பஞ்சாப் அணியின் வெற்றி, தோல்வி யார் கையில்?! ஐ.பி.எல். ரவுண்ட் அப்! | Kings XI Punjab's play off chance solely depends on its skipper

வெளியிடப்பட்ட நேரம்: 13:57 (20/03/2019)

கடைசி தொடர்பு:14:27 (26/03/2019)

பஞ்சாப் அணியின் வெற்றி, தோல்வி யார் கையில்?! ஐ.பி.எல். ரவுண்ட் அப்!

12 வருட வரலாற்றில் ஒரு ஃபைனல், ஓர் அரையிறுதி. அவ்வளவே அந்த அணியின் அதிகபட்ச சாதனை. ஒவ்வொருமுறையும் ஸ்டார் வீரர்கள் இருந்தாலும், அவர்களை ஒரு குழுவாக இணைப்பதில், சரியான கெமிஸ்ட்ரியை ஏற்படுத்துவதில் சறுக்கிவிடுகிறது அந்த அணி. இந்த முறையாவது ஒரு டீமாக கிங்ஸ் லெவன் கிளிக் ஆகுமா?

பஞ்சாப் அணியின் வெற்றி, தோல்வி யார் கையில்?! ஐ.பி.எல். ரவுண்ட் அப்!

சுழல் மந்திரவாதிகளை வைத்து முதன்முறையாக ஐ.பி.எல் கோப்பையைக் கைப்பற்றும் முனைப்பில் இருக்கிறது அஷ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப். மீண்டும் ஒருமுறை பாதி அணியைக் குலைத்து, ஏலத்தில் சீட்டு குலுக்கி வீரர்கள் எடுத்துள்ளது அணி நிர்வாகம். அவர்களின் இந்த மாற்றங்கள் கோதுமை பாய்ஸுக்குக் கைகொடுக்குமா?

பேட்டிங்கைப் பொறுத்தவரை டாப் ஆர்டர் கொஞ்சம் பலமாகவே இருக்கிறது. கிறிஸ் கெய்ல் - இங்கிலாந்து தொடரில் அனைத்து பௌலர்களையும் அச்சுறுத்திவிட்டார். அவர் மீண்டும் ஃபார்முக்கு வந்திருப்பது, ஐ.பி.எல் தொடரில் மீண்டும் ஒன் மேன் ஷோக்களை நிகழ்த்தும். கெய்ல் - ராகுல் கூட்டணி கிளிக்கானால், எதிரணிகளின் நிலை அவ்வளவுதான். அதற்கடுத்து மயாங்க் அகர்வால், கருண் நாயர். மயாங்க் நல்ல ஃபார்மில் இருக்கிறார். ஒவ்வொரு முறையும் உள்ளூர் சீஸனில் சூறாவளியாய் சுழன்றுவிட்டு, ஐ.பி.எல் தொடரின்போது கரை கடந்துவிடுகிறார். இந்திய அணிக்கு அறிமுகமாகிவிட்ட நிலையில், அவர் தன்னைக் கட்டாயம் நிரூபித்தாகவேண்டியிருக்கிறது. 

கே.எல்.ராகுல்

டேவிட் மில்லர் ஐந்தாவது வீரராகக் களமிறங்குவார். அடுத்து மன்தீப் சிங். ஓரளவு அனுபவ மிடில் ஆர்டர் இருக்கிறது. ஆனால், இதில் யாருக்குமே சரியான பேக் அப் இல்லை என்பது கவலையளிக்கும் விஷயம். ஒவ்வொரு பிக் பேஷ் தொடரிலும் அசத்தும் மோய்சஸ் ஹென்ரிக்ஸ், இங்கு சோடை போகிறார். இந்திய வீரர்களில் சர்ஃபராஸ் கான், பிரப்சிம்ரன் சிங் போன்றவர்கள்தான் இருக்கிறார்கள். நிகோலஸ் பூரன் வேண்டுமானால் சில போட்டிகளில் கைகொடுக்கலாம்.

