`ரிஸ்ட் ஸ்பின்னராக தாஹிரின் செயல்பாடு அபாரமானது!’ - சிலாகித்த தோனி #CSKvRR | As a wrist spinner with the dew, Tahir did really well, says Dhoni

வெளியிடப்பட்ட நேரம்: 08:31 (01/04/2019)

கடைசி தொடர்பு:08:31 (01/04/2019)

`ரிஸ்ட் ஸ்பின்னராக தாஹிரின் செயல்பாடு அபாரமானது!’ - சிலாகித்த தோனி #CSKvRR

கடினமான சூழலிலும் சுழற்பந்துவீச்சாளர் இம்ரான் தாஹிர் சிறப்பாகப் பந்துவீசியதாக சென்னை சூப்பர்கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி பாராட்டியிருக்கிறார். 

தோனி

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐ.பி.எல் லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சென்னை சூப்பர்கிங்ஸ் அணி, 8 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. முதலில் பேட் செய்த சி.எஸ்.கே ஒரு கட்டத்தில் 27 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. தோனி, ரெய்னா ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால், சென்னை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் குவித்தது. கடைசி 3 பந்துகளையும் சிக்ஸர்களாக மாற்றிய கேப்டன் தோனி 46 பந்துகளில் 75 ரன்கள் குவித்து அசத்தினார். 

சென்னை அணி வீரர்கள்

அதேபோல், ராஜஸ்தான் அணியின் சேஸிங்கின்போது பனிப்பொழிவு அதிகமாக இருந்ததால் சுழற்பந்துவீச்சாளர்கள் பந்துவீசுவது கடினமாக இருந்தது. ஹர்பஜனுக்குப் பதிலாக பிளேயிங் லெவனில் இடம்பிடித்து நியூஸிலாந்து சுழற்பந்துவீச்சாளர் மிட்செல் சாட்னர், 2 ஓவர்கள் பந்துவீசி 26 ரன்கள் விட்டுக் கொடுத்தார். அதேபோல், மற்றொரு சுழற்பந்துவீச்சாளரான ஜடேஜா, 2 ஓவர்களில் 23 ரன்கள் விட்டுக் கொடுத்தார். ஆனால், இம்ரான் தாஹிர் சிறப்பாகப் பந்துவீசி அசத்தினார். தனக்கு ஒதுக்கப்பட்ட 4 ஓவர்களில் 23 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்த அவர், திரிபாதி மற்றும் ஸ்மித் ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பிராவோ

கடைசி நேரத்தில் ஸ்டோக்ஸ் மற்றும் ஜோஃப்ரா ஆர்ச்சர் ஆகியோர் அதிரடி காட்டினர். இருப்பினும் கடைசி ஓவரில் 12 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற சூழலில் பந்துவீசிய டிவைன் பிராவோ, அந்த ஓவரில் 3 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினார். இதனால், சென்னை அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்றது. நடப்பு ஐ.பி.எல் தொடரில் சென்னை அணிக்கு இது ஹாட்ரிக் வெற்றியாகும். 

இம்ரான் தாஹிர்

போட்டிக்குப் பின்னர்  பேசிய சென்னை அணியின் கேப்டன் தோனி, `பாட்னர்ஷிப் அமைத்து ரன் குவிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தோம். அந்த நேரத்தில் அணிக்கு அது தேவையாக இருந்தது. ஏனெனில் பனிப்பொழிவு இருக்கும் என்பதை நாங்கள் அறிந்திருந்தோம். எதிரணியில் வலது கை பேட்ஸ்மேன்கள் சிலர் மட்டுமே இருந்ததால், ஹர்பஜன் சிங் பிளேயிங் லெவனில் இடம்பெறவில்லை.

தோனி

ஐ.பி.எல் தொடர் போன்ற நீண்டநாள்கள் நடைபெறும் தொடரில் வழக்கம்போல் பேட்ஸ்மேன்கள் மற்றும் பௌலர்கள் தங்கள் ஆட்டத்தை மேம்படுத்திக் கொள்வார்கள் என்று நம்புகிறேன். கைவிரல்களைப் பயன்படுத்தி பந்துவீசும் ரிஸ்ட் ஸ்பின்னர்கள் பனிப்பொழிவு இருக்கும் நேரத்தில் பந்துவீசுவது கடினம். ஆனால், லெக் ஸ்பின்னர் (இம்ரான் தாஹிர்) சிறப்பாகப் பந்துவீசினார். பனிப்பொழிவு நேரத்தில் ரிஸ்ட் ஸ்பின்னராக தாஹிர் சிறப்பாகச் செயல்பட்டார்’’ என்று கூறினார்.