`இது டீம் இல்ல... விக்ரமன் சார் படம்!' - ஜூனியர் தாஹீர், ஜூனியர் வாட்சனுடன் ரேஸ் ஓடும் தோனி #ViralVideo | Dhoni plays with juniors of Watson and imran tahir after #CSKvKXIP match

வெளியிடப்பட்ட நேரம்: 21:57 (06/04/2019)

கடைசி தொடர்பு:00:38 (07/04/2019)

`இது டீம் இல்ல... விக்ரமன் சார் படம்!' - ஜூனியர் தாஹீர், ஜூனியர் வாட்சனுடன் ரேஸ் ஓடும் தோனி #ViralVideo

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிரான ஐபிஎல் லீக் போட்டியில், சென்னை சூப்பர்கிங்ஸ் அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. 

தோனி

சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வுசெய்த சென்னை, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 160 ரன்கள் சேர்த்தது. இந்த ஐபிஎல் தொடரில் முதல் வாய்ப்பைப் பெற்ற டூப்ளசிஸ் 54 ரன்கள் எடுத்தார். கேப்டன் தோனி 37 ரன்கள் எடுத்தார். பஞ்சாப் தரப்பில், அந்த அணியின் கேப்டன் அஷ்வின் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அடுத்து களமிறங்கிய கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 138 ரன்கள் மட்டுமே எடுத்தது. பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக, சர்ப்ராஸ் கான் 67 ரன்களும் கே.எல்.ராகுல் 55 ரன்களும் எடுத்தனர். சென்னை அணி தரப்பில் ஹர்பஜன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மெய்டன் ஓவராக வீசி கெய்ல் மற்றும் மயங்க் அகர்வால் ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்திய ஹர்பஜன் சிங், ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். 

தோனி

போட்டிக்குப் பின்னர் சி.எஸ்.கே வீரர்கள் மைதானத்தில் ரிலாஸ்காக உரையாடிக்கொண்டிருந்தனர். பவுண்டரி லைன் அருகே வாட்சன் மற்றும் இம்ரான் தாஹிர் ஆகியோரின் மகன்கள் இருவரும் ஓட்டப்பந்தயத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது, அவர்களுக்கிடையே வந்த சி.எஸ்.கே கேப்டன் தோனி, அவர்களை உற்சாகப்படுத்தினார். சிறுவர்கள் இருவரும் ஓடத் தொடங்கவே, பின்னோக்கி அவர்களை உற்சாகப்படுத்திக்கொண்டே அவரும்  ஓடினார்.

தோனி
 

பின்னர், தாஹிரின் மகனை தூக்கிக்கொண்டு,  வாட்சன், தாஹிர் இருந்த இடத்துக்கு தோனி ஓடிவந்தார். சற்று பின்தங்கி வந்த வாட்சனின் மகன், மீண்டும் ஒரு ரேஸ் வைத்துக்கொள்ளலாம் எனக் கூறவே... முடியாது என புன்னகையுடன் தோனி மறுத்தார். இந்த வீடியோவை சென்னை சூப்பர்கிங்ஸ் அணி சமூக வலைதளங்களில் பகிரவே, அந்த வீடியோ வைரலாகிவருகிறது.