எளிய இலக்கு; பயன்தராத டெல்லி பெளலர்கள் முயற்சி - ஹைதராபாத் அணி வெற்றி! | Hyderabad won the match against Delhi

வெளியிடப்பட்ட நேரம்: 06:30 (05/04/2019)

கடைசி தொடர்பு:12:42 (05/04/2019)

எளிய இலக்கு; பயன்தராத டெல்லி பெளலர்கள் முயற்சி - ஹைதராபாத் அணி வெற்றி!

டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஹைதராபாத் சன் ரைஸஸ் அணி வெற்றி பெற்றது.

ஹைதரபாத்

ஐபிஎல் சீஸனின் 16-வது லீக் போட்டி, டெல்லி கேபிடல்ஸ் அணி மற்றும் ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற புவனேஷ்வர் குமார், முதலில் பந்துவீச்சைத் தேர்வுசெய்தார். அதன்படி, முதலில் களமிறங்கிய டெல்லி அணிக்கு, வழக்கம்போல தவான் - பிரித்திவி ஷா இணை துவக்கம் தந்தது. புவனேஷ்வர் குமார் வீசிய முதல் பந்தை பவுண்டரி அடித்து இன்னிங்ஸைத் துவக்கினார் பிரித்திவி ஷா.

டெல்லி

முதல் ஓவரிலேயே இரண்டு பவுண்டரிகள் அடித்து அதிரடி காட்டினாலும் புவனேஷ்வர் குமாரின் அடுத்த ஓவரிலேயே போல்ட் ஆகி வெளியேறினார் பிரித்திவி. அவரைத் தொடர்ந்து, சிறிது நேரத்திலேயே தவானும் வெளியேறினார். கேப்டன் ஸ்ரேயாஷ் ஐயர் மட்டும் சிறப்பாக விளையாடினார். 43 ரன்கள் எடுத்த நிலையில், அவரும் அவுட் ஆனார். மற்றவர்கள், ஹைதராபாத் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சொற்ப ரன்களில் வெளியேற, டெல்லி அணி தடுமாறியது. இடையில், கிறிஸ் மோரிஸ் மற்றும் அக்ஸர் படேல் சிறிது ரன்கள் சேர்க்க, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் டெல்லி அணி 8 விக்கெட் இழப்புக்கு 129 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஹைதராபாத் அணி தரப்பில் புவனேஷ்வர் குமார், சித்தார்த் கவுல், முகமது நபி ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

ஹைதராபாத்

130 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஹைதராபாத் அணிக்கு டேவிட் வார்னர் - ஜானி பேர்ஸ்டோ இணை துவக்கம் தந்தது. டேவிட் வார்னர் பொறுமையாக ஆட, ஜானி பேர்ஸ்டோ  அதிரடி காட்டினார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 64 ரன்களைச் சேர்த்தது. ஜானி பேர்ஸ்டோ வெளியேற, விஜய் சங்கர் களமிறங்கினார். 7-வது ஓவரில் வார்னரும் அவுட்டாக 8 ஓவர் முடிவில் 68 ரன்களைச் சேர்த்திருந்தது ஹைதராபாத். மனிஷ் பாண்டே, விஜய் சங்கர் கைகோத்தனர். ஆனால், இந்த இணை  நீண்ட நேரம் நிலைக்கவில்லை.

ஹைதராபாத்

இஷாந்த் ஷர்மா வீசிய பந்தில் பிரித்திவிஷாவிடம் கேட்ச் கொடுத்து நடையைக்கட்டினார் மனிஷ்பாண்டே. விஜய் சங்கரும், தீபக் ஹூடாவும் அடுத்தடுத்து அவுட்டானது டெல்லிக்கு கூடுதல் உற்சாகத்தை அளித்தது. இருப்பினும் யூசுப் பதானும், நபியும் இணைந்து வெற்றி இலக்கை எளிதாக எட்டினர். டெல்லி அணி சார்பில், சந்தீப், அக்ஸர் படேல், ரபடா, இஷாந்த் ஷர்மா, ராஹூல் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.