`எதுவுமே வொர்க் அவுட் ஆகவில்லை; மோசமான தோல்வி!’ - விராட் கோலி வேதனை #SRHvRCB | 'Nothing went right for us from ball one' says Virat Kohli

வெளியிடப்பட்ட நேரம்: 07:31 (01/04/2019)

கடைசி தொடர்பு:07:31 (01/04/2019)

`எதுவுமே வொர்க் அவுட் ஆகவில்லை; மோசமான தோல்வி!’ - விராட் கோலி வேதனை #SRHvRCB

`இது ஒரு மோசமான தோல்வி. இது குறித்து என்ன சொல்வது, விளக்குவது மிகவும் கடினம்' என்று விராட்கோலி தோல்வி குறித்து அதிருப்தி அடைந்துள்ளார்.

விராட் கோலி

ஹைதராபாத் - பெங்களூர் அணிகளுக்கு இடையேயான ஐ.பி.எல் லீக் போட்டி நேற்று நடைபெற்றது. ஹைதராபாத் அணிக்கு தொடக்க வீரர்கள் வார்னர் மற்றும் பேரிஸ்டாவ் ஆகியோர் சிறப்பான தொடக்கம் கொடுத்தனர். இந்த ஜோடியின் சாதனை பாட்னர்ஷிப்பால் ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 231 ரன்கள் குவித்தது. பேரிஸ்டோவ் 114 ரன்களும் வார்னர் 100 ரன்களுடன் ஆட்டமிழக்காமலும் இருந்தனர். பின்னர் களமிறங்கிய பெங்களூர் அணியின் பேட்டிங் ஆர்டர் சீட்டுக்கட்டுப் போல் சரியவே 113 ரன்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து தோல்வியை தழுவியது பெங்களூர்.

ஹைதராபாத்

இந்தத் தோல்வி குறித்து பேசிய விராட் கோலி, ``இது ஒரு மோசமான தோல்வி. இந்தத் தோல்வி குறித்து என்ன சொல்வது.. விளக்குவது கடினம் தான். ஹைதராபாத் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். முன்னாள் சாம்பியன்கள் என்பதை அவர்கள் நிரூபித்துவிட்டனர். பிட்சை புரிந்துகொண்டு அவர்கள் சரியாக ஆடினர். பேர்ஸ்டோ, வார்னர் பேட் செய்தபோது பலதரப்பட்டதையும் நாங்கள் சோதித்திருக்கலாம், குறிப்பாக பவுன்சர்கள் வீசியிருக்கலாம்.

விராட் கோலி

நாங்கள் ஆடியபோது, தொடக்க ஓவரிலே ரன் குவிக்க எண்ணினேன். ஆனால் அது முடியாமல் போனது, 3 ரன்களில் ஆட்டமிழந்தேன். எங்களுக்கு முதல் பந்திலிருந்தே எதுவும் சரியாக அமையவில்லை. நானும் ஏ.பி.டிவில்லியர்ஸூம் சேர்ந்து பேட் செய்திருந்தால் சமநிலையாக இருந்திருக்கும். 11 ஆட்டங்கள் மீதமிருக்கின்றன. வெற்றிக்கணக்கை உருவாக்குவதற்கான வழிவகைகளைக் கண்டுபிடிக்க வேண்டும். அடுத்த போட்டி நல்லதொருபோட்டியாக அமையும்'' என்று தெரிவித்துள்ளார்.