பவர் ப்ளேவில் கலக்கிய நபி; பேட்ஸ்மேன்கள் சொதப்பல்! - 118 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற ஹைதராபாத் #SRHvRCB | IPL 2019: SRH won by 118 runs against RCB

வெளியிடப்பட்ட நேரம்: 19:47 (31/03/2019)

கடைசி தொடர்பு:08:18 (01/04/2019)

பவர் ப்ளேவில் கலக்கிய நபி; பேட்ஸ்மேன்கள் சொதப்பல்! - 118 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற ஹைதராபாத் #SRHvRCB

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கெதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 118 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. 

ஹைதராபாத் அணி வீரர்கள்

ஹைதராபாத்தில் நடைபெற்ற ஐ.பி.எல் தொடரின் 11-வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆர்.சி.பி கேப்டன் விராட் கோலி ஃபீல்டிங் தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய ஹைதராபாத் அணிக்கு தொடக்க வீரர்கள் வார்னர் மற்றும் பேரிஸ்டாவ் ஆகியோர் சிறப்பான தொடக்கம் கொடுத்தனர். இந்த ஜோடியின் சாதனை பாட்னர்ஷிப்பால் ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 231 ரன்கள் குவித்தது. பேரிஸ்டோவ் 114 ரன்களும் வார்னர் 100 ரன்களுடன் ஆட்டமிழக்காமலும் இருந்தனர். 

முகமது நபி

இதையடுத்து, இமாலய இலக்குடன் களமிறங்கிய பெங்களூர் அணி, பார்த்திவ் படேலுடன் ஹெட்மெயரைத் தொடக்க வீரராகக் களமிறக்கியது. ஆனால், இந்த மாற்றம் எடுபடவில்லை. இரண்டாவது ஓவரை வீசிய நபி பந்துவீச்சில் இந்த ஜோடி பிரிந்தது. பார்த்திவ் படேல் 11 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதையடுத்து, ஹெட்மெயர், டிவிலியர்ஸ் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை ஆர்.சி.பி இழந்தது. பவர்பிளேயில் பந்துவீசிய முகமது நபி, முதல் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். பவர் பிளேவுக்குப் பிறகான முதல் பந்தில் கேப்டன் கோலியும் நடையைக் கட்டினார். அடுத்த பந்தில் மொயின் அலியும் ஆட்டமிழந்தார். இதனால், ஒருகட்டத்தில் அந்த அணி 35 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 

இதையடுத்து கைகோத்த கிராண்ட் ஹோம் - ரே பர்மன் ஜோடி 7 விக்கெட்டுக்கு 51 ரன்கள் சேர்த்தது. இளம் வீரர் ரே பர்மன் 19 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். உமேஷ் யாதவ் 14 ரன்களிலும் கிராண்ட் ஹோம் 37 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். 19.5 ஓவர்களில் ஆர்.சி.பி 113 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால், 118 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வெற்றிபெற்றது. முகமது நபி 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். 114 ரன்கள் குவித்த பேரிஸ்டோவ் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

போட்டி முடிந்து பேசிய ஆர்.சி.பி. அணியின் கேப்டன் கோலி, ``இது எங்களின் மோசமான தோல்வி!" என்று குறிப்பிட்டுள்ளார்.