வேகப்பந்துவீச்சில் ஆண்ட்ரூ டை, முகமது ஷமி, அங்கித் ராஜ்புட் என நல்ல கூட்டணி இருக்கிறது. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த டி-10 லீகில் அசத்தலாகச் செயல்பட்டு, தொடர் நாயகன் விருது வென்ற ஹார்டஸ் விலியன் நல்ல தேர்வு. டை சரியாக ஆடாதபட்சத்தில் நம்பி களமிறக்கலாம். கிங்ஸ் லெவனின் மிகப்பெரிய ஆயுதமே அவர்களின் சுழல் கூட்டணிதான். ரவிச்சந்திரன் அஷ்வின், முஜீப் உர் ரஹ்மான், வருண் சக்ரவர்த்தி, முருகன் அஷ்வின் என சுழலில் அனைத்து ஆயுதங்களையும் பெற்றிருக்கிறது அந்த அணி. மாயச் சுழலால் அதிக தொகைக்குப் போன தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தி மீது எதிர்பார்ப்புகள் அதிகம் இருக்கும். 

கிங்ஸ் லெவன் பஞ்சாப்

சரியான ஆல்ரவுண்டர்கள் இல்லாதது இந்த அணியின் ஒரு மிகப்பெரிய பலவீனம். சாம் கரண், ஹென்ரிக்ஸ் இருவர் மட்டுமே சொல்லிக்கொள்ளும்படியான ஆல் ரவுண்டர்கள். ஆனால், சாம் கரண் இதுவரை டி-20 போட்டிகளில் பெரிய தாக்கம் ஏற்படுத்தியதில்லை. அதனால், சரியான பேலன்ஸ் கொண்ட பிளேயிங் லெவனைத் தேர்வு செய்வது கடினம். மில்லர் தொடக்க வாரத்தில் ஆடமாட்டார். அவர் இல்லாத மிடில் ஆர்டர் இன்னும் பலவீனம் அடையும். அதனால் கட்டாயம் ஆல்ரவுண்டர்கள் வேண்டும். அப்படியான நிலையில், அவர்கள் எத்தனை சுழற்பந்துவீச்சாளர்களைத் தேர்வு செய்ய முடியும்? இதற்கான பதிலை அவர்கள் சரியாகக் கண்டுபிடிக்கவேண்டும். அதைக் கண்டுபிடித்தால் எல்லாம் சரியாகிவிடுமா? நிச்சயம் இல்லை! 

முதல் 6 போட்டிகளில் 5 வெற்றி பெற்ற எந்த அணியும் பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்துவிடும். இல்லை, மிஞ்சிப்போனால் ரன்ரேட் அடிப்படையில் அடுத்த சுற்று வாய்ப்பை இழக்கும். ஆனால், கடந்த சீசனில், பஞ்சாப் அணி கடைசி 8 போட்டிகளில், ஏழு தோல்விகளைச் சந்தித்து ஏழாவது இடம் பிடித்து வெளியேறியது. கடைசி வரை அந்த அணியின் பேட்ஸ்மேன் ஒருவர் ஆரஞ்சு கேப் போட்டியில் இருந்தார். அந்த அணியின் பௌலர்தான் பர்ப்பிள் கேப் வென்றார். ஆனால், ஓர் அணியாக மொத்தமாகத் தோல்வியடைந்தது கிங்ஸ் லெவன். 

முஜீப் உர் ரஹ்மான்

12 வருட வரலாற்றில் ஒரு ஃபைனல், ஓர் அரையிறுதி. அவ்வளவே அந்த அணியின் அதிகபட்ச சாதனை. ஒவ்வொருமுறையும் ஸ்டார் வீரர்கள் இருந்தாலும், அவர்களை ஒரு குழுவாக இணைப்பதில், சரியான கெமிஸ்ட்ரியை ஏற்படுத்துவதில் சறுக்கிவிடுகிறது அந்த அணி. இந்த முறையாவது ஒரு டீமாக கிங்ஸ் லெவன் கிளிக் ஆகுமா... எல்லாம், கேப்டன் ரவிச்சந்திரன் அஷ்வின் கையில்தான் இருக்கிறது. 

