தப்பாகுமா தோனி கணக்கு... மேட்ச்சை மாற்றிய ஐந்து ஓவர்கள்! #CSKVsKIXP | Dhoni Muscles it With Spinning options!

வெளியிடப்பட்ட நேரம்: 10:50 (07/04/2019)

கடைசி தொடர்பு:10:50 (07/04/2019)

தப்பாகுமா தோனி கணக்கு... மேட்ச்சை மாற்றிய ஐந்து ஓவர்கள்! #CSKVsKIXP

ஸ்பின்தான் மேட்ச்சையே மாற்றியது. ரவிச்சந்திரன் அஷ்வினும், முருகன் அஷ்வினும் இணைந்து 8 ஓவர்களில் 46 ரன்களையே விட்டுக்கொடுத்தனர். வேகப்பந்து வீச்சாளர்களிடம் இருந்துதான் 114 ரன்களை அடித்தது சென்னை . ஹர்பஜன், தாஹீர், ஜடேஜா என மூன்று ஸ்பின்னர்களும் சேர்ந்து 12 ஓவர்களில், அதாவது 72 பந்துகளில் வெறும் 61 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தனர்.

தப்பாகுமா தோனி கணக்கு... மேட்ச்சை மாற்றிய ஐந்து ஓவர்கள்! #CSKVsKIXP

தோனியின் சேப்பாக்கம் கணக்கு மீண்டும் ஒருமுறை சென்னை சூப்பர் கிங்ஸை காப்பாற்றியிருக்கிறது. ஸ்பின்னே பலம் என மூன்று ஸ்பின்னர்களுடன் தோனி களமிறங்க, முஜிபுர் ரகுமானை வெளியே உட்காரவைத்துவிட்டு இரண்டு ஸ்பின்னர்களுடன் வந்தார் அஷ்வின். ரிசல்ட் சென்னைக்குச் சாதகமானது. 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றிருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ்.


டாஸ்!

டாஸ் வென்றால் என்ன செய்யவேண்டும் என்பது முதல் ப்ளேயிங் லெவன் வரை தெளிவாக இருந்தார் தோனி. டாஸ் வென்றதும் பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தவர் பிராவோவுக்கு பதிலாக நியூஸிலாந்து பெளலர் க்ருக்லின் அணிக்குள் வந்தார். மோஹித் ஷர்மாவுக்கு பதிலாக டுப்ளெஸ்ஸி அணிக்குள் வந்தார். ஹர்பஜன், தாஹீர், ஜடேஜா என மூன்று ஸ்பின்னர்கள், தீபக் சாஹர், க்ருக்லின் என இரண்டு வேகப்பந்து வீச்சாளர்கள் என பெளலிங் அட்டாக்கை நிர்மாணித்திருந்தார் தோனி. 


சென்னை சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கிறது எனத் தெரிந்தும், சென்னை வீரரான அஷ்வின் இரண்டு ஸ்பின் ஆப்ஷன்களுடனேயே வந்தார். இதுதான் அஷ்வின் கோட்டைவிட்ட இடம். மீண்டும் ஃபிட்டான கெயில் ப்ளேயிங் லெவனுக்குள் வந்தார்.

தோனி

டுப்ளெஸ்ஸி தமாக்கா!


முதல்முறையாக சென்னை அணியின் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் 50 ரன்களைத் தாண்டியது. பவர்ப்ளே ஓவர்களில் கெத்துகாட்டினார் டுப்ளெஸ்ஸி. 6 ஓவர்களில் சென்னையின் ஸ்கோர் 54 ரன்களைத் தொட்டது. பஞ்சாப் பெளலர்களில் விக்கெட் எடுத்தது அஷ்வின் மட்டுமே. வாட்சனை முதலில் அவுட்டாக்க, அவரைத்தொடர்ந்து டிப்ளெஸ்ஸியையும் அவுட்டாக்கினார் அஷ்வின். அதற்குள் 38 பந்துகளில் 4 சிக்ஸர்கள் உள்பட 54 ரன்களைத் தொட்டிருந்தார் டுப்ளெஸ்ஸி. மூன்றாவது விக்கெட்டும் அஷ்வினுக்கே. ரெய்னா போல்ட். 17 ரன்களில் அவுட் ஆனார் ரெய்னா. இதனால் சென்னையின் ரன்ரேட் குறைந்தது. ஆனால் கடைசி இரண்டு டெத் ஓவர்களில் தனது பவரைக் காட்டினார் தோனி. சாம் கரணின் 19வது ஓவரில் சென்னைக்கு 19 ரன்கள் கிடைத்தது. 2 பவுண்டரி, 1 சிக்ஸர் என மிரட்டினார் தோனி. கடைசி ஓவரை வீசவந்தார் ஷமி. ராயுடு ஒரு சிக்ஸர் அடிக்க, தோனி ஒரு பவுண்டரி அடிக்க 160 ரன்களுடன் தனது இன்னிங்ஸை முடித்தது சென்னை.

