டெல்லியிலும் மாஸ் காட்டிய சி.எஸ்.கே - கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த சென்னை அணி #DCvCSK | IPL 2019: DC sets 148 runs target to CSK

வெளியிடப்பட்ட நேரம்: 21:56 (26/03/2019)

கடைசி தொடர்பு:07:09 (27/03/2019)

டெல்லியிலும் மாஸ் காட்டிய சி.எஸ்.கே - கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த சென்னை அணி #DCvCSK

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிரான ஐ.பி.எல் லீக் போட்டியில் முதலில் பேட் செய்த டெல்லி கேபிடல்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்துள்ளது. 

சி.எஸ்.கே வீரர்கள்

டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் நடைபெறும் ஐ.பி.எல் தொடரில் 5-வது லீக் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டிங் தேர்வு செய்தார். இதையடுத்து, டெல்லி அணியில் ப்ரித்வி ஷா மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் தொடக்க வீரர்களாகக் களமிறங்கினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 4.3 ஓவர்களில் 36 ரன்கள் சேர்த்தது. ப்ரித்வி ஷா, 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்துவந்த கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் நீண்டநேரம் தாக்குப்பிடிக்கவில்லை. 18 ரன்களுடன் அவர் பெவிலியன் திரும்ப, டெல்லி ரசிகர்களின் பலத்த கரகோஷங்களுக்கு மத்தியில் ரிஷப் பன்ட் களமிறங்கினார். 13 பந்துகளைச் சந்தித்த அவர் 25 ரன்கள் எடுத்து பிராவோ பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவர் ஆட்டமிழந்த சிறிதுநேரத்திலேயே இங்க்ரமையும் பிராவோ வெளியேற்றினார். அப்போது டெல்லி அணி, 15.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 122 ரன்கள் எடுத்திருந்தது. 6 வீரராகக் களம்கண்ட கீமோ பால், ரன் கணக்கைத் தொடங்காமலேயே ஜடேஜா பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார். 

தவான்

ஒருமுனையில் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் மறுமுனையில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய தொடக்க வீரர் தவான், 45 பந்துகளில் அரைசதம் கடந்தார். 51 ரன்கள் எடுத்த நிலையில் பிராவோ வீசிய ஸ்லோ பாலில் தவான் வீழ்ந்தார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்தது. சென்னை தரப்பில் பிராவோ 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். டெல்லி அணியால் கடைசி 5 ஓவர்களில் 29 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. 

அடுத்து களமிறங்கிய சென்னை அணிக்கு ஷேன் வாட்சன், அம்பதி ராயுடு துவக்கம் கொடுத்தனர். ராயுடு, 5 ரன்களில் இஷாந்த சர்மா பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய சுரேஷ் ரெய்னா, வாட்சன் கூட்டணி நிதானமாக ஆடி ரன் சேர்ந்தது. வாட்சன் 26 பந்துகளில் 44 ரன்கள் எடுத்த நிலையிலும், ரெய்னா 16 பந்துகளில் 30 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்ததாக ஜோடி சேர்ந்த கேதர் ஜாதவ், தோனி ஜோடி டெல்லி அணியின் பந்து வீச்சைத் சிதறடித்தனர். தோனி 35 பந்துகளில் 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் அணிக்கு வெற்றியை தேடி தந்தார் . இதன் மூலம் சென்னை அணி  19.4 ஓவரில் 150 ரன்கள் எடுத்து டெல்லி அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.