கிங்ஸ் லெவனைப் பொறுத்தவரை ஓர் அணியாக அவர்களுக்கு சில சிக்கல்கள் இருக்கின்றன. தொடக்க காலத்தில் இருந்தே மொஹாலி, தரம்சாலா என வேறுவேறு மைதானங்களில் விளையாடிக்கொண்டிருந்ததால், சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இருப்பதுபோல் 'ஹோம் பேஸ்' அவர்களுக்குக்குச் சரியாக அமையவில்லை. இதுநாள் வரை அந்த அணிக்கான ஆதரவு யுவராஜ், சேவாக், கில்கிறிஸ்ட் போன்ற நட்சத்திர வீரர்களால் ஏற்பட்டதுதான். அப்படியாவது தங்களை நிலைநிறுத்திக்கொண்டார்களா என்றால் அதுவும் இல்லை. டேவிட் மில்லர் தவிர்த்து, எந்த வீரரும் இந்த அணியில் அதிக ஆண்டுகள் ஆடியதில்லை. அவரும் அணியில் நிரந்தர வீரர் இல்லை! இந்நிலையில், தங்கள் அணிக்கான ஒரு அடையாளத்தை நிறுவ வேண்டிய கட்டாயம் அந்த அணிக்கு இருக்கிறது. 

அங்கித் ராஜ்புட்

தொடர்ந்து தடுமாறும் ஓர் அணி, நிரந்தரமான ஒரு பிளேயிங் லெவனோடு களமிறங்குவது அவசியம். புள்ளிப் பட்டியலில் நல்ல நிலைமைக்கு வரும்வரை தொடர்ந்து வீரர்களை மாற்றாமல், பேட்டிங் ஆர்டரை மாற்றிக்கொண்டே இருக்காமல் இருப்பது நல்லது. ஆனால், அதற்கு அஷ்வினின் அணுகுமுறைகள் கைகொடுக்குமா என்பதுதான் மிகப்பெரிய கேள்வி. கடந்த ஆண்டு, ஐ.பி.எல் சீஸன் தொடங்குவதற்கு முன் ``எதிர்பாராத பல விஷயங்களை எதிர்பார்க்கலாம்" என்று கெத்தாக அறிவித்தார் அஷ்வின். அவரே மூன்றாவது பேட்ஸ்மேனாகக் களமிறங்கி அதிர்ச்சியளித்தார்.

சையது முஸ்தாக் அலி டி-20 தொடரில் இன்னும் வேறு விதமான யுக்திகளைக் கையாண்டார். அணியில் 'டாப் டூ பாட்டம்' அனைவரின் இடமும் மாறிக்கொண்டே இருந்தது. பேட்டிங் ஆர்டர் மாறாதவர்கள் சில போட்டிகளில் பென்சிலேயே அமர்ந்தனர். வாஷிங்டன் சுந்தர் எட்டாவது பேட்ஸ்மேனில் தொடங்கி, ஐந்து, மூன்று, ஓப்பனிங் என அனைத்து ஏரியாவிலும் விளையாடினார். ஒரு போட்டியில் அவரே நான்காவது வீரராகக் களமிறங்கினார். 

ரவிச்சந்திரன் அஷ்வின்

பந்துவீச்சிலும் அதேதான். யார் எப்படிப் பந்து வீசினாலும் சரி, தன் 4 ஓவர்களையும் வீசாமல் விடுவதில்லை அவர். அந்தத் தொடரில், தமிழ்நாடு 6 போட்டிகளில் விளையாட, 24 ஓவர்களையும் வீசிய ஒரே பௌலர் இவர் மட்டும்தான். அபிஷேக் தன்வார், வாஷிங்டன் சுந்தர், சாய் கிஷோர் போன்றவர்களின் எகானமி இதைவிடக் குறைவுதான். ஆனால், அவர்கள் எல்லா போட்டிகளிலும், முழுமையாகப் பந்துவீசவில்லை. கிங்ஸ் லெவன் போன்ற செட்டில் ஆகாத ஒரு அணியில் அஷ்வின் தன்னுடைய அதிரடி, அபூர்வ மாற்றங்கள் செய்துகொண்டிருந்தால், கடந்த ஆண்டின் கடைசியில் நடந்ததுபோல் தொடர் தோல்விகள்தான் மிஞ்சும். அஷ்வின் அப்படிச் செய்யாமல் இருப்பது அணிக்கு நல்லது. அவரது முடிவுகள்தான் பஞ்சாபின் பிளே ஆஃப் வாய்ப்பை நிர்ணயிக்கும். 

மும்பை இந்தியன்ஸ் பிரிவ்யூ: `கிரிக்கெட் ஃபீவரை ஜாலி மூடுக்கு மாற்றுமா மும்பை இந்தியன்ஸ்?’ 


டிரெண்டிங் @ விகடன்