19 பந்தில் 49 ரன்கள்... வார்னரின் கம்பேக்கை காலி செய்த ரஸல் மேஜிக்! #KKRvSRH | 49 Runs in 19 Balls.... Warner's Comback overshadowed by Russel's Magical Performance!

வெளியிடப்பட்ட நேரம்: 12:33 (25/03/2019)

கடைசி தொடர்பு:12:33 (25/03/2019)

19 பந்தில் 49 ரன்கள்... வார்னரின் கம்பேக்கை காலி செய்த ரஸல் மேஜிக்! #KKRvSRH

18 பந்துகளில் 53 ரன்கள் அடிக்கவேண்டும். சித்தார்த் கெளலின் 18வது ஓவரை பந்தாடினார் ரஸல். 2 சிக்ஸர், 1 பவுண்டரி என இந்த ஓவரில் மட்டும் 19 ரன்கள்.

19 பந்தில் 49 ரன்கள்... வார்னரின் கம்பேக்கை காலி செய்த ரஸல் மேஜிக்! #KKRvSRH

புவனேஷ்வர் குமார் கேப்டன், டேவிட் வார்னரின் கம்பேக் என ஐதராபாத் புது ஃபார்மில் களமிறங்க, அதிரடி மாற்றங்கள் எதுவும் இன்றி தினேஷ் கார்த்திக் தலைமையில் ஈடன் கார்டனில் களம் புகுந்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ். டாஸ் வென்ற தினேஷ் கார்த்திக், `ரஸல் இருக்க பயமேன்’ என சேஸிங்கைத் தேர்ந்தெடுத்தார். அவர் முடிவு இறுதியில் சரியானது... எப்படி?! #KKRvSRH

வார்னர் #KKRvSRH
 

வார்னரின் வேட்டை!
கிட்டத்தட்ட ஓராண்டுக்குப் பிறகு சர்வதேச அளவிலான போட்டியில் களமிறங்கிய டேவிட் வார்னர் முதல் மேட்சிலேயே மிரட்டினார். இவருடன் இங்கிலாந்தின் ஜானி பேர்ஸ்டோவும் இணைந்துகொள்ள, ஐதராபாத் ஆரம்பத்திலேயே ரன்களைக் குவிக்க ஆரம்பித்தது. பிரசித் கிருஷ்ணா, பியூஷ் சாவ்லாவின் பந்துகளை சிக்ஸருக்கும் பவுண்டரிக்கும் விரட்டினார் டேவிட் வார்னர். தினேஷ் கார்த்திக் செய்த பெளலிங் மாற்றங்களால் ஸ்கோர் போர்டில் எந்த மாற்றமும் நிகழவில்லை. வார்னர் அடித்து ஆட பேர்ஸ்டோவ் பொறுமையான ஆட்டம் ஆடிக்கொண்டிருந்தார். பவர் ப்ளேவின் முடிவில் 6 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 54 ரன்கள் எடுத்திருந்தது சன் ரைஸர்ஸ் ஐதராபாத். குல்தீப் யாதவின் சுழல்களை சுலபமாகச் சமாளித்தது வார்னர்-பேர்ஸ்டோவ் இணை. 31 பந்துகளில் சிக்ஸருடன் அரை சதத்தைக் கடந்தார் வார்னர். இது ஐபிஎல் போட்டிகளில் வார்னர் அடித்த 37-வது அரைசதம்.  

#KKRvSRH

10 ஓவர்களில் 92 ரன்கள் என ஐதராபாத்தின் இன்னிங்ஸ் செம ஸ்ட்ராங்கானது. 20 ஓவர்களின் முடிவில் ஐதராபாத் 200 ரன்களுக்கும் மேல் குவிக்கும் என எதிர்பார்க்கப்பட, சாவ்லாவின் பந்தில் போல்டானார் பேர்ஸ்டோவ். 35 பந்துகளில் 39 ரன்கள் எடுத்திருந்தார் பேர்ஸ்டோவ். 1 டவுன் பேட்ஸ்மேனாக விஜய் சங்கர் களமிறக்கப்பட்டார். ஆண்ட்ரே ரஸலின் ஓவரில் உத்தப்பாவின் பிரமாதமான கேட்சால்  85 ரன்களில் அவுட் ஆனார் டேவிட் வார்னர். 3 சிக்ஸர், 9 பவுண்டரி என 53 பந்துகளில் இந்த ரன்களை சேர்த்திருந்தார் வார்னர்.  

7 பெளலர்கள்!
டேவிட் வார்னர் அவுட் ஆனதும் ஐதராபாத்தின் ரன்ரேட் குறைய ஆரம்பித்தது. 24 பந்துகளில் 40 ரன்கள் அடித்த விஜய் சங்கரின் இன்னிங்ஸால், 20 ஓவர்களின் முடிவில் 183 ரன்கள் அடித்தது ஐதராபாத். பெளலிங்கைப் பொறுத்தவரை ஆண்ட்ரே ரஸல் மட்டுமே 3 ஓவர்களில் 32 ரன்களைக் கொடுத்து, டேவிட் வார்னர், யூசுப் பதான் விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். டேவிட் வார்னரின் பேட்டிங்கை சமாளிக்க மட்டுமே, கொல்கத்தா கேப்டன் தினேஷ் கார்த்திக் 7 பெளலர்களைப் பயன்படுத்தினார்.

