`சவாலில் ஜெயித்து விட்டேன் வார்னே' - மாறுவேடத்தில் தி.நகர் வீதிகளில் சுற்றித்திரிந்த ஹெய்டன்! #Viral | Matthew Hayden went to chennai T-Nagar for shopping

வெளியிடப்பட்ட நேரம்: 08:10 (04/04/2019)

கடைசி தொடர்பு:08:10 (04/04/2019)

`சவாலில் ஜெயித்து விட்டேன் வார்னே' - மாறுவேடத்தில் தி.நகர் வீதிகளில் சுற்றித்திரிந்த ஹெய்டன்! #Viral

வார்னே உடன் செய்துகொண்ட சவாலை நிறைவேற்றுவதற்காக மேத்யூ ஹெய்டன் செய்த காரியம் வைரலாகியுள்ளது.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி வீரர் மேத்யூ ஹெய்டன். இவர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டதால் தற்போது கிரிக்கெட் போட்டிகளில் வர்ணனையாளராக பணிபுரிந்துவருகிறார். ஐ.பி.எல் சீசன் தொடங்கியுள்ளதால் இந்தியாவில் முகாமிட்டுள்ள ஹெய்டன், ஐ.பி.எல் போட்டிகளில் வர்ணனை செய்து வருகிறார். இதற்கிடையே, ஹெய்டன் மாறுவேடத்தில் சென்ற சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. மாறுவேடத்தில் அவர் சென்ற இடம் எங்கு தெரியுமா, சென்னை திநகர் தான். முகத்தில் தாடி, மீசையுடன், பாரம்பர்ய வேட்டி உடுத்திக்கொண்டு, சட்டை, தொப்பி என தி.நகர் வீதிகளில் ஸ்டைலாக சுற்றித் திரிந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் ஹெய்டன். கூடவே `சென்னை தி.நகரில் ஒரு ரகசிய ஷாப்பிங்' எனப் பதிவிட்டுள்ளார். 

ஹெய்டன்

இப்படி மாறுவேடத்தில் சென்றது எதற்காக என்பது குறித்து அவர் தற்போது பேசியுள்ளார். இதுகுறித்து டைம்ஸ் ஆப் இந்தியாவுக்கு அளித்துள்ள பேட்டியில், ஆஸ்திரேலியே அணியின் மற்றொரு முன்னாள் வீரர் வார்னே உடன் மேற்கொண்ட சவாலை நிறைவேற்றுவதற்காகவே இப்படி மாறுவேடத்தில் சென்றதாகக் கூறியுள்ளார். ``1,000 ரூபாய்க்கு குறைவாக பொருள்களை வாங்க முடியாது என வார்னே சவால் விட்டார். அதனாலேயே இப்படிச் சென்றேன். தி.நகரில் லுங்கி, சட்டை, வாட்ச் உள்ளிட்ட பொருள்களை வாங்கினேன். எனக்கு ஒரு உள்ளூர் பையன் ஒருவன் உதவி புரிந்தான். அவனுக்கு 100 ரூபாய் கொடுத்தேன். இப்போது பெருமையாகச் சொல்வேன் சவாலில் நான் வெற்றி என்று" என அவர் கூறியுள்ளார். 

ஹெய்டன்

ஹெய்டன் சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெற்ற பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக மூன்று ஆண்டுகள் விளையாடினார். அதன்பிறகு டி.என்.பி.எல் போட்டிகளின்போதும் அவர் சென்னைக்கு வருகிறார். ஆஸ்திரேலியாவுக்கு அடுத்து அவர் அதிகமாக இருக்கும் இடம் சென்னைதான். சமீபத்தில்கூட டி.என்.பி.எல் போட்டிகளுக்காக மதுரைக்குச் சென்றவர் அங்கு, சிலம்பாட்டம் உள்ளிட்டவை விளையாடிய வீடியோ வைரலாக வலம்வந்த நிலையில் ஆள் நடமாட்டம் அதிகம் இருக்கும் தி.நகர் வீதிகளில் அவர் மாறுவேடத்தில் சென்ற புகைப்படங்களும் வைரலாகி வருகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க