``சச்சினுடனான உரையாடல்கள் தந்த புத்துணர்ச்சி!” - `ஸ்டைலிஷ் ப்ளேயர்’ யுவராஜ் #MIvDC | Delhi Capitals beat Mumbai Indians by 37 runs at Wankhede Stadium

வெளியிடப்பட்ட நேரம்: 09:00 (25/03/2019)

கடைசி தொடர்பு:09:00 (25/03/2019)

``சச்சினுடனான உரையாடல்கள் தந்த புத்துணர்ச்சி!” - `ஸ்டைலிஷ் ப்ளேயர்’ யுவராஜ் #MIvDC

யுவராஜ் சிங்

Photo Credits: iplt20.com

ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் இரண்டாம் நாளான நேற்று இரண்டு போட்டிகள் நடைபெற்றன. இதில் மும்பை இந்தியன்ஸ் - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதிய போட்டி வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற ரோஹித் ஷர்மா பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதன்படி முதலில் களமிறங்கிய டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 213 ரன்கள் குவித்தது. 13 ஓவர்களுக்குப் பிறகு களமிறங்கிய ரிஷப் பன்ட் ருத்ரதாண்டவம் ஆடினார். 27 பந்துகளைச் சந்தித்த ரிஷப் பன்ட் 78 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இவரது ஆட்டமே டெல்லி அணி மிகப்பெரிய ஸ்கோரைக் குவிக்க உதவியது.

இதன்பின்னர் களமிறங்கிய மும்பை வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இந்த ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காகக் களமிறங்கியுள்ள யுவராஜ் சிங் மட்டும் களத்தில் போராடிக்கொண்டிருந்தார். நேற்றைய போட்டியில் அவர் அடித்த சில ஷாட்கள் பழைய யுவியை ஞாபகப்படுத்துவதாக இருந்தது. நேற்றைய போட்டியின் ஸ்டைலிஷ் ப்ளேயர் விருதையும் அவர் வென்றார். அரைசதம் அடித்த யுவராஜ் விக்கெட்டை இழந்ததும் மும்பையின் கடைசி நம்பிக்கையும் போனது. முடிவில் மும்பை அணி 19.2 ஓவர்களில் 176 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன்மூலம் டெல்லி கேப்பிடல்ஸ் 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்தது. 

யுவராஜ் சிங்

Photo Credits: iplt20.com

போட்டிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய யுவராஜ் சிங், ``நான் பந்துகளை சந்தித்த விதம் மகிழ்ச்சியாக இருக்கிறது. 214 ரன்களை சேஸிங் செய்வது என்பது எளிமையான காரியமில்லை. எங்களிடம் நட்சத்திர பேட்ஸ்மேன்கள் இருந்ததால் அந்த இலக்கை அடைந்துவிடுவோம் என நம்பினோம். ரோஹித் சர்மா விரைவாக வெளியேறியது, சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த டி-காக் அவுட்டானது, பொல்லார்ட் விரைவிலே வெளியேறியது போன்றவை எங்களுக்குப் பாதமாக அமைந்தது. இந்தப் போட்டியில் ஒரு நல்ல பார்ட்னர் ஷிப் அமையவில்லை. 20 -30 ரன்கள் என்ற அளவிலே எங்கள் பார்ட்னர் ஷிப் இருந்தது. டெல்லி அணிக்குப் பந்துவீச்சு சிறப்பாக அமைந்தது. நாங்கள் வெற்றிபெறாதது வருத்தமளிக்கிறது.

ரிஷப் பண்ட்

Photo Credits: iplt20.com

டெல்லி பேட்ஸ்மேன் ரிஷப் பன்ட் சிறப்பாக விளையாடினார். கடந்தாண்டு அவருக்குச் சிறப்பான ஆண்டாக இருந்தது. டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சிறப்பாகச் செயல்பட்டார். 2 சதங்களை விளாசியுள்ளார். கடந்த இரண்டு வருடங்களாக என் வாழ்வில் பல்வேறு ஏற்றத் தாழ்வுகள் இருந்து வருகிறது. நான் கிரிக்கெட் விளையாடுவதை மிகவும் விரும்புகிறேன். சச்சின் உடனான உரையாடல்கள் எனக்குப் புத்துணர்ச்சியைத் தருகிறது. எனது ஆட்டத்துக்கும் அது பெரிதும் உதவுகிறது. தவறுகளிலிருந்து பாடம் கற்று வெற்றிபாதைக்குத் திரும்புவோம்” என்றார்.