`ஐ.பி.எல் வீரர்கள் வாக்களிக்க சிறப்பு அனுமதி!’ - பிரதமர் மோடிக்கு அஷ்வின் கோரிக்கை | Ashwin Ravichandran urges PM Modi over voting of IPL players

வெளியிடப்பட்ட நேரம்: 17:10 (25/03/2019)

கடைசி தொடர்பு:17:10 (25/03/2019)

`ஐ.பி.எல் வீரர்கள் வாக்களிக்க சிறப்பு அனுமதி!’ - பிரதமர் மோடிக்கு அஷ்வின் கோரிக்கை

ஐ.பி.எல் தொடரில் பங்கேற்கும் வீரர்கள் வாக்களிப்பது தொடர்பாக இந்திய வீரர் அஷ்வின், பிரதமர் மோடிக்கு கோரிக்கை ஒன்றை வைத்திருக்கிறார். 

ரவிச்சந்திரன் அஷ்வின்

மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கி 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே மாதம் 23-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. தேர்தலில் வாக்களிப்பது தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வை தேர்தல் ஆணையம் ஏற்படுத்தி வருகிறது. 

நாடு முழுவதும் உள்ள முக்கியp பிரபலங்களை ட்விட்டரில் டேக் செய்து வாக்களிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்து வருகிறார். அந்தவகையில், கிரிக்கெட் வீரர்களான ஷிகர் தவான், புவனேஷ்வர் குமார் மற்றும் ரவிச்சந்திரன் அஷ்வின் ஆகியோரை டேக் செய்து பிரதமர் மோடி ட்வீட்டியிருந்தார். 

 

 

 

அந்தப் பதிவுக்குப் பதிலளித்துள்ள ரவிச்சந்திரன் அஷ்வின், `வாக்களிப்பதே நமது ஜனநாயகத்தின் ஆதாரப்புள்ளி என்பது குறித்து நான் எப்போதும் சிந்திப்பதுண்டு. நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் வசிக்கும் ஒவ்வொருவரும் கட்டாயம் வாக்களித்து, தங்களின் தலைவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்’’ என்று பதிவிட்டிருக்கிறார். 

 

 

 

 

 

 

அதேபோல், வாக்குப்பதிவின்போது ஐ.பி.எல் தொடரில் வீரர்கள் பங்கேற்றிருப்பதால் வாக்களிக்க அவர்களுக்கு சிறப்பு ஏற்பாடு செய்துதரும்படியும் பிரதமர் மோடியிடம் அஷ்வின் கோரிக்கை விடுத்திருக்கிறார். இதுகுறித்து மற்றொரு பதிவில், ``ஐ.பி.எல் தொடரில் பங்கேற்றுள்ள வீரர்கள் அவர்கள் இருக்கும் பகுதிக்கு அருகிலேயே தங்கள் வாக்குகளைச் செலுத்த அனுமதி அளிக்கும்படி வேண்டுகோள் வைக்கிறேன்’’ என்று பிரதமர் மோடியை டேக் செய்து அஷ்வின் கோரிக்கை விடுத்திருக்கிறார்.