ப்ரித்வி ஷா 99, ரபாடா மிரட்டல்.. சூப்பர் ஓவரில் போட்டியை வென்ற டெல்லி #DCvsKKR | match report of DCvsKKR

வெளியிடப்பட்ட நேரம்: 17:46 (31/03/2019)

கடைசி தொடர்பு:17:46 (31/03/2019)

ப்ரித்வி ஷா 99, ரபாடா மிரட்டல்.. சூப்பர் ஓவரில் போட்டியை வென்ற டெல்லி #DCvsKKR

ப்ரித்வி ஷா 99, ரபாடா மிரட்டல்.. சூப்பர் ஓவரில் போட்டியை வென்ற டெல்லி #DCvsKKR

ஓரு கிரிக்கெட் போட்டியின் வெற்றி, தோல்வியைத் தாண்டி, ‘இது அதுக்கும் மேல’ என ரசிகர்கள் கொண்டாடும்படியான போட்டிகள் நடப்பது சில முறைதான். ப்ரித்வி ஷா 99, ரஸல் அதிரடி, 2019 ஐபிஎல் தொடரின் முதல் சூப்பர் ஓவர், ரபாடா மிரட்டல் என ஃபெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நேரலையில் பார்த்த ரசிகர்களுக்கும் சரி, டி.வியில் பார்த்த ரசிகர்களுக்கும் சரி, இந்த போட்டி சிறந்த கிரிக்கெட் அனுபவத்தைக் கொடுத்திருக்கும். #DCvsKKR

ரஸலுக்கு முன்.. ரஸலுக்கு பின்

டாஸ் வென்ற டெல்லி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், பெளலிங்கை தேர்வு செய்தார். தொடக்க வீரர்கள் நாயக், கிறிஸ் லின் ஜோடி சுமாராக விளையாடினர். பவர்ப்ளேவில், டெல்லி கேபிடல்ஸின் லெக் ஸ்பின்னர் சந்தீப் லமிசானே வீசிய இரண்டு ஓவர்களில், வெறும் 7 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். டெல்லியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாத கொல்கத்தாவின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். 9.4 ஓவர்களில், 61/5 எனக் கொல்கத்தா தடுமாறியபோது ரஸல் களமிறங்கினார். இந்த போட்டியிலும் ரஸலின் ஜாலம் தொடர்ந்தது.

ரஸல் #DCvsKKR

கொல்கத்தா அணி 120 ரன்களை எட்டுமா என்று நினைத்தபோது மோரிஸ், படேல் பந்துகளைப் பதம்பார்த்த ரஸல், வெறும் 23 பந்துகளில் அரை சதம் கடந்தார். ரஸல் அதிரடியுடன் ஜோடி சேர்ந்த கேப்டன் தினேஷ் கார்த்திக், தன் பங்கிற்கு 2 சிக்சர்கள், 5 பவுண்டரிகள் விளாச, கொல்கத்தாவின் ரன் ரேட் ஏறியது. 20 ஓவர்கள் முடிவில், கொல்கத்தா 185 ரன்கள் எடுத்தது.

ப்ரித்வி ஷா 99

186 ரன்கள் இலக்கைக் கொண்டு களமிறங்கிய டெல்லி அணிக்கு, தொடக்கத்திலேயே விக்கெட் சரிந்தது. அதிரடியாகத் தொடங்கிய ஓப்பனிங் பேட்ன்ஸ்மேன் தவன், வந்த வேகத்தில் 1 சிக்ஸர், 2 பவுண்டரிகள் அடித்து அடுத்த பந்திலேயே கேட்ச் கொடுத்து அவுட்டானார்.  ஸ்பின்னர் சுனில் நரினே விளையாடாத நிலையில், குல்தீப் யாதவின் சுழலை நம்பியது கொல்கத்தா அணி. பவர்ப்ளே முடிந்த அடுத்த ஓவருக்கு குல்தீப்பை இறக்கினார் கேப்டன் தினேஷ் கார்த்திக். சுழற்பந்துவீச்சை எதிர்த்து களத்தில் நின்ற ஷா - ஸ்ரேயாஸ் ஐயர் கூட்டணி, குல்தீப்பின் முதல் இரண்டு ஓவரில் 33 ரன்கள் எடுத்தனர்.