தோனி

ராகுல் -சர்ஃபரஸ் பார்ட்னர்ஷிப்!


ஹர்பஜன் சிங்கின் முதல் ஓவரிலேயே, மேட்சின் இரண்டாவது ஓவரிலேயே கெய்ல் அவுட். தோனியிடம் கேட்ச் ஆகி 5 ரன்களில் வெளியேறினார் கெய்ல். அடுத்த இரண்டாவது பாலும் விக்கெட். மயங்க் அகர்வால் டுப்ளெஸ்ஸியிடம் கேட்ச் ஆகி வெளியேறினார். இதனால் ராகுல் - சர்ஃப்ரஸ் கூட்டணி உருவானது. இருவரும் நிதானமாக ஆடினர். இருவரும் அரை சதங்கள் அடித்தனர். ஆனால் ரன்ரேட்டை கோட்டைவிட்டனர்.  12 ஓவர்களில் 91 ரன்கள் அடித்து 48 பந்துகளில் 70 ரன்கள் அடிக்கவேண்டும் என்கிற ஈஸி டார்க்கெட்டுடனேயே இருந்தது பஞ்சாப். 12வது  ஓவரில் 16 ரன்கள் அடித்தனர். க்ருக்லின் வீசிய இந்த ஓவரில் சிக்ஸர் அடித்தார் சர்ஃபரஸ் கான். ஆனால், இதற்கு அடுத்த ஐந்து ஓவர்களும் பஞ்சாபிடம் இருந்து மேட்ச்சை மாற்றியது. 

தோனி

மேட்சை மாற்றிய 5 ஓவர்கள்!

ஜடேஜா வீசிய 13வது ஓவரில் 5 ரன்கள். பவுண்டரி இல்லை. ஹர்பஜன் வீசிய 14வது ஓவரில் 4 ரன்கள். பவுண்டரி இல்லை.  இம்ரான் தாஹிர் வீசிய 15வது ஓவரில் 5 ரன்கள். பவுண்டரி இல்லை. ஹர்பஜனின் 16வது ஓவரில் மீண்டும் 5 ரன்கள், பவுண்டரி இல்லை. 17வது ஓவர் மீண்டும் இம்ரான் தாஹீர். 5 ரன்கள் மட்டுமே, பவுண்டரி இல்லை. இந்த ஐந்து ஓவரில் வெறும் 24 ரன்களையே ராகுலும், சர்ஃபரஸும் அடித்தனர். இதனால் 18 பந்துகளில் 46 ரன்கள் என மேட்ச் மாறியது. க்ருக்லினின் 18வது ஓவரில் ராகுல் அவுட். 47 பந்துகளில் 55 ரன்கள் அடித்திருந்தார் ராகுல். இவர் அவுட்டான பிறகுதான் பவுண்டரியே வந்தது. ஆனால், அடுத்த சாஹரின் ஓவரிலேயே மில்லர் அவுட். இதனால் கடைசி 6 பந்துகளில் 26 ரன்கள் தேவை என ஆட்டம் சென்னையின் கைக்கு வந்தது. 138 ரன்களுக்கு மேட்ச்சை முடித்தது பஞ்சாப்.

ஸ்பின்தான் மேட்ச்சையே மாற்றியது. ரவிச்சந்திரன் அஷ்வினும், முருகன் அஷ்வினும் இணைந்து  8 ஓவர்களில் 46 ரன்களையே விட்டுக்கொடுத்தனர். வேகப்பந்து வீச்சாளர்களிடம் இருந்துதான் 114 ரன்களை அடித்தது சென்னை . ஹர்பஜன், தாஹீர், ஜடேஜா என மூன்று ஸ்பின்னர்களும் சேர்ந்து 12 ஓவர்களில், அதாவது 72 பந்துகளில் வெறும் 61 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தனர்.  இந்த மூன்று ஸ்பின்னர்கள்தான் சென்னைக்கு ரசிகர்களை விசில் போடவைத்தவர்கள்.


இந்தவெற்றியின் மூலம் பாயின்ட்ஸ் டேபிளில் மீண்டும் முதலிடத்தைப் பிடித்திருக்கிறது சென்னை. அடுத்தப்போட்டியில் மீண்டும் சேப்பாக்கத்தில் கொல்கத்தாவை சந்திக்கிறது சென்னை. மீண்டும் மூன்று ஸ்பின்னர்களூடன் தோனி களமிறங்குவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்