மன்கட் முறையில் அவுட்டான பட்லர் - அஸ்வின் செய்தது சரியா... ஐசிசி விதி சொல்வது என்ன? | Ashwin's Controversial Trickery to Dismiss Rajasthan Opener

வெளியிடப்பட்ட நேரம்: 09:15 (26/03/2019)

கடைசி தொடர்பு:17:32 (26/03/2019)

மன்கட் முறையில் அவுட்டான பட்லர் - அஸ்வின் செய்தது சரியா... ஐசிசி விதி சொல்வது என்ன?

ஐபிஎல் சீசன் 2019 -ன் நேற்றைய போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 14 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது கிங்ஸ் லெவன் பஞ்சாப். இதன் முதல் இன்னிங்ஸில், கெய்லின் அதிரடியுடன் 184 ரன்கள் என்ற இலக்கை பஞ்சாப் நிர்ணயித்தது. இந்த இலக்கை எட்டமுடியாமல் ராஜஸ்தான் அணி தோல்வி அடைந்தது. தோல்விக்கு முக்கியக் காரணமாக அமைந்தது ஜோஸ் பட்லரின் சர்ச்சைக்குரிய ரன் அவுட். நேற்றைய போட்டியில், 49 பந்துகள் சந்தித்து 69 ரன்கள் எடுத்து பட்லர் ஆடி வந்தார். அப்போது, 13 -வது ஓவரை அஸ்வின் வீசிய போது, நான்-ஸ்ட்ரைக்கர் எல்லைக் கோட்டில் இருந்த பட்லர், க்ரீஸை விட்டு வெளியே வந்ததால், அவரை “மன்கட் (ரன் அவுட்)” முறையில் அவுட் செய்தார் அஸ்வின். இது, சர்ச்சையாக மூன்றாவது நடுவருக்குச் சென்று, அவர் அவுட் கொடுத்தார். முன்னதாக அஸ்வினுக்கும் பட்லருக்கும் இது தொடர்பாக விவாதம் நடந்தது. பட்லர் அவுட்டான பிறகு ஆட்டம் மாறியது. 

அஸ்வின்

இந்த நிலையில், அஸ்வினின் செயல்குறித்து சமூக வலைதளங்களில் விவாதம் கிளம்பியுள்ளது. அவர் செய்தது சரியா, ஐசிசி விதிகள் என்ன கூறுகிறது என முன்னாள் வீரர்கள், ரசிகர்களிடையே விவாதம் கிளம்பியது.

ஐசிசி விதி சொல்வது என்ன? 

பௌலர் தனது பந்து வீசும் ஆக்‌ஷனை செய்யும்போது, non-striker பேட்ஸ்மேன் கிரீஸை விட்டு வெளியில் இருந்தால், பௌலர் அவரை அவுட் செய்துகொள்ளலாம். அப்படி பௌலர் சரியாக அவுட் செய்துவிட்டால் இந்தப் பந்து, அந்த ஓவரின் ஒரு பந்தாகக் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது. மாறாக, பௌலர் அவுட் செய்யவில்லை என்றால், இந்தப் பந்து டெட் பாலாக அறிவிக்கப்படும்.

அஸ்வின்

அஸ்வின் செய்தது சரியா?

ஐசிசி விதியில் மன்கட் முறையில் அவுட் செய்வதற்கு முன், பேட்ஸ்மேனுக்கு வார்னிங் கொடுக்க வேண்டும். ஆனால் நேற்றைய போட்டியில், அஸ்வின் அதைச் செய்யவில்லை. அதேபோல, பௌலிங் ஆக்ஷன் செய்த பிறகே அவுட் செய்ய வேண்டும். ஆனால், பௌலிங் ஆக்சனை முழுமையாகச் செய்து முடிக்கும் முன்பாகவே அஸ்வின் பட்லரை அவுட் செய்துவிட்டார். இதுதான் தற்போது சர்ச்சையாக மாறிவருகிறது. அஸ்வினுக்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்துகள் வந்தவண்ணம் உள்ளன. முன்னாள் வீரர்களில் பலரும் அஸ்வினின் செயலை விமர்சித்துள்ளனர். ``ஒரு கேப்டனாக அஸ்வினின் செயல் ஏமாற்றம் அளிக்கிறது. அவர் பந்தை டெலிவரி செய்வதற்கான எந்த நோக்கமும் இல்லாமல் செய்துள்ளார். அதனால், அதை டெட் பாலாக அறிவித்திருக்க வேண்டும். ஆனால், அதனைச் செய்யவில்லை. விளையாட்டின் ஆற்றலை அஸ்வின் மறந்துவிட்டார். சாலையோர கிரிக்கெட்டில்கூட இப்படிச் செய்ய மாட்டார்கள். ஐபிஎல்-லுக்கு இந்தச் செயல் நல்லதல்ல" என கடுமையாகச் சாடியுள்ளனர்.

அஸ்வின்

ஆனால், ``நான் திட்டமிட்டு இப்படிச் செய்யவில்லை. எனக்கு எந்த உள்நோக்கமும் இல்லை. நான் செய்த செயல் ஐசிசி விதிகளில் உள்ளது தான். விளையாட்டின் ஆற்றலை குறைக்கும் வகையில் நான் செயல்பட மாட்டேன். விதிகளில் என்ன உள்ளதோ அதைத்தான் செய்தேன்" என அஸ்வின் நடந்த சம்பவம்குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க