`ராபின், ராணா, ரஸல் அதிரடி!' - 218 ரன்கள் குவித்த கொல்கத்தா #KKRvKXIP | IPL2019: Kolkata scored 218 runs against Punjab

வெளியிடப்பட்ட நேரம்: 21:53 (27/03/2019)

கடைசி தொடர்பு:22:02 (27/03/2019)

`ராபின், ராணா, ரஸல் அதிரடி!' - 218 ரன்கள் குவித்த கொல்கத்தா #KKRvKXIP

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிரான போட்டியில் முதலில் பேட் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 218 ரன்கள் எடுத்தது. 

ரானா

கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதும் ஐ.பி.எல் தொடரின் 6-வது லீக் போட்டி நடக்கிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணியின் கேப்டன் ரவிச்சந்திரன் அஷ்வின் ஃபீல்டிங் தேர்வு செய்தார். அதன்படி கிறிஸ் லின், சுனில் நரேன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கின்றனர். ஆட்டத்தை தொடங்கிய வேகத்தில் அதிரடி காட்டிய, இந்த ஜோடியை 2-வது ஓவரின் 3வது பந்தில் ஷமி பிரித்தார். லின் 10 ரன்களுடன் நடையைக் கட்டினார்.

இதையடுத்து சுனில் நரேனுடன், உத்தப்பா கைகோத்தார். தொடக்கத்தில் விளாசிய சுனில் நரேன் ஹர்டஸ் வில்ஜோன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அப்போது, 4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 42 ரன்களை சேர்ந்திருந்தது கொல்கத்தா. பின்னர் களமிறங்கிய நித்திஷ் ராணா, உத்தப்பாவுடன் இணைந்து, பஞ்சாப் பந்துவீச்சாளர்களை திணறடித்தார். பந்துகளை நாலாப்புறமும் பறக்கவிட்டு அதிரடி காட்டிய ராணா 7 சிக்ஸர்களை அடித்து மிரட்டினார். இருவரும் இணைந்து 3வது விக்கெட்டுக்கு 110 ரன்கள் சேர்த்தனர். 34 பந்துகளில் 63 ரன்களைச் சேர்த்த ராணா, தமிழக சுழற்பந்துவீச்சாளர் வருண் சக்ரவர்த்தி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய ரஸ்ஸலும், உத்தப்பாவும் இணைந்து பந்துகளை எல்லைக்கோட்டுக்கு விரட்டினர்.

கொல்கத்தா அணியின் இன்னிங்ஸின்போது 16வது ஓவரை ஷமி வீசினார். அந்த ஓவரின் கடைசி பந்தில் ஷமி வீசிய யார்க்கரில் ரஸல் க்ளீன் பவுல்டாகி ஆட்டமிழந்தார். ஆனால், 30 யார்டு சர்க்கிளுக்குள் 3 ஃபீல்டர்களே இருந்ததால், அந்த பந்து நோபாலாக அறிவிக்கப்பட்டது. கிரிக்கெட் விதிமுறைகளின்படி 30 யார்டு சர்க்கிளுக்குள் குறைந்தபட்சம் 4 ஃபீல்டர்கள் இருக்கவேண்டியது அவசியம். அப்போது ரஸல், 3 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். நோபாலால் அவுட்டிலிருந்து தப்பிய ரஸல், அதன்பிறகு வானவேடிக்கைக் காட்டத் தொடங்கினார். ஆண்ட்ரூ டை மற்றும்  ஷமி ஆகியோர் வீசிய அடுத்தடுத்த ஓவர்களில் சிக்ஸர்களாகப் பறக்கவிட்ட அவர், 17 பந்துகளில் 48 ரன்கள் எடுத்து கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 218 ரன்களைச் சேர்த்தது கொல்கத்தா. மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய உத்தப்பா, 50 பந்துகளில் 67 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.