`ஓவர் ஸ்பீடால் போலீஸிடம் சிக்கிய அந்த நிமிடம்!’ - சச்சின் பகிர்ந்த நாஸ்டால்ஜியா சம்பவம் #ViralVideo | sachin tendulkar revels stopped by the police for over speed

வெளியிடப்பட்ட நேரம்: 18:06 (29/03/2019)

கடைசி தொடர்பு:18:06 (29/03/2019)

`ஓவர் ஸ்பீடால் போலீஸிடம் சிக்கிய அந்த நிமிடம்!’ - சச்சின் பகிர்ந்த நாஸ்டால்ஜியா சம்பவம் #ViralVideo

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் ஒரு கார் பிரியர் என்பது தெரிந்த விஷயம். தனது கரேஜில் நிறைய வகையான கார்களை அவர் வைத்துள்ளார். பேன்சி கார்களில் சில சமயம் மும்பை வீதிகளில் அவர் வலம் வருவதை காணமுடியும். சமீபத்தில் சச்சின் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் i8 மாடல் காரை வாங்கியுள்ளார். இந்த கார் குறித்த புகைப்படங்கள் வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வேளையில் கார் ஓட்டிச் செல்லும்போது போலீஸிடம் சிக்கிய அனுபவத்தை சச்சின் பகிர்ந்துள்ளார். தனது யூடியூப் பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோவில் இந்தச் சம்பவம் குறித்து கூறியுள்ளார். 1992ஆம் ஆண்டில் லண்டனில் கவுண்டி கிரிக்கெட் கிளப்க்கு விளையாடும் போது இந்தச் சம்பவம் நடந்தது. 

சச்சின்

இதுகுறித்து அவர் கூறுகையில், ``டிரைவிங் செய்வது எனக்கு எப்போதும் பிடித்த விஷயங்களில் ஒன்று. நியூகேஸில் நடந்த கவுண்டி முடிந்த பிறகு மாலையில் காரில் வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்தேன். ஒரு வழி மட்டுமே இருக்கிற எக்ஸ்பிரஸ் சாலையில் பயணம் செய்துகொண்டிருந்தேன். சாலையில் அதிக அளவு போக்குவரத்து இல்லாமல் இருந்தது. சிறிது நேரத்தில் எனது கார் முன்பு ஒரு போலீஸ் வாகனம் வந்தது. போலீஸ் வாகனத்தின் பின் நாம் செல்வது பாதுகாப்பானதுதான் என நினைத்துக்கொண்டு நான் கார் ஓட்டுவதில் கவனம் செலுத்தினேன். 

சச்சின்

ஆனால், சிறிது நேரத்தில் போலீஸ்காரர்கள் தங்கள் கைகள் மூலம் சைகைகள் எழுப்பினர். அவர்கள் சைகையைப் பார்த்தபிறகு மாலை வேளை என்பதால் லைட் போடச் சொல்கிறார்கள் என நினைத்து நானும் காரின் லைட்டை ஆன் செய்தேன். இரண்டு நிமிடங்களுக்குப் பிறகு மீண்டும் போலீஸ்காரர்கள் அதேபோல் சைகை செய்தனர். தொடர்ந்து அவர்கள் அவ்வாறு செய்துகொண்டே இருந்தனர். மூன்று முறைக்கு அப்படிச் செய்தவர்கள் திடீரென காரை நிறுத்தி என்னையும் நிறுத்தச் சொல்லினர். பின்னர் என் அருகில் வந்து ``இந்தச் சாலையில் 50 கிமீ வேகத்தில்தான் செல்ல வேண்டும். ஆனால், நீங்கள் 60 கிமீக்கு மேல் வேகமாகச் செல்கிறீர்கள். இந்த வேகத்தில் சென்றால் எப்படி மற்றொரு காருடன் இடைவெளி கடைப்பிடிப்பீர்கள்" எனக் கேள்வி எழுப்பினர். 

சச்சின்

அப்போதுதான் அவர்களது சைகையின் அர்த்தம் புரிந்தது. ஒரு நிமிடம் எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. பிறகு அவர்களிடம் மன்னிப்பு கோரியதுடன், ``நான் கவுண்டி கிரிக்கெட் விளையாட வந்துள்ளேன். எனக்கு இங்கு இருக்கும் விதிகள் பற்றித் தெரியாது" எனக் கூறினேன். அதைப் புரிந்துகொண்ட அவர்கள், ``இந்த முறை உங்களை எச்சரிக்கையுடன் மன்னித்து விடுகிறோம். இனி இப்படி நடக்கக் கூடாது" எனக் கூறி அங்கிருந்து நகர்ந்தனர். நானும் கடவுளுக்கு நன்றி சொல்லி அந்த இடத்தை விட்டு நகர்ந்தேன். இந்தச் சம்பவம் இன்னும் எனக்கு நினைவில் இருக்கிறது. இதை மறக்கமாட்டேன்" எனக் கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க