முதல்போட்டியிலேயே பும்ராவுக்கு காயம் - முக்கிய வீரர்களுக்குக் கட்டுப்பாடு கொண்டுவருமா பிசிசிஐ? #IPL | Jasprit Bumrah Injury During Match Against Delhi Capitals

வெளியிடப்பட்ட நேரம்: 10:15 (25/03/2019)

கடைசி தொடர்பு:10:15 (25/03/2019)

முதல்போட்டியிலேயே பும்ராவுக்கு காயம் - முக்கிய வீரர்களுக்குக் கட்டுப்பாடு கொண்டுவருமா பிசிசிஐ? #IPL

பும்ரா

Photo Credits: iplt20.com

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இன்னும் சில தினங்களில் தொடங்க உள்ளது. இதில், இந்தியப் பந்துவீச்சாளர்களில் பும்ரா தான் எதிரணிக்கு அச்சுறுத்தலாக இருப்பார் என கிரிக்கெட் ஆலோசகர்கள் தெரிவித்துவருகின்றனர். டி-20 அணியில் இடம்பிடித்த பும்ரா, தற்போது மூன்று வகையான கிரிக்கெட் போட்டியிலும் இந்திய அணியின் பிரதான பந்துவீச்சாளராக உள்ளார். ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில், மும்பை அணிக்காக அவர் ஆடிவருகிறார். ஐபிஎல் போட்டியின்மூலம்தான் தேர்வாளர்களின் கவனத்தை ஈர்த்து தேசிய அணிக்குள் நுழைந்தார்.

மும்பை வான்கேடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. இந்தப் போட்டியில் 13 ஓவர்களுக்குப் பிறகு களமிறங்கிய ரிஷப் பண்ட் ருத்ரதாண்டவம் ஆடினார்.  இந்தப் போட்டியில் கடைசி ஓவரை பும்ரா வீசினார். இந்த ஓவரின் கடைசிப் பந்தை பும்ரா யாருக்காக வீசனார்? அந்தப் பந்தை ரிஷப் தடுத்து ஆட, பந்து பும்ராவுக்கு இடதுபுறமாகச் சென்றது. பந்தைப் பிடிக்கச்சென்ற பும்ரா, தடுமாறிக் கீழே விழுந்தார். தோள்பட்டையில் ஏற்பட்ட கடுமையான வலியால் பும்ரா துடித்தார். 

மும்பை அணியின் தரப்பில், பும்ராவுக்கு பெரிய அளவில் காயம் இல்லை, குணமடைந்துவிடுவார் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், போட்டியின் போது அவர் பேட்டிங் ஆட வரவில்லை. 214 என்ற இமாலய இலக்கை நோக்கி ஆடிய மும்பை அணி 19.2 ஓவர்களில் 176 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்தது. பும்ரா பேட்டிங் செய்யாமலே போட்டி முடித்துக்கொள்ளப்பட்டது. முதல் போட்டியிலேயே பும்ரா காயமடைந்தது மும்பை அணிக்கு பின்னடைவு ஏற்படுத்தியுள்ளது. உலகக்கோப்பை போன்ற மிகப்பெரிய தொடரின்போது பும்ராவுக்கு காயம் ஏற்பட்டால், அது இந்திய அணிக்கு மிகப்பெரிய இழப்பாக இருக்கும். 

உலகக்கோப்பை தொடரை கருத்தில்கொண்டு, ஐபிஎல் தொடரில் முக்கிய வீரர்களுக்கு கட்டுபாடு விதிக்க வேண்டும் என பல்வேறு தரப்பிலிருந்து பிசிசிஐ-க்கு கோரிக்கை வைக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது இந்தக் கோரிக்கை மீண்டும் வலுத்துள்ளது.  

கடந்த ஆண்டு, அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் கேட்ச் பிடிக்கும்போது பும்ராவுக்கு விரல்களில் காயம் ஏற்பட்டது. இதன்காரணமாக, இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் ஒருநாள் மற்றும் டி20 ஓவர்கள் கொண்ட போட்டிகளில் அவரால் பங்கேற்க முடியவில்லை.