முதல் வெற்றியைப் பதிவு செய்யுமா மும்பை? - ஆர்.சி.பிக்கு 188 ரன்கள் இலக்கு #RCBvMI | MI sets 188 runs target to RCB in IPL match

வெளியிடப்பட்ட நேரம்: 21:59 (28/03/2019)

கடைசி தொடர்பு:22:05 (28/03/2019)

முதல் வெற்றியைப் பதிவு செய்யுமா மும்பை? - ஆர்.சி.பிக்கு 188 ரன்கள் இலக்கு #RCBvMI

பெங்களூரு அணிக்கெதிரான ஐ.பி.எல் போட்டியில் முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் சேர்த்தது. 

ரோஹித்

பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் நடைபெறும் ஐ.பி.எல் தொடரின் 7வது லீக் போட்டியில் விராட் கோலி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. நடப்பு ஐ.பி.எல் தொடரின் முதல் போட்டியில் இரு அணிகளுமே தோல்வியடைந்ததால், இன்றைய போட்டியில் வென்று நடப்பு ஐ.பி.எல் தொடரின் முதல் வெற்றியைப் பதிவு செய்ய இரு அணிகளுமே முனைப்புடன் களமிறங்குகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆர்.சி.பி கேப்டன் விராட் கோலி ஃபீல்டிங் தேர்வு செய்தார்.

அதன்படி, டிகாக், ரோஹித் ஷர்மா ஆகியோர் அணிக்கு துவக்கம் கொடுத்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 54 ரன்களைச் சேர்த்தது. சாஹல் வீசிய பந்தில் போல்டாகி நடையைக்கட்டினார் டி காக். பின்னர் களமிறங்கிய சூர்யகுமார் யாதவ், ரோஹித்துடன் கைகோத்தார். ரோஹித் பந்துகளை எல்லைக்கோட்டுக்கு விரட்ட, சூர்யகுமார் நிதான ஆட்டத்தையே வெளிப்படுத்தி வந்தார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ரோஹித் ஷர்மாவை பெவிலியனுக்கு அனுப்பினார் உமேஷ்யாதவ். அவர் 33 பந்துகளில் 48 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அடுத்துவந்த யுவராஜ் அதிரடி காட்டத் தொடங்கினார்.

சஹால்

குறிப்பாக சஹால் வீசிய 14வது ஓவரின் முதல் 3 பந்துகளை சிக்ஸருக்கு விளாசிய யுவராஜ், 4வது பந்தில் லாங் ஆனில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். யுவராஜ் சிங் 12 பந்துகளில் 23 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அடுத்துவந்த பொல்லார்ட் மற்றும்  குர்ணால் பாண்ட்யா ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்த சூர்யகுமார் யாதவும் 38 ரன்களில் வெளியேறினார். கடைசி ஓவர்களில் ஹர்திக் பாண்ட்யா அதிரடி காட்ட நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 8 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் சேர்த்தது. பாண்ட்யா 14 பந்துகளில் 32 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். பெங்களூரு அணி தரப்பில் சஹால் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.