`விசில் போடு ஆர்மியை நினைத்துப் பெருமைப்படுகிறேன்!' - நெகிழும் சுரேஷ் ரெய்னா #CSKvKXIP | Raina praises CSK fans over cleaning Chepauk stadium

வெளியிடப்பட்ட நேரம்: 20:00 (07/04/2019)

கடைசி தொடர்பு:20:00 (07/04/2019)

`விசில் போடு ஆர்மியை நினைத்துப் பெருமைப்படுகிறேன்!' - நெகிழும் சுரேஷ் ரெய்னா #CSKvKXIP

சென்னை சூப்பர்கிங்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கிடையேயான போட்டிக்குப் பின்னர் மைதானத்தைச் சுத்தப்படுத்திய சி.எஸ்.கே ரசிகர்களை சுரேஷ் ரெய்னா பாராட்டியிருக்கிறார். 

ரெய்னா

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 18வது லீக் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை, சென்னை சூப்பர்கிங்ஸ் அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வுசெய்த சென்னை, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 160 ரன்கள் சேர்த்தது. இந்த ஐபிஎல் தொடரில் முதல் வாய்ப்பைப் பெற்ற டூப்ளசிஸ் 54 ரன்கள் எடுத்தார். கேப்டன் தோனி 37 ரன்கள் எடுத்தார். பஞ்சாப் தரப்பில், அந்த அணியின் கேப்டன் அஷ்வின் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

மைதானத்தைச் சுத்தப்படுத்திய சி.எஸ்.கே. ரசிகர்கள்

அடுத்து களமிறங்கிய கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 138 ரன்கள் மட்டுமே எடுத்தது. பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக, சர்ப்ராஸ் கான் 67 ரன்களும் கே.எல்.ராகுல் 55 ரன்களும் எடுத்தனர். சென்னை அணி தரப்பில் ஹர்பஜன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மெய்டன் ஓவராக வீசி கெய்ல் மற