`ரெக்கார்டு பாட்னர்ஷிப்; ஒரே இன்னிங்ஸில் 2 சதங்கள்!’ - ஆர்.சி.பிக்கு 232 ரன்கள் இலக்கு #SRHvRCB | IPL 2019: SRH sets 232 runs massive target to RCB

வெளியிடப்பட்ட நேரம்: 17:53 (31/03/2019)

கடைசி தொடர்பு:08:38 (01/04/2019)

`ரெக்கார்டு பாட்னர்ஷிப்; ஒரே இன்னிங்ஸில் 2 சதங்கள்!’ - ஆர்.சி.பிக்கு 232 ரன்கள் இலக்கு #SRHvRCB

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கெதிரான ஐ.பி.எல் லீக் போட்டியில் முதலில் பேட் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு ரன்கள் குவித்தது. 

வார்னர் - பேரிஸ்டோவ் ஜோடி

ஹைதராபாத்தில் நடைபெறும் ஐ.பி.எல் தொடரின் 11வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதுகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆர்.சி.பி கேப்டன் விராட் கோலி ஃபீல்டிங் தேர்வு செய்தார். 
இதையடுத்து ஹைதராபாத் அணியின் இன்னிங்ஸை வார்னர்  மற்றும் பேரிஸ்டோவ் ஆகியோர் தொடங்கினர். தொடக்கம் முதலே அதிரடி காட்டிய இந்த ஜோடி, ஆர்.சி.பி பௌலர்களைக் கடுமையாகச் சோதித்தது. பவர் பிளே ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 59 ரன்கள் குவித்த இந்த ஜோடி, அதன்பிறகு ரன் குவிக்கும் வேகத்தை அதிகப்படுத்தியது. வேகப்பந்துவீச்சாளர்கள், ஸ்பின்னர்கள் என இந்த ஜோடியைப் பிரிக்க ஆர்.சி.பி கேப்டன் விராட் கோலி எடுத்த முயற்சிகள் 17வது ஓவர் வரை பலிக்கவில்லை. 

பேரிஸ்டோவ்


ஐ.பி.எல் போட்டிகளில் 28 பந்துகளில் முதல் அரை சதத்தைப் பதிவு செய்த பேரிஸ்டோவ் 52 பந்துகளில் முதல் சதமாக மாற்றினார். 56 பந்துகளில் 7 சிக்ஸர்கள், 12 பவுண்டரிகளுடன் 114 ரன்கள் எடுத்து அவர் ஆட்டமிழந்தார். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 185 ரன்கள் சேர்த்தது. ஐ.பி.எல் தொடரில் முதல் விக்கெட்டுக்கு எடுக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் இதுவே. இதற்கு முன்பாகக் கடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல் தொடரில் குஜராத் லயன்ஸ் அணிக்கெதிரான போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் கௌதம் காம்பிர் மற்றும் கிறிஸ் லின் ஜோடி 184 ரன்கள் சேர்த்ததே சாதனையாக இருந்து வந்தது. 

வார்னர்


அடுத்துவந்த விஜய் சங்கர் 9 ரன்களில் வெளியேறினார். மறுமுனையில், அதிரடி காட்டிய டேவிட் வார்னர் கடைசி ஓவரில் சதமடித்து அசத்தினார். 32 பந்துகளில் அரைசதமடித்த அவர் 54 பந்துகளில் சதமடித்தார். இதன்மூலம் ஹைதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 231 ரன்கள் எடுத்தது. வார்னர் 55 பந்துகளில் 100 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆர்.சி.பி தரப்பில் சாஹல் ஒரு விக்கெட் வீழ்த்தினார்.