கபில்தேவின் `நடராஜ் ஷாட்' - பயிற்சியில் கலக்கும் ரன்வீர் சிங்! | Ranveer singh trains with Kapil dev for 83 movie

வெளியிடப்பட்ட நேரம்: 20:00 (06/04/2019)

கடைசி தொடர்பு:20:00 (06/04/2019)

கபில்தேவின் `நடராஜ் ஷாட்' - பயிற்சியில் கலக்கும் ரன்வீர் சிங்!

ஐ.பி.எல் மாதமாகிப்போன இந்த ஏப்ரலில் தற்போதுதான் அணிகளுக்கிடையேயான ஆட்டம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. ஐ.பி.எல் ஆட்டத்தின் கமன்டரியிலும், பரிசளிப்பு நிகழ்வின்போதும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரை நாம் காண்பதுண்டு. அவர்களில் சிலர் 1983-ல் இந்தியா முதன் முதலாக  உலகக்கோப்பை வெல்ல காரணமாயிருந்தவர்கள். 1983 உலகக்கோப்பையின் போது அவர்களின் துடிப்பான ஆட்டத்தை பாலிவுட்டில் `83 த ஃபிலிம்' என்ற பெயரில் படமாக்கவுள்ளார்கள். வழக்கமாக பாலிவுட்டின் பயோபிக் படங்கள் சக்கைபோடு போடும். மேரி கோம், எம்.எஸ் தோனி எனப் பல பயோபிக்குகள் பாலிவுட் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. அந்த வகையில் இந்தப் படமும் இருக்கும் என நம்புகிறது படக்குழு. 

ரன்வீர் சிங்

படத்தில் 1983-ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்த கபில்தேவ் கதாபாத்திரத்தில் ரன்வீர் சிங் நடிக்கிறார். இந்தியாவின் நட்சத்திர ஆட்டக்காரராக ஜொலித்த சுனில் கவாஸ்கர் கதாபாத்திரத்தில் தாஹிர் ராஜ் பாசின் நடிக்கிறார்.

ரன்வீர்

இந்தப் படத்திற்காக கபில்தேவைச் சந்தித்து அவருடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடி பயிற்சி பெற்று வருகிறார் ரன்வீர் சிங். அந்தப் புகைப்படமும், வீடியோக்களும் தற்போது ட்விட்டரில் வைரலாகி வருகிறது. கபில் தேவ்வின் டிரேட் மார்க் ஷாட்டான `நடராஜ் ஷாட்டை' அவர் அடிக்க சீனியர் கிரிக்கெட் ரசிகர்கள் ஃப்ளாஸ்பேக் ஓட்டிப் பார்க்கத் தொடங்கிவிட்டார்கள்.