பேட்ஸ்மேன்கள் சொதப்பல்; மலிங்கா, பாண்ட்யா மிரட்டல் - ஐபிஎல்லில் மும்பையின் 100வது வெற்றி! | csk lost the match against mumbai indians

வெளியிடப்பட்ட நேரம்: 07:25 (04/04/2019)

கடைசி தொடர்பு:07:25 (04/04/2019)

பேட்ஸ்மேன்கள் சொதப்பல்; மலிங்கா, பாண்ட்யா மிரட்டல் - ஐபிஎல்லில் மும்பையின் 100வது வெற்றி!

மும்பை

ஐபிஎல் தொடரின் 15வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி ஃபீல்டிங் தேர்வு செய்தார். மும்பை அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. மிட்சல் மெக்லெனஹனுக்குப் பதிலாக பெஹ்ரென்ட்ரூப்பும், மாயங் மார்கண்டேவுக்குப் பதிலாக ராகுல் சஹாரும் இடம்பிடித்தனர். சென்னை அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டிருந்தது. மிட்சல் சாட்னருக்குப் பதிலாக மோஹித் ஷர்மா சேர்க்கப்பட்டுள்ளார்.

மும்பை

மும்பை அணிக்கு குயின்டன் டி காக் - ரோஹித் ஷர்மா இணை துவக்கம் தந்தது. கடந்த போட்டிகளில் சிறப்பாக விளையாடி வந்த டி காக் இந்த முறை ஏமாற்றினார். மூன்றாவது ஓவரிலேயே நான்கு ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆகி அதிர்ச்சி கொடுத்தார். அவரை தொடர்ந்து சிறிது நேரத்திலேயே ரோஹித்தும் வெளியேறினார். 13 ரன்கள் எடுத்தபோது அவர் அவுட் ஆனார். அடுத்த ஓவரிலேயே யுவராஜ் சிங் வெளியேற மும்பை அணி தடுமாறியது. இருப்பினும் குர்னால் பாண்டியா - சூரியகுமார் யாதவ் இணை அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தியது.

சென்னை

இந்த ஜோடி 50 ரன்களைத் தாண்டி பாட்னர்ஷிப்பைக் கொண்டு சென்றது. குர்னால் பாண்டியா 42 ரன்கள் எடுத்திருந்தபோது ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். மறுமுனையில் அதிரடியை வெளிப்படுத்திக்கொண்டிருந்த சூரியகுமார் அரை சதம் கடந்தார். 59 ரன்களில் அவரும் வெளியேற கடைசி கட்டத்தில் ஹர்திக் பாண்டியா - பொல்லார்ட் ஜோடி அதிரடியாக ஆடி ரன் சேர்த்தது. அவர்களின் அதிரடியால் மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 170 ரன்கள் சேர்த்தது. சென்னை அணி தரப்பில் ஷ்ரதுல் தாகூர் தவிர பந்துவீசிய அனைவரும் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். 

பொல்லார்ட்


171 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ். வாட்ஸன், அம்பதி ராயுடு ஜோடி, அணிக்கு துவக்கம் கொடுத்தது. பெஹ்ரென்ட்ரூப் வீசிய மூன்றாவது பந்திலே அவுட் ஆகி, மோசமான தொடக்கத்தைக் கொடுத்தார் ராயுடு. அடுத்த ஓவர் மலிங்கா வீச, 5 ரன்களில் வாட்சன் நடையைக் கட்டினார். 2 ஓவரில் 2 விக்கெட்டுகளை இழந்து 6 ரன்களில் தடுமாறியது சென்னை. அடுத்ததாக களமிறங்கிய ரெய்னாவும், கேதார் ஜாதவும் நம்பிக்கை அளிப்பார்கள் என்று எண்ணியிருந்த நிலையில், 5 ஓவரில் பெஹ்ரென்ட்ரூப் வீசிய பந்தை ரெய்னா தூக்கி அடிக்க அதை பொல்லார்ட் லாவகமாகப் பிடித்தார். ரெய்னாவும் பெவிலியனுக்குத் திரும்ப, தோனி மைதானத்துக்குள் வந்தார்.

மும்பை

ஆனால், கடந்த போட்டியில் மாஸ் காட்டிய தோனி, இந்த ஆட்டத்தில் 12 ரன்களில் வெளியேறினார். அடுத்தடுத்து களமிறங்கிய பேட்ஸ்மேன்கள் பெரியதாக ரன்கள் எதுவும் சோபிக்கவில்லை. மறுமுனையில் நிலைத்து ஆடிய கேதார் ஜாதவ், அரைசதத்தை கடந்து நம்பிக்கை கொடுக்க,  அவரை மலிங்கா வெளியேற்றினார். பேட்ஸ்மேன்கள் சொதப்பலால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் சென்னை 8 விக்கெட்டுகளை இழந்து 133 ரன்களை மட்டுமே சேர்த்தது. மும்பை அணி சார்பில், அதிகபட்சமாக மலிங்கா, ஹர்திக் பாண்ட்யா தலா 3 விக்கெட்டுகளையும், பெஹ்ரென்ட்ரூப் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.