`நான் வீசிய பந்தை யுவராஜ் சிக்ஸ் அடித்தபோது இவரைப்போல உணர்ந்தேன்!'- சஹால் | ‘I felt like Stuart Broad’ says Yuzvendra Chahal about Yuvraj Singh hat trick sixes

வெளியிடப்பட்ட நேரம்: 16:50 (29/03/2019)

கடைசி தொடர்பு:16:50 (29/03/2019)

`நான் வீசிய பந்தை யுவராஜ் சிக்ஸ் அடித்தபோது இவரைப்போல உணர்ந்தேன்!'- சஹால்

யுவராஜ் சிங்கின் ஹாட்ரிக் சிக்ஸர் குறித்து பெங்களூரு அணி பந்துவீச்சாளர் சஹால் பேசியுள்ளார்.

யுவராஜ் சிங்

பெங்களூரு அணிக்கெதிரான ஐ.பி.எல் போட்டியில் சர்ச்சைகளுடன் முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது மும்பை அணி. சர்ச்சைகளுக்கு அப்பால் இந்தப் போட்டி சுவாரஸ்யம் மிகுந்ததாகவும், பரபரப்புடன் சென்றது. மும்பை அணியின் ரன் குவிப்புக்கு ரோஹித் ஷர்மா, ஹர்டிக் பாண்டியா உள்ளிட்டோர் உதவிகரமாக இருந்தனர். நட்சத்திர வீரர் யுவராஜ் சிங் சிறப்பான பங்களிப்பை அளித்தார். 14வது ஓவரை எதிர்கொண்டவர் முதல் மூன்று பந்துகளிலும் ஹாட்ரிக் சிக்ஸர் அடித்தார். எனினும் அதற்கு அடுத்த பந்தே அவுட் ஆனார். எனினும் ரசிகர்களுக்குச் சிறிது நேரம் வானவேடிக்கை காண்பித்து குதூகலப்படுத்தினார். 

யுவராஜ்

முதல் போட்டியிலும் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்தவர், இந்தப் போட்டியிலும் அதிரடியாக விளையாடினார். இதனால் மீண்டும் பழைய நிலைமைக்கே யுவராஜ் திரும்பிவிட்டார் என்பது போன்ற பதிவுகள் வலைதளங்களில் அதிகமாகக் காணமுடிகிறது. ஐபிஎல் ஏலத்தில் முதல் சுற்றிலும் இடம் பெற முடியாமல் கடைசி நேரத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அடிப்படை விலைக்கு ஏலம் எடுக்கப்பட்டார் யுவராஜ். இதனால் அவர் விளையாடப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு நிலவிவந்த நிலையில் இரண்டு போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி திறமையை நிரூபித்து வருகிறார்.

சஹால்

இதற்கிடையே நேற்றைய போட்டியில் 14வது ஓவரை வீசிய சஹால், யுவராஜ் ஹாட்ரிக் சிக்ஸர் அடித்த தருணம் குறித்துப் பேசியுள்ளார். 2007-ம் ஆண்டு நடந்த உலகக்கோப்பை டி20 போட்டியில் யுவராஜ் அடித்த 6 சிக்ஸர்களை நினைவுபடுத்தி, ``யுவராஜ் சிங் ஹாட்ரிக் சிக்ஸ் அடிக்கவும் ஸ்டூவர்ட் பிராட் போல உணர்ந்தேன். அவர் ஒரு லெஜெண்ட் பேட்ஸ்மேன் என்பது அனைவருக்கும் தெரியும். அதை நானும் ஒத்துக்கொள்கிறேன். இது சிறிய மைதானம் என்பதால் என் பந்துவீச்சில் அவரை அவுட் செய்யலாம் என நினைத்தே பௌலிங் செய்தேன். அந்த நேரத்தில் எனது சிறந்த பந்துவீச்சைக் கொடுத்தேன். ஆனால் அவர் ஹாட்ரிக் சிக்ஸ் அடித்துவிட்டார். அது கைகொடுக்காததால் கூக்ளி வகை பந்துவீசினேன்" என்றார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க