``அவர்களை வீழ்த்துவது எப்படின்னுதான் ஐடியா கேட்டேன்!'- `ஹாட்ரிக்' எடுத்த இளம்புயல் சாம் கரன்! | I didn’t really know about the hat-trick says punjab player Sam Curran

வெளியிடப்பட்ட நேரம்: 17:40 (02/04/2019)

கடைசி தொடர்பு:17:40 (02/04/2019)

``அவர்களை வீழ்த்துவது எப்படின்னுதான் ஐடியா கேட்டேன்!'- `ஹாட்ரிக்' எடுத்த இளம்புயல் சாம் கரன்!

``ஹாட்ரிக் எடுத்ததே எனக்குத் தெரியவில்லை'' என பஞ்சாப் அணியின் இளம் வீரர் சாம் கரன் பேசியுள்ளார்.

சாம் கரன்

டெல்லி அணிக்கு எதிரான போட்டியில், 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று தனது மூன்றாவது வெற்றியைப் பதிவுசெய்துள்ளது கிங்ஸ் லெவன் பஞ்சாப். இந்தப் போட்டியில் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தவர், பஞ்சாப் அணியின் இளம் வீரர் சாம் கரன். பேட்டிங்கில் 10 பந்துகள் பிடித்து மூன்று பவுண்டரிகள் ஒரு சிக்ஸருடன் 20 ரன்கள், பௌலிங்கில் ஹாட்ரிக் உடன் நான்கு விக்கெட்டுகள் என கெய்லுக்குப் பதிலாகக் களம் புகுந்ததற்கான பலனைப் பெற்றுக்கொடுத்துவிட்டார், இந்த 20 வயதே ஆன  இடதுகைப் பந்துவீச்சாளர். 

சாம் கரன்

144/3 என்று இருந்த டெல்லியை 152 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் சுருட்ட உதவியது, இவரது அந்த ஹாட்ரிக் தான். இது, இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் முதல் ஹாட்ரிக்கும்கூட. இதனால், நேற்று ஒரே இரவில் ஹீரோவாக உயர்ந்துள்ளார் சாம் கரன். இந்நிலையில், நேற்றைய போட்டி குறித்துப் பேசிய சாம் கரன், ``நான் ஹாட்ரிக் எடுத்ததே எனக்குத் தெரியவில்லை. போட்டியை வென்ற பிறகு, சக வீரர் ஒருவர் வந்துதான் நீ ஹாட்ரிக் எடுத்திருக்கிறாய் எனக் கூறினார். அதன்பிறகுதான் எனக்குத் தெரிந்தது. ஹாட்ரிக் எடுத்தேன் என்ற ஐடியா என்பதே எனக்கு இல்லை. அஷ்வின் என்ன சொன்னாரோ அதைத்தான் செய்தேன். 

சாம்

உள்ளூர் பேட்ஸ்மேன்கள் எப்படி விளையாடுவார்கள் எனத் தெரியாது. அவர்களை வீழ்த்துவது எப்படி என சக வீரர்களிடம் கேட்டுதான் தெரிந்துகொண்டேன். கடைசி கட்டத்தில் ஷமி இரண்டு ஓவர்கள் சிறப்பாக வீசினார். இது, வெற்றிக்கு கூடுதல் பலத்தைத் தந்தது. கடந்த சில மாதங்களாக, என்னுடைய பேட்டிங்கில் கவனம் செலுத்திவருகிறேன். 

சாம்

ஆனால், ஓப்பனிங்கில் களமிறங்கியது இதுதான் முதல்முறை. இதற்கு முன், பள்ளி கிரிக்கெட்டில்தான் ஓப்பனிங் வீரராகக் களமிறங்கியுள்ளேன்" என அதிர்ச்சி விலகாமல் கூறும் சாம் கரன் தான், பஞ்சாப் அணியில் இந்த ஆண்டு அதிகத் தொகை கொடுத்து ஏலம் எடுக்கப்பட்ட வீரர். 7.20 கோடிக்கு அவர் ஏலம் எடுக்கப்பட்டார். இவரது தந்தை கெவின் கரன், ஜிம்பாப்வே அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் வீரர். அதேபோல, இவரது சகோதரர் டாம் கரன் இவரைப் போலவே இங்கிலாந்து அணிக்காக விளையாடிவருகிறார். கிரிக்கெட், இவர்களது குடும்பத்தில்  ஓர் அங்கமாக இருந்துவருகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க