`இதுதான் கர்மா!’ - அஷ்வினைக் கலாய்க்கும் நெட்டிசன்கள் #KKRvKXIP | This what call you karma, netizens making fun of Ashwin

வெளியிடப்பட்ட நேரம்: 22:20 (27/03/2019)

கடைசி தொடர்பு:11:22 (28/03/2019)

`இதுதான் கர்மா!’ - அஷ்வினைக் கலாய்க்கும் நெட்டிசன்கள் #KKRvKXIP

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிரான போட்டியில் முதலில் பேட் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 218 ரன்கள் எடுத்தது. 

பட்லரை அவுட்டாக்கும் அஷ்வின்

கொல்கத்தா ஈடர்ன் கார்டன் மைதானத்தில் நடந்த போட்டியில் டாஸ் வென்று ஃபீல்டிங் தேர்வு செய்தார் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டன் அஷ்வின். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிரான போட்டியில் அந்த அணியின் வீரர் பட்லரை மன்கட் முறையில் அஷ்வின் ஆட்டமிழக்கச் செய்தது கிரிக்கெட் உலகில் பெரிய அளவில் விவாதத்தைக் கிளப்பியது. அதுகுறித்து விளக்கமளித்த அஷ்வின், விதிமுறைகளுக்குட்பட்டே தான் செயல்பட்டதாகத் தெரிவித்திருந்தார். 

அஷ்வின்

இந்த நிலையில், கொல்கத்தா அணிக்கெதிரான போட்டியில் அதிரடியில் மிரட்டும் ரஸல், பஞ்சாப் அணியின் ஷமி வீசிய 17வது ஓவரின் கடைசிப் பந்தில் ஸ்டம்புகள் சிதற ஆட்டமிழந்தார். ஆனால், 30 யார்டு சர்க்கிளில் 3 ஃபீல்டர்கள் மட்டுமே இருந்ததைக் கவனித்த கள நடுவர் அதை நோபாலாக அறிவித்தார். விதிமுறைப்படி இன்னர் சர்க்கிள் எனப்படும் 30 யார்டு சர்க்கிளில் குறைந்தபட்சம் 4 ஃபீல்டர்கள் இருக்க வேண்டும். இதனால், பஞ்சாப் வீரர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அஷ்வின் உட்பட வீரர்கள் பலர் அப்செட்டானது தெரிந்தது. 

ரஸல் - உத்தப்பா ஜோடி

விக்கெட் கண்டத்தில் இருந்து தப்பிய ரஸல், அதன்பிறகு அதிரடியில் மிரட்டத் தொடங்கினார். அவுட் ஆகும்போது 3 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த ரஸல், கடைசி ஓவரில் ஆட்டமிழக்கும்போது 17 பந்துகளில் 48 ரன்கள் குவித்திருந்தார். அந்த நோபாலுக்குப் பின்னர் கொல்கத்தா அணி 19 பந்துகளில் 56 ரன்கள் சேர்த்தது குறிப்பிடத்தக்கது. இதனால், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 218 ரன்கள் சேர்த்தது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் ஐ.பி.எல் தொடரில் அதிகபட்ச ஸ்கோர் இதுவே. 

அலெக்ஸாண்ட்ரா ஹார்ட்லி ட்வீட்

இதையடுத்து, அஷ்வினைக் குறிப்பிட்டு நெட்டிசன்கள் பலரும் கலாய்த்து வருகிறார்கள். இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் வீராங்கனை அலெக்ஸாண்ட்ரா ஹார்ட்லி, `அஷ்வின் இதுதான் கர்மா என்பது’ என்று ட்வீட்டியிருக்கிறார். அதேபோல், ரசிகர்கள் பலரும் இதுகுறித்து கருத்துத் தெரிவிக்கவே இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.