``என்னை மிகவும் கவர்ந்தது இவர்கள்தான்!” - ஹைதராபாத்தில் வார்னர் உற்சாகம் | local fans Inspires me - Warner

வெளியிடப்பட்ட நேரம்: 08:46 (30/03/2019)

கடைசி தொடர்பு:08:46 (30/03/2019)

``என்னை மிகவும் கவர்ந்தது இவர்கள்தான்!” - ஹைதராபாத்தில் வார்னர் உற்சாகம்

வார்னர்

Photo: IPLT20.com

சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட ஓராண்டு தடைவிதிக்கப்பட்ட வார்னர், கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் விளையாடவில்லை. வார்னர் இல்லாததால், அந்த அணியை நியூஸிலாந்து வீரர் கேன் வில்லியம்ஸன் வழிநடத்தினார். அவரது வழிகாட்டுதலில், அந்த அணி சிறப்பாக வெற்றிகளைக் குவித்தது. இறுதிப்போட்டியில், சென்னை அணியிடம் சரண்டர் ஆனது ஹைதராபாத். அந்த அணிக்கு வார்னர் இந்த வருடம் அட்டகாசமான கம்பேக் கொடுத்துள்ளார். ஹைதராபாத்தில் நேற்று நடந்த போட்டியில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ், கேப்டன் ரஹானே பேட்டிங்கைத் தேர்வுசெய்தார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில், அந்த அணி 2 விக்கெட் இழப்புக்கு 198 ரன்கள் எடுத்தது. சன்சு சாம்சன் சதம் அடித்து அசத்தினார். பின்னர் களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணிக்கு வார்னர் அட்டகாசமான தொடக்கத்தை ஏற்படுத்துக்கொடுத்தார். ஹைதராபாத் அணி 19-வது ஓவரிலே வெற்றி இலக்கை எட்டியது. ரஷித் கான் ஆட்டநாயகன் விருதுபெற்றார்.

சஞ்சு சாம்சன்

Photo: IPLT20.com


போட்டிக்குப் பின்னர் பேசிய வார்னர், “என்னை மிகவும் கவர்ந்தது இங்குள்ள ரசிகர்கள்தான். அவர்கள் அற்புதமானவர்கள். அவர்களுக்கு ஒரு நல்ல ஷோவை காண்பிக்க வேண்டும் என விரும்பினோம். எங்கள் ஆட்டத்தை முதலில் நாங்கள் சிறப்பாகத் தொடங்கவில்லை. சஞ்சு சாம்சன் ஒரு அற்புதமான இன்னிங்ஸை விளையாடினார். அந்தப் பெருமைகள் எல்லாம் அவரையே சேரும். அவர் களத்திற்கு வந்ததில் இருந்து சிறப்பாகவே செயல்பட்டார். அவருக்கான நேரத்தை எடுத்துக்கொண்டு சிறப்பாக இன்னிங்ஸை ஃபினிஷ் செய்தார். 200 ரன்கள் எடுப்பார்கள் என நினைக்கவில்லை. கடந்த இரண்டு நாள்களாக ஒரு பக்கத்தில் மட்டும் காற்று அதிகமாக வீசிக்கொண்டிருந்தது. ஆனால், போட்டியின்போது அவ்வாறு இல்லை. ஒரு வருடத்திற்குப் பிறகு எனது இன்னிங்ஸைத் தொடங்கியிருக்கிறேன். இந்த ரசிகர்கள் முன்னிலையில் நான் சந்தோஷமாக விளையாடினேன். இது ஒரு சிறந்த நாள்”என்றார்