``ஸ்டூவர்ட் பிராட்டை போன்று உணர்ந்தேன்” - சஹாலின் கருத்துக்கு கமென்ட்டில் வந்து கலாய்த்த பிராட் | broad comment on chahal's statement

வெளியிடப்பட்ட நேரம்: 10:00 (30/03/2019)

கடைசி தொடர்பு:10:12 (30/03/2019)

``ஸ்டூவர்ட் பிராட்டை போன்று உணர்ந்தேன்” - சஹாலின் கருத்துக்கு கமென்ட்டில் வந்து கலாய்த்த பிராட்

இந்தியாவில், தேர்தல் திருவிழாவுடன் கிரிக்கெட் திருவிழாவும் களைக்கட்டியுள்ளது. ஐபிஎல் திருவிழா என்பது சில சமயங்களில் மைதானத்தில் மட்டுமே நடைபெறும் கொண்டாட்டமாக இருந்துவிடுவதில்லை. மைதானத்தைக் கடந்தும் பல்வேறு சம்பவங்கள் கொண்டாடப்படும், சமயத்தில் கலாய்க்கவும்படும். 

சஹால்

நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியில், பெங்களூரு அணியும் மும்பை அணியும் மோதின. பரபரப்பான இந்த ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் அணி த்ரில் வெற்றிபெற்றது. இந்தப் போட்டியின்போது, மும்பை வீரர் யுவராஜ் சிங், சஹால் ஓவரில் தொடர்ச்சியாக 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டு, ரசிகர்களைக் குஷிப்படுத்தினார். ஓவரின் முதல் மூன்று பந்துகளும் சிக்ஸருக்குப் பறக்க, மீண்டும்  `2007 -ம் ஆண்டு’ சம்பவம் நடைபெறும் என ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். அதற்கு ஏற்றதுபோலவே யுவராஜ், 4 -வது பந்தையும் தூக்கி அடித்தார். ஆனால் எல்லையில் அது கேட்ச்  ஆக,  ஆட்டமிழந்தார் யுவராஜ். 

யுவராஜ்

போட்டி முடிந்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சஹால்,  ``யுவராஜ் ஒரு லெஜண்ட் பேட்ஸ்மேன். அவர் எனது ஓவரின் முதல் மூன்று பந்துகளில் சிக்ஸர் பறக்கவிட்டதும், நான் ஸ்டூவர்ட் பிராட் போன்று என்னை உணர்ந்தேன்” என்று பேசினார். இந்த வீடியோவை ஐபிஎல், தனது பல்வேறு சமூகவலைதளப் பக்கங்களில் பதிவிட, வைரல் ஆனது. 

பிராட்

இந்நிலையில், ஐபிஎல் நிர்வாகத்தின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடப்பட்டிருந்த அந்த வீடியோவில், இங்கிலாந்து அணியின் ஸ்டூவர்ட் பிராட் கமென்ட் செய்திருந்தார். அவர்,  ``சஹால், இன்னும் 10 ஆண்டுகளில்  437 டெஸ்ட் விக்கெட்டுகளுடன் மீண்டும் என்னைப் போன்று உணர்வார் என நம்புகிறேன்” என்று கடுப்பாகக் கலாய்க்க, பிராட்டின் கமென்ட்டும் செம ஹிட் அடித்தது. 

சஹால்

2007 -ம் ஆண்டு நடைபெற்ற முதலாவது டி20 உலகக்கோப்பையின்போது, யுவராஜ் சிங், அப்போது இளம் வீரராக இருந்த இங்கிலாந்தின் ஸ்டூவர்ட் பிராட்டின் ஒரே ஓவரில் 6 சிக்ஸர்களைத் தொடர்ச்சியாகப் பறக்கவிட்டு அமர்க்களப்படுத்தினார். அதன் பின்னர் பிராட்,  சிறப்பாகச் செயல்பட்டு, தற்போது இங்கிலாந்து அணியின் முன்னணி பந்துவீச்சாளராக இருக்கிறார், டெஸ்ட் போட்டிகளில் அவர், 126 போட்டிகளில் விளையாடி 437 விக்கெட்டுகள் எடுத்திருக்கிறார். சஹால், இன்னும் டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.