ஒன்றரை ஆண்டுகளாக நடைபெறும் அணித் தேர்வு; உலகக்கோப்பை தொடருக்கான அணி அறிவிப்பு எப்போது? | Indian cricket team selecting head MSK prasad on WC squad

வெளியிடப்பட்ட நேரம்: 09:15 (02/04/2019)

கடைசி தொடர்பு:11:34 (02/04/2019)

ஒன்றரை ஆண்டுகளாக நடைபெறும் அணித் தேர்வு; உலகக்கோப்பை தொடருக்கான அணி அறிவிப்பு எப்போது?

இந்திய அணி

இந்தியாவில் தற்போது ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழா நடைபெற்று வருகிறது. ஒவ்வோர் அணியும் வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் முன்னேறக் கடுமையாக முயற்சிகள் செய்து வருகின்றது. ஐ.பி.எல் தொடர் முடிந்த இரண்டு வாரத்தில் இங்கிலாந்து மண்ணில் உலகக்கோப்பை தொடர் தொடங்கவுள்ளது. இங்கிலாந்து மண்ணில் நடைபெறும் 5-வது உலகக்கோப்பைத் தொடர் இதுவாகும். இந்திய அணி, இங்கிலாந்து மண்ணில் இரண்டாவது முறையாக உலகக்கோப்பை தொடரை கைப்பற்றும் முனைப்புடன் களமிறங்கவுள்ளது. 1983-ம் ஆண்டு கபில்தேவ் தலைமையில் இந்திய அணி இங்கிலாந்து மண்ணில் உலகக்கோப்பை தொடரை கைப்பற்றி இருந்தது குறிப்பிடத்தக்கது. 

ஐ.பி.எல் தொடரின் முதல் பாதியில் சிறப்பாக விளையாடும் வீரர்களுக்கு உலகக்கோப்பை தொடரின் விளையாடும் வாய்ப்புகள் கிடைக்கும் எனக் கூறப்பட்டது. எனினும் முக்கிய வீரர்கள் ஐ.பி.எல் தொடரில் தொடர்ந்து விளையாடக் கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்து வந்தது. ஐ.பி.எல் தொடருக்கு முன்னதாகவே, வீரர்களின் தேர்வு முடிவு செய்யப்பட்டு விட்டதாகவும் ஒரு இடத்தில் மட்டும், சூழலுக்கு தகுந்தப்படி மாற்றம் இருக்கும் என இந்திய அணியின் கேப்டன் கோலி தெரிவித்திருந்தார்.  

உலகக்கோப்பை அணிக் குறித்து பிரசாத்

இந்த நிலையில், இந்திய தேர்வுக்குழுத் தலைவர் எம்.எஸ்.கே பிரசாத் ஆந்திர மாநிலம் ஸ்ரீகாளகஸ்தி கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி தேர்வு குறித்துப் பேசினார்.  ``கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இந்தத் தொடருக்கான அணித் தேர்வு நடைபெற்று வந்தது. இந்த இடைப்பட்ட காலத்தில் பல்வேறு காம்பினேஷன்களை பரிசோதித்துப் பார்த்திருக்கிறோம். நாங்கள் அறிவிக்கும் அணி கோப்பையை வெல்லும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது” என அவர் தெரிவித்தார். மேலும், வரும் 20-ம் தேதிக்குள் இந்திய அணி அறிவிக்கப்படும் என்றும் அவர் உறுதிப்படத் தெரிவித்தார்.

உலகக்கோப்பைத் தொடர் மே 30-ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், அதற்கு ஒரு மாதத்துக்கு முன்னதாக பங்கேற்கும் அணிகள், வீரர்கள் பட்டியலை அறிவிக்க வேண்டும். தொடர் தொடங்கும் 7 நாள்களுக்கு முன்னதாக அதில் ஐ.சி.சி அனுமதியுடன் மாற்றங்கள் செய்யலாம்.