#DCvsKKR

கொல்கத்தாவுக்கு ரஸல், டெல்லிக்கு ப்ரித்வி ஷா என்பதைப் போல 3 சிக்சர்கள், 12 பவுண்டரிகள் விளாசினார் ஷா. கடினமான இலக்கை சேஸ் செய்யும்போது, ஃபெர்க்யூசன் வீசிய ஷார்ட் பாலை ஷா எதிர்கொண்டபோது,  பேட்டைத் தொட்டு எட்ஜானது. தலைக்கு மேல் சென்ற பந்தை தினேஷ் கார்த்திக் கேட்ச் பிடிக்க, சதம் அடிக்கும் வாய்ப்பை 1 ரன்னில் நழுவவிட்டார். ஐபிஎல் தொடரில் சதமடித்த இளம் வீரர் என்ற சாதனை ஷாவுக்கு கைகூடவில்லை.

ப்ரித்வி ஷா பெவிலியன் திரும்பும் போது டெல்லி அணி வெற்றி பெற, 9 பந்துகளில் 12 ரன்கள் எடுக்க வேண்டிய இருந்தது. களத்தில் இருந்த இன்கிராம், ஹனுமா விஹாரி சமாளித்து அடிக்க, கடைசி ஓவரில் 6 ரன்கள் தேவைப்பட்டது. குல்தீப் யாதவின் கடைசி ஓவரில் 5 ரன்களுக்கு 1 விக்கெட் போக, சூப்பர் ஓவருக்கு இரு அணிகளும் தயாராகின.

ர-பா-டா

கொல்கத்தாவின்  ப்ரசித் கிருஷ்ணா சூப்பர் ஓவர் வீசத் தயாராக,டெல்லி கேபிடல்ஸ் சார்பாக ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட் பேட்டிங் இறங்கினர். இரண்டாவது பந்தில் பவுண்டரி விளாசிய ஸ்ரேயர் ஐயர், அவுட் சைடு ஆஃபில் வந்த அடுத்த பந்தை தூக்கி அடித்து கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்த இரண்டு பந்துகளில் ப்ரித்வி ஷா, பண்ட் டபுள்ஸ் ஓட, சூப்பர் ஓவர் முடிவில் 10 ரன்கள் எடுத்தது டெல்லி கேபிடல்ஸ்.

#DCvsKKR

6 பந்துகளில் 11 ரன்கள் தேவை. ரஸலும், தினேஷ் கார்த்திக்கும் களமிறங்க, ரபாடா பந்துவீசினார். முதல் பந்தில் பவுண்டரி. ஃபீல்டர்கள் இல்லாத கேப்பில் அழகாகப் பந்தை தட்டினார் ரஸல். அடுத்த பந்து டாட் பால். சிங்கிள்ஸ் ஓடவும் நேரமில்லை.  “ரஸல் இருக்கார்” என்ற நம்பிக்கையில் கொல்கத்தா ரசிகர்கள் குஷியாக இருக்க, ஜாலத்துக்கே மாயாஜாலம் காட்டினார் ரபாடா. சிறப்பான யார்க்கர் பந்து, கிடைத்த கேப்பில் புகுந்து மிடில் ஸ்டம்பை தொட்டது. ரஸல் அவுட். டெல்லி ரசிகர்கள் அப்போதே கொண்டாட்டங்களை தொடங்கிவிட்டனர். மூன்று பந்துகளில் 7 ரன்கள், ஸ்ட்ரைக்கிங் எண்டில் உத்தப்பா. மிரட்டல் பந்துவீச்சை தொடர்ந்தார் ரபாடா, விளைவு சிங்கிள்ஸ் மட்டுமே போனது. 

விறுவிறுப்பான போட்டி முடிவுக்கு வந்தது. ஆர்ப்பரித்த டெல்லி வீரர்கள், சூப்பர் ஓவர் வெற்றியைக் கொண்டாடினர்.  கடினமான இலக்கை சேஸ் செய்யும்போது, களத்தில் நின்று விளையாடிய ப்ரித்வி ஷா ஆட்ட நாயகன் விருதைப் பெற்றார். 


டிரெண்டிங் @ விகடன்