``இது ஐபிஎல் லெவல் கிரிக்கெட்; க்ளப் கிரிக்கெட் அல்ல!” - நோ பால் சர்ச்சையால் கடுப்பான கோலி | We are playing at the IPL level and not playing club cricket

வெளியிடப்பட்ட நேரம்: 09:35 (29/03/2019)

கடைசி தொடர்பு:09:46 (29/03/2019)

``இது ஐபிஎல் லெவல் கிரிக்கெட்; க்ளப் கிரிக்கெட் அல்ல!” - நோ பால் சர்ச்சையால் கடுப்பான கோலி

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி 6 ரன்களில் தோல்வியடைந்தது. அம்பயரின் கவனக்குறைவால் தங்கள் வெற்றி பறிபோனதாக ஆர்.சி.பி அணியின் கேப்டன் விராட் கோலி பேசியுள்ளார்.

கோலி

Photo Credit: iplt20.com

ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 7-வது லீக் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. விராட் கோலி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியம் பேட்ஸ்மேன்களின் சொர்க்கபுரி என்பதால் டாஸ் வென்ற விராட் கோலி பந்துவீச்சை தேர்வு செய்தார். எவ்வளவு பெரிய ஸ்கோரையும் இங்கு விரட்டிப் பிடித்துவிடலாம். அதன்படி முதலில் ஆடிய மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ரோஹித் சர்மா 48 ரன்களை எடுத்தார். பின்னர், களமிறங்கிய பெங்களூரு அணியால் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 181 ரன்களே எடுக்க முடிந்தது. இதன்மூலம் மும்பை அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

மும்பை இந்தியன்ஸ்

Photo Credit: iplt20.com

இந்தப் போட்டியிலும் நோ பால் சர்ச்சை எழுந்ததுள்ளது. ஆட்டத்தின் இறுதி ஓவரை மலிங்கா வீசினார். கடைசிப் பந்தில் பெங்களூரு அணியின் வெற்றிக்கு 7 ரன்கள் தேவைப்பட்டது. ஆஃப் ஸ்டெம்பை நோக்கி தாழ்வாக வீசப்பட்ட அந்தப் பந்தில் சிவம் டூபே லாங் ஆன் திசையில் பந்தைத் தட்டிவிட்டார். எல்லைக்கோடு அருகே சென்ற பந்தை ரோஹித் சர்மா பிடித்தார். பெங்களூரு வீரர்கள் ரன் எடுக்க ஆர்வம் காட்டவில்லை. மும்பை அணி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.

ரோஹித் சர்மா

Photo Credit: iplt20.com


இதன்பின்னர் டிவி ரிப்ளேவில் மலிங்கா வீசிய பந்து நோ பால் என்பது தெரியவந்தது. கீரிஸுக்கு வெளியே கால் வைத்துப் பந்துவீசியுள்ளார். இதை அம்பயர் கவனிக்கத் தவறியது தெரியவந்தது. இதைக்கண்டதும் கோலியின் முகம் மாறியது. இந்தப் போட்டிக்குப் பின்னர் பேசிய கோலி, ``நாம் ஐ.பி.எல் லெவல் கிரிக்கெட் விளையாடுகிறோம். க்ளப் கிரிக்கெட் அல்ல. களநடுவர்கள் தங்களது கண்களை திறந்து வைத்திருக்க வேண்டும். இது கொடுமையானது. என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. அவர்கள் இந்த விஷயத்தில் கவனமாக இருந்திருக்க வேண்டும். டிவில்லியர்ஸ் சிறப்பாக விளையாடினார். நான் தவறான நேரத்தில் எனது விக்கெட்டை இழந்து விட்டேன். சிவம் சிறப்பாக விளையாடினார். பும்ரா உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சாளர். மும்பை அணிக்கும் மலிங்காவுக்கும் இந்த நாள் அதிர்ஷ்டமான நாளாக அமைந்துவிட்டது. பும்ரா நல்ல ஃபார்மில் இருப்பது இந்திய அணிக்கு நல்லது” என்றார்