக்காத காலம் அது. அந்தக் காலத்திலேயே `இந்து கிரிக்கெட்’ கிளப்பில் பாலு பல்வாங்கர் இடம்பெற்றது ஒரு சாதனைதான். ஆனால், அந்தப் போட்டியின் போது அவர் அனுபவித்த அவலங்கள் தீண்டாமையின் உச்சம்.

தேநீர் இடைவெளியின் போது பாலுவுக்கு அணியின் பிற வீரர்களுடன் தேநீர் வழங்கப்படவில்லை. மாறாக, அவருக்கு பெவிலியனுக்கு வெளியே தனியாகத் தேநீர் வழங்கினார்கள். மற்றவர்கள் கண்ணாடிக் குவளைகளில் தேநீர் அருந்தினார்கள். பாலுவுக்கோ, வேறு வகையான குவளையில் தேநீர் கொடுக்கப்பட்டது. மதிய உணவும்கூட அவர் தனி மேசையில்தான் சாப்பிட வேண்டியிருந்தது. 

பல்வாங்கர்

முதல் போட்டியிலேயே தீண்டாமை கொடுமைகளை அனுபவித்த பாலு பல்வாங்கர், நடப்பதைப் பார்த்து துவண்டு விடவில்லை. தொடர்ந்து களத்தில் தன் திறமையை நிரூபித்தார். அவரது குடும்பம் பம்பாய்க்கு இடம் பெயர்ந்த பிறகு அவர் `இந்து ஜிம்கானா’ எனும் அணிக்காக விளையாடத் தொடங்கினார். 1906-ம் ஆண்டு அந்த அணிக்கும் ஐரோப்பிய அணிக்கும் இடையே நடந்த போட்டியில், பாலுவின் அணி 109 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. அந்தப் போட்டியில் பாலு வீழ்த்தியது 8 விக்கெட்டுகள்! அந்தப் போட்டிக்குப் பிறகு, பாலுவுக்கு ஏகபோக மரியாதை கொடுக்கப்பட்டது. அந்தக் கிரிக்கெட் கிளப்பில் சக வீரர்களுடன் சமமாகத் தேநீர் அருந்தவும், உணவு உண்ணவும் அனுமதிக்கப்பட்டார்.

அரசியல் இயக்கங்களும் தலைவர்களும் தீண்டாமைக்கு எதிராக மிகக் கடுமையாகப் போராடிய காலகட்டம் அது. தன் கிரிக்கெட்டைக் கொண்டே தீண்டாமையை வென்று காட்டினார் பாலு பல்வாங்கர்!


டிரெண்டிங் @ விகடன்