லின் அவுட்!
வேகப்பந்து, ஸ்பின் என்கிற காம்போவில் பெளலிங்கைத் தொடங்கியது ஐதராபாத். கேப்டன் புவனேஷ்வர் குமார் முதல் ஓவரை வீச இரண்டாவது ஓவர் ஷகிப் அல் ஹசனுக்கு. ஷகிப்பின் முதல் ஓவரிலேயே விக்கெட் விழுந்தது. கிறிஸ் லின் 7 ரன்களில் அவுட் ஆனார்.  இரண்டாவது விக்கெட்டுக்கு நித்திஷ் ராணாவுடன் இணைந்தார் ராபின் உத்தப்பா. இருவருமே விக்கெட் விழாமல் பேட்டிங்கை ஸ்ட்ராங் ஆக்குவதில் கவனம் செலுத்தினர். ஓரு ஓவருக்கு 10 ரன்களுக்கு மேல் `ரிக்வயர்டு ரன் ரேட்’ இருக்க, 7 - 8 ரன்களிலேயே மெய்ன்டெய்ன் செய்தது கொல்கத்தா.

இதனால் பவர் ப்ளேவின் முடிவில் 47 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. 10 ஓவர்களின் முடிவில் 70 ரன்கள் மட்டுமே எடுக்க, தேவையான ரன்ரேட் 12 ரன்களை நோக்கி உயர்ந்தது. 12-வது ஓவரில் ராபின் உத்தப்பா அவுட் ஆனார். இவர் 27 பந்துகளில் 35 ரன்கள் எடுத்திருந்தார். அடுத்ததாக வந்த கேப்டன் தினேஷ் கார்த்திக் அடுத்த ஓவரிலேயே, சந்தீப் ஷர்மாவின் பந்துவீச்சில் அவுட் ஆனார். இன்னொருபக்கம் நிலைத்து நின்று ஆடிக்கொண்டிருந்த நித்திஷ் ராணா 35 பந்துகளில் 50 ரன்கள் அடித்தார். இது ஐபிஎல் கிரிக்கெட்டில் இவர் அடித்திருக்கும் 6-வது அரை சதம். 

ரஸல் - #KKRvSRH

வந்தார் ரஸல்!
15 ஓவர்களில் 114 ரன்கள். கடைசி 30 பந்துகளில் 68 ரன்கள் அடிக்க வேண்டும் என்கிற நிலை. ரஸலை மட்டுமே நம்பியிருந்தது கொல்கத்தா. ஆனால், அடுத்த இரண்டு ஓவர்களில் பெரிதாக ரன்கள் அடிக்கவில்லை. நித்திஷ் ராணாவும் அவுட். 17 ஓவர்களில் 129 ரன்கள். 18 பந்துகளில் 53 ரன்கள் அடிக்கவேண்டும். சித்தார்த் கெளலின் 18-வது ஓவரை பந்தாடினார் ரஸல். 2 சிக்ஸர், 1 பவுண்டரி என இந்த ஓவரில் மட்டும் 19 ரன்கள். அடுத்த ஓவரை வீசிய கேப்டன் புவனேஷ்வர் நொந்துபோனார். பவுண்டரி சிக்ஸர், பவுண்டரி சிக்ஸர் என அந்த ஓவரில் 20 ரன்கள் வெளுத்தார் ரஸல்.

ரஸல் - #KKRvSRH

கடைசி ஓவரில் 13 ரன்கள் அடித்தால் வெற்றி. ஷகிப் அல் ஹஸன் பந்துவீச, இந்தமுறை ஷுப்மான் கில் இரண்டு அதிரடி சிக்ஸர்கள் அடித்து, கொல்கத்தாவை வெற்றிபெறவைத்தார். 19 பந்துகளில் 49 ரன்கள் அடித்திருந்தார் ரஸல். மிஸ்ட்ரி ஸ்பின்னரான ஆப்கானிஸ்தானின் ரஷித் கானுக்கு 1 விக்கெட் கிடைத்ததே தவிர, அவரால் பெரிதாக பேட்ஸ்மேன்களை மிரட்ட முடியவில்லை. 4 ஓவர்களில் 26 ரன்கள் கொடுத்திருந்தார் ரஷித் கான்.

ரஸலின் அதிரடியால் வெற்றியோடு கணக்கைத் தொடங்கியிருக்கிறது கொல்கத்தா. பெளலிங்கில் கெத்தாக இருந்த ஐதராபாத் அந்த பெளலிங்காலேயே கோட்டைவிட்டிருக்கிறது!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்