பும்ரா கண்ணில் காயத்தைக் கவனித்தீர்களா? - உலகக் கோப்பை வருகிறது பாஸ்...! | Bumrah has injury in his eye during match against CSK

வெளியிடப்பட்ட நேரம்: 11:25 (04/04/2019)

கடைசி தொடர்பு:11:25 (04/04/2019)

பும்ரா கண்ணில் காயத்தைக் கவனித்தீர்களா? - உலகக் கோப்பை வருகிறது பாஸ்...!

சென்னை அணிக்கு எதிரான போட்டியின்போது பும்ரா கண்ணில் இருந்த காயம் சமூக வலைதளத்தில் பெரும் விவாதத்தை கிளப்பியது. உலகக்கோப்பை தொடர் தொடங்கவுள்ள நிலையில் இந்தக் காயம் அதிக கவனம் பெற்றிருக்கிறது.  

பும்ரா 

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் மும்பை - சென்னை அணிகள் மோதின. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இந்தப் போட்டியில் மும்பை அணி சென்னை அணியை வீழ்த்தி, சென்னையின் தொடர் வெற்றிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது. மும்பையின் வெற்றிக்குக் கடைசி நேர அதிரடி மற்றும் சிறப்பான பந்துவீச்சும் முக்கிய காரணம். மலிங்கா மற்றும் பும்ரா என இரண்டு டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட்டுகளுடன் களமிறங்கி எதிரணிகளை கலங்கடித்து வருகிறது மும்பை. 

இந்த ஐபிஎல் தொடரில், மும்பை அணிக்கு பும்ரா எத்தனை முக்கியமோ, அதேபோன்று மே மாதம் 30-ம் தேதி தொடங்கவுள்ள உலகக்கோப்பைத் தொடருக்கும் முக்கியம். பும்ரா மற்றும் புவனேஷ்வர் வேகக் கூட்டணிதான் பெரும்பாலும் இந்தப் பந்துவீச்சுக்கு தலைமை தாங்கும். இந்த நிலையில், மும்பை விளையாடிய முதலாவது ஐபிஎல் போட்டியின்போது பும்ராவுக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. அதன் காரணமாக அன்றைய போட்டியில் அவர் பேட்டிங் செய்ய களமிறங்கவில்லை. 

காயம்

ஆனால், சிறிய அளவிலான காயம் என்பதால், பும்ரா அடுத்த போட்டியில் களமிறங்கினார். இதனால் இந்திய ரசிகர்கள் நிம்மதி அடைந்தனர். இந்த நிலையில், நேற்று நடைபெற்ற சென்னை அணிக்கு எதிரான போட்டியின்போது பும்ராவின் வலது கண்ணுக்கு கீழ் வீங்கி இருந்தது. மேலும், கண்ணுக்குக்கீழ் கறுப்பாகவும் இருந்ததைக் கவனித்திருப்பீர்கள். போட்டியின்போது நேற்று சமூகவலைதளங்களில் இது பெரும் விவாதத்தையே கிளப்பியது. 

இந்தக் காயம் தொடர்பாகப் பேசிய மும்பை அணியின் பயிற்சியாளர் ஜெயவர்தனே,  ``பயிற்சியின்போது பந்தை கேட்ச் பிடிக்கும்போது அவருக்குக் கண்ணுக்கு அருகில் காயம் ஏற்பட்டது” என்றார். இந்தப் போட்டியில் விக்கெட் எதுவும் எடுக்காவிட்டாலும் முழுமையாக அவர் 4 ஓவர்கள் வீசி 27 ரன்கள் மட்டுமே கொடுத்தது ஆறுதலான விஷயமாக பார்க்கப்படுகிறது. அதாவது அவரது காயம், அவரது பந்துவீச்சைப் பாதிக்கவில்லை என்ற வாதம் முன்வைக்கப்படுகிறது. எனினும் ஐபிஎல் தொடர் முடிந்த 2 வாரத்தில் உலகக்கோப்பை தொடர் தொடங்கும் என்பதால், உலகக்கோப்பை தொடரில் விளையாடவுள்ள இந்திய வீரர்களின் உடல்நலம் மிக முக்கியமாகப் பார்க்கப்படுகிறது. 

முன்னதாக, உலகக்கோப்பை தொடரில் விளையாடவுள்ள 15 வீரர்கள் கொண்ட பட்டியல் வரும் 20-ம் தேதிக்குள் அறிவிக்கப்படும் என இந்தியத் தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே பிரசாத் தெரிவித்திருந்தார். அதன்பிறகாவது உலகக்கோப்பை தொடருக்கு தேர்வான இந்திய வீரர்களுக்கு ஐபிஎல் தொடரில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா என உலகக்கோப்பை தொடரை எதிர்பார்த்திருக்கும் இந்திய ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.