ஜோஸ் பட்லர் அரைசதம்; போராடிய பவுலர்கள் - ஆர்.சி.பியை துரத்தும் தோல்வி! | rajasthan royals won the match against royal challengers bangalore

வெளியிடப்பட்ட நேரம்: 06:30 (03/04/2019)

கடைசி தொடர்பு:07:13 (03/04/2019)

ஜோஸ் பட்லர் அரைசதம்; போராடிய பவுலர்கள் - ஆர்.சி.பியை துரத்தும் தோல்வி!

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான ஐ.பி.எல் லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஆர்சிபி

ஐ.பி.எல் தொடரின் 14வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ்,  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் ரஹானே ஃபீல்டிங் தேர்வு செய்தார். பெங்களூரு அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஷிவம் துபேவுக்குப் பதிலாக அக்சீப் நாத்தும், இளம் வீரர் பிரயாஸ் ரே பர்மனுக்குப் பதிலாக நவ்தீப் சைனியும் களமிறங்குகின்றனர். இதேபோல் ஸ்டோனிஸும் இன்று களமிறங்குகிறார். அதேபோல் ராஜஸ்தான் அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. சஞ்சு சாம்சனுக்குப் பதிலாக ஸ்டூவர்ட் பின்னியும், ஜெயதேவ் உனட்கட்டுக்குப் பதிலாக வருண் ஆரோனும் களம் காண்கின்றனர். 

ராஜஸ்தான்


பார்த்தீவ் படேலுடன் இந்த முறை விராட் கோலி ஓப்பனிங் வீரராக களம்புகுந்தார். நிதானமாக ஆட்டத்தை தொடங்கியது இந்த ஜோடி. கடந்த போட்டிகளைக் காட்டிலும் இந்தப் போட்டியில் ஓரளவுக்கு ஆடினார் கேப்டன் கோலி. அவர் 23 ரன்களுக்கு அவுட் ஆகி வெளியேறினார். அவரைத் தொடர்ந்து வந்த டி வில்லியர்ஸ் 13 ரன்களிலும், ஹெட்மேயர் ஒரு ரன்னிலும் வெளியேறினர். இருப்பினும் மறுமுனையில் இருந்த பார்த்தீவ் படேலுடன் ஸ்டோனிஸ் ஜோடி சேர்ந்தார். இந்த இணை சிறப்பாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தியது. 50 ரன்கள் வரை இவர்களின் பாட்னர்ஷிப் சென்றது.சிறப்பாக ஆடிய பார்த்தீவ் படேல் 67 ரன்களில் ஆட்டமிழந்தார். கடைசி ஓவர்களில் ஸ்டோனிஸ் அதிரடி காட்டினார்.

ராஜஸ்தான்

அவரின் அதிரடி உதவியுடன் பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் அணி தரப்பில் இளம்வீரர் ஸ்ரேயாஸ் கோபால் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணிக்கு ரஹானே, பட்லர் இணை துவக்கத்தைக் கொடுத்தது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோடி, முதல் விக்கெட்டுக்கு 60 ரன்களைச் சேர்த்தது.

ரஹானேவை சஹால் வெளியேற்ற, ஸ்டிவ் ஸ்மித் களதுக்குள் வந்தார். மறுமுனையில் அதிரடி ஆட்டம் காட்டிய பட்லரை சஹால் வெளியேற்ற 13 ஓவர் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 104 ரன்களைச் சேர்த்தது ராஜஸ்தான். 18 ஓவரில் ஸ்மித் அவுட்டானாலும், அது வெற்றியை பாதிக்கவில்லை. கடைசியில் சிக்ஸர் அடித்து வெற்றியை உறுதி செய்தார் திரிபாதி. 7 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் வெற்றி பெற்றது. பெங்களூர் அணி தரப்பில் சஹால் 2 விக்கெட்டுகளையும், சிராஜ் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.