ஜெய்ப்பூரில் முதல் வெற்றியைப் பதிவு செய்யுமா பஞ்சாப்? - ராஜஸ்தான் அணிக்கு 185 ரன்கள் இலக்கு #RRvKXIP | rajasthan royals scored 184 against punjab

வெளியிடப்பட்ட நேரம்: 21:54 (25/03/2019)

கடைசி தொடர்பு:21:59 (25/03/2019)

ஜெய்ப்பூரில் முதல் வெற்றியைப் பதிவு செய்யுமா பஞ்சாப்? - ராஜஸ்தான் அணிக்கு 185 ரன்கள் இலக்கு #RRvKXIP

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 185 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி.

கெயில்

ஐ.பி.எல் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.  கடந்த 23-ம் தேதி தொடங்கிய ஐ.பி.எல் போட்டியால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கிடையேயான ஐ.பி.எல் தொடரின் நான்காவது லீக் போட்டி ஜெய்ப்பூர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு கே.எல்.ராகுல் மற்றும் கெயில் இருவரும் துவக்கம் கொடுத்தனர். தவால் குல்கர்னி வீசிய முதல் ஓவரிலேயே ராகுல் வெளியேறினார். பின்னர் களத்துக்கு வந்த மயங் அகர்வால், கெயிலுடன் கைகோத்தார். அதிரடி வீரர் கெயில் வழக்கத்துக்கு மாறாக பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதேநேரம், மறுமுனையில் மயங் அகர்வால் அதிரடி காட்டினார். ஆனால், அவர் நீண்ட நேரம் நிலைக்கவில்லை. கிருஷ்ணப்பா கௌதம் வீசிய 8-வது ஓவரில் கேட்ச் கொடுத்து நடையை கட்டினார் மயங் அகர்வால். நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய கெய்ல், ஐ.பி.எல் தொடரில் 4,000 ரன்கள் என்ற மைல்கல்லை இன்றைய போட்டியில் எட்டினார். அதிக ரன்கள் குவித்த வீரர்கள் வரிசையில் 5,000 ரன்களைக் கடந்து ரெய்னா முதல் இடத்தில் இருக்கிறார்.

மயங்க் அகர்வால் ஆட்டமிழக்கும்போது 9 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 61 ரன்களை சேர்ந்திருந்தது பஞ்சாப் அணி. அடுத்ததாக சர்ஃபராஸ் களமிறங்க, அதுவரை பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கெயில், அதிரடிக்கு இறங்கினார். ராஜஸ்தான் பந்துவீச்சை சிதறடித்த கெயில், 33 பந்துகளில் அரைசதம் கடந்தார். அவரை வெளியேற்ற முடியாமல் பவுலர்கள் திணறினர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்த கெயில் பென் ஸ்டோக்ஸ் வீசிய 16-வது ஓவரில் வெளியேற்றினார். அவர் 47 பந்துகளில் 79 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய நிகோலஸ் பூரானும் சர்பராஸும் இணைந்து பந்துகளை எல்லைக் கோடுகளுக்கு விரட்டினர். நிகோலஸ் வெளியேற, சர்பராஸ் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு பஞ்சாப் அணி 184 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் தரப்பில் ஸ்டோக்ஸ் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். ஜெய்ப்பூர் மைதானத்தில் பஞ்சாப் அணி இதுவரை ஒரு வெற்றியைக் கூடப் பதிவு செய்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.