தொடர் சர்ச்சையாகும் மன்கட் அவுட் முறை - ஒரு சுவாரஸ்ய ஃப்ளாஷ்பேக் | The Story Behind ‘Mankading’, Cricket’s Most Controversial Dismissal Method

வெளியிடப்பட்ட நேரம்: 10:10 (26/03/2019)

கடைசி தொடர்பு:10:10 (26/03/2019)

தொடர் சர்ச்சையாகும் மன்கட் அவுட் முறை - ஒரு சுவாரஸ்ய ஃப்ளாஷ்பேக்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி உடனான நேற்றைய போட்டியில் பஞ்சாப் கேப்டன் அஸ்வின் ``மன்கட் (ரன் அவுட்)” முறையில் ஜோஸ் பட்லரை அவுட் செய்தார். இது தற்போது கடும் சர்ச்சையையும் விவாதத்தையும் கிளப்பியுள்ளது. அதேநேரம் மன்கட் அவுட் குறித்தும் வெளியில் தெரிய ஆரம்பித்திருக்கிறது. இந்தநிலையில் மன்கட் அவுட் முறை எப்படி வந்தது, அதுகுறித்து ஐசிசி விதிகள் என்ன சொல்கிறது என்ற தகவல் தற்போது வெளிவந்துள்ளன.

மன்கட் அவுட்

ஐசிசி விதி சொல்வது என்ன? 

பௌலர் தனது பந்து வீசும் ஆக்சனைச் செய்து பேட்ஸ்மேன் கிரீஸை விட்டு நான் ஸ்ட்ரைக்கர் பகுதியில் இருந்தால், பௌலர் அவரை அவுட் செய்து கொள்ளலாம். அப்படி பௌலர் சரியாக அவுட் செய்துவிட்டால், இந்தப் பந்து அந்த ஓவரின் ஒரு பந்தாக கணக்கில் எடுத்துக்கொள்ள படாது. மாறாக பௌலர் அவுட் செய்யவில்லை என்றால் இந்தப் பந்து டெட் பாலாக அறிவிக்கப்படும். இதற்கு மன்கட் எனப் பெயர். இந்தப் பெயர் வந்ததுக்கு ஒரு சுவாரஸ்யமான காரணம் உண்டு. 1947ம் ஆண்டு இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் தொடரின் போது இந்தியாவைச் சேர்ந்த ஆல் ரவுண்டர் வினோ மன்கட் என்பவர் ஆஸ்திரேலியா வீரர் பில் பிரவுனை இந்த முறையில் அவுட் செய்தார். இரண்டு முறை எச்சரித்த பின்பே மன்கட் பில் பிரவுனை அவுட் செய்தார். ஆனால், இதுகுறித்து ஆஸ்திரேலிய ஊடகங்கள் வசைபாடின. ஆனால், பெரும் சர்ச்சைக்கு இந்த விக்கெட் உள்ளாகி இருந்தாலும், அப்போது ஆஸ்திரேலியா கேப்டனாக இருந்த பிராட்மேன் விதிமுறைகளின்படி அவுட்டை ஏற்றுக்கொண்டார். அன்றிலிருந்து மன்கட் என்று இந்த முறைக்குப் பெயர் வந்தது. 

மன்கட் அவுட்

அப்போது மட்டுமல்ல இன்றுவரை இந்தமுறை ரன் அவுட் சர்ச்சைகளைச் சந்தித்துக்கொண்டேதான் இருக்கிறது. இப்படி வீரர்கள் அவுட்டாவது இது முதல் முறையல்ல. இதற்கும் முன்பும் நடந்துள்ளது. ஆனால், சர்ச்சைகள் மட்டும் குறையவில்லை. கபில் தேவ் முதல் பல வீரர்கள் இந்த முறையில் எதிரணி பேட்ஸ்மேன்களை அவுட்டாக்கியுள்ளனர். இதற்கு முன் இந்த முறையில் அஸ்வின் இலங்கையின் திரிமன்னேவை 2011ல் நடந்த தொடரின் போது அவுட் செய்தார். அதற்கு அவுட்டும் வழங்கப்பட்டது. ஆனால், பின்னர் இந்தியாவின் சீனியர் வீரர்கள் ஆலோசித்து அவுட்டை வாபஸ் வாங்கிக்கொண்டனர். 

மன்கட் அவுட்

இதேபோல் ஜாஸ் பட்லரும் 2014ம் ஆண்டு இலங்கை உடனான மேட்சின் போது சசித்ர செனநய என்ற பௌலரால் மன்கட் முறையில் அவுட் செய்யப்பட்டார். அப்போது இந்தத் தொடரின் போது ஜாஸ் பட்லர் அவுட் செய்வதற்கு முன் பல முறை எச்சரிக்கை கொடுக்கப்பட்டிருந்தது. ஆனாலும் இங்கிலாந்து வீரர்கள் இதை நேர்மையான முறை அல்ல என்று வசைபாடினர். இப்படிப் பலமுறை மன்கட் முறையில் அவுட் செய்யப்பட்ட அதேநேரம் ஐ.பி.எல் அரங்கில் இப்படி அவுட் செய்வது இதுவே முதல் முறை ஆகும். இதனால் சமூக வலைதளங்களில் இரண்டு தரப்பிலும் வாதம் நடந்துகொண்டிருக்கிறது.