ஒவ்வொரு சீசனிலும் ஓர் இளம்வீரர்! - இந்த முறை ராஷிக் சலாம்; களமிறக்கிய மும்பை இந்தியன்ஸ் | Jammu kashmir Rasikh Salam makes his IPL debut

வெளியிடப்பட்ட நேரம்: 14:00 (25/03/2019)

கடைசி தொடர்பு:14:00 (25/03/2019)

ஒவ்வொரு சீசனிலும் ஓர் இளம்வீரர்! - இந்த முறை ராஷிக் சலாம்; களமிறக்கிய மும்பை இந்தியன்ஸ்

ராஷிக்

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில், எதிரணிக்கு சர்ப்ரைஸ் கொடுப்பதுதான் மும்பை அணியின் ஸ்பெஷல். ஒவ்வொரு சீசனிலும்  ஓர் இளம் வீரரைக் கண்டறிந்து, அவர்கள்மூலம் மற்ற அணிகளுக்கு கடும் நெருக்கடிகொடுப்பது அவரது வழக்கம். அப்படி மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பிடித்த பும்ரா, க்ருணால் பாண்ட்யா, ஹர்திக் பாண்ட்யா ஆகியோர், தற்போது இந்திய அணிக்காக
விளையாடிவருகிறார்கள். பும்ரா அனைத்து விதமான கிரிக்கெட்டிலும் தவிர்க்கமுடியாத ஒரு பந்துவீச்சாளராக உருவெடுத்துள்ளார்.

இந்த நிலையில்தான், மும்பை அணி வான்கடே மைதானத்தில் நடைபெற்ற டெல்லிக்கு எதிரான போட்டியில், ராஷிக் சலாம் (Rasikh Salam) என்ற புதுமுக வீரரைக் களமிறக்கியது. முதல் ஒவரை அவரிடம் கொடுத்து ஆச்சர்யப்படுத்தினர். வேகப்பந்துவீச்சாளரான அவர், தனது முதல் மூன்று ஓவர்களை சிறப்பாகத்தான் வீசினார். சீனியர் பெளலர்களை வெளுத்து வாங்கிய ரிஷ்ப் பண்ட் இவரது கடைசி
ஓவரில் சிக்ஸர்களைப் பறக்கவிட்டு மிரட்டினார். 

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தில் உள்ள ஒரு குக்கிராமத்தைச் சேர்ந்தவர்தான் இந்த ராஷிக் சலாம். சாரை சாரையாக செல்லும் ராணுவ வாகனங்கள், எப்போதும் கேட்கும் துப்பாக்கிச் சத்தங்கள், கலவரங்கள், ஊரடங்கு உத்தரவுகள், அறிவிக்கப்படாத மின்வெட்டுகள், துண்டிக்கப்படும் இணைய சேவைகள் என இத்தனை தடைகளையும் தாண்டி வெளிச்சத்துக்கு வந்துள்ளார், ராஷிக் சலாம்.

இவரின் இந்த வளர்ச்சியில், இர்பான் பதானுக்கு முக்கியப் பங்கு இருக்கிறது. மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிக்கொண்டிருந்த ராஷிக்கின் திறமையை முதலில் அடையாளம் கண்டது இர்பான் பதான் தான். ஜம்மு- காஷ்மீர் அணியின் மெண்டராக இருக்கும் இர்பான் ரஞ்சி கோப்பைத் தொடருக்கான ஜம்மு அணிக்கு ராஷிக் பெயரை டிக் செய்தார்.  அதன் பின்னர், உள்ளூர் கிரிக்கெட்டில் தனது விக்கெட் வேட்டையைத் தொடங்கினார் இந்த இளம் பந்துவீச்சாளர்.

19 வயதுக்குட்பட்டவர்களுக்கான கிரிக்கெட் போட்டியில், ராஷிக் விளையாடும்போது, மும்பை அணியினர் கண்ணில் இவர் தென்பட்டார். இதனையடுத்து, கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில், இவரை 20 லட்சம் ரூபாய்க்கு மும்பை அணி ஒப்பந்தம்செய்தது. கடந்த மூன்று மாதங்களாக மும்பையின் முகாமில் பயிற்சி அளிக்கப்பட்டுவந்தது. நேற்றைய போட்டியில், ஆடும் லெவனில் இடம்பெற்ற ராஷிக், காஷ்மீரில் இருந்து ஐபிஎல்-க்கு வந்த மூன்றாவது வீரர் ஆவார்.