`கடைசி 3 ஓவர்களில் 16 ரன்கள்!' - 149 ரன்களுடன் திருப்திப்பட்டுக் கொண்ட ஆர்.சி.பி #RCBvDC | IPL 2019: RCB sets 150 runs target to DC

வெளியிடப்பட்ட நேரம்: 17:58 (07/04/2019)

கடைசி தொடர்பு:17:58 (07/04/2019)

`கடைசி 3 ஓவர்களில் 16 ரன்கள்!' - 149 ரன்களுடன் திருப்திப்பட்டுக் கொண்ட ஆர்.சி.பி #RCBvDC

டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கெதிரான ஐபிஎல் போட்டியில் முதலில் பேட் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்தது. 

விராட் கோலி

பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் தொடரின் 20வது லீக் போட்டியில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதுகின்றன. இதில், டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் ஃபீல்டிங் தேர்வு செய்தார். இன்றைய போட்டியில் மோதும் இரண்டு அணிகளுமே இதுவரை 5 போட்டிகளில் விளையாடியிருக்கின்றன. அதில், டெல்லி அணி 2 வெற்றிகள் பெற்றுள்ள நிலையில், கோலி தலைமையிலான பெங்களூரு அணி, நடப்பு ஐபிஎல் தொடரில் ஒரு போட்டியில் கூட வெற்றிபெறவில்லை. இதனால், முதல் வெற்றியைப் பதிவு செய்யும் நோக்கில் பெங்களூரு அணி களமிறங்குகிறது. 

ரபாடா

பெங்களூரு அணியின் இன்னிங்ஸை விக்கெட் கீப்பர்  பார்த்திவ் படேலும் கேப்டன் கோலியும் தொடங்கினர். இந்த ஜோடி நீண்டநேரம் நிலைக்கவில்லை. கிறிஸ் மோரிஸ் வீசிய இரண்டாவது ஓவரின் கடைசிப் பந்தில் பார்த்திவ் படேல் 9 ரன்களுடன் வெளியேறினார். அடுத்துவந்த அதிரடி வீரர் டிவிலியர்ஸ் 17 ரன்களுடனும், ஆல்ரவுண்டர் ஸ்டோயினிக்ஸ் 15 ரன்களுடனும் ஆட்டமிழந்தனர். அப்போது பெங்களூரு அணி 10.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 66 ரன்கள் எடுத்திருந்தது. இதையடுத்து 4வது விக்கெட்டுக்கு கேப்டன் கோலியுடன் மொயின் அலி கைகோத்தார். இந்த ஜோடி 37 ரன்கள் சேர்த்தது. மொயின் அலி 18 பந்துகளில் 32 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திக்  கொண்டிருந்த கோலி, ரபாடா வீசிய 18வது ஓவரில் ஆட்டமிழந்தார். அவர், 33 பந்துகளில் 41 ரன்கள் எடுத்தார். அதே ஓவரில் அக்ஷ்தீப் நாத் மற்றும் நெகி என மூன்று விக்கெட்டுகளை ரபாடா சாய்த்தார். இதனால், பெங்களூரு அணியின் ரன் வேகம் குறைந்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணியால் 8 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. குறிப்பாகக் கடைசி 3 ஓவர்களில் பெங்களூரு அணி 16 ரன்கள் மட்டுமே எடுத்தது. டெல்லி தரப்பில் ரபாடா 4 ஓவர்கள் பந்துவீசி 21 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். கிறிஸ் மோரிஸ் 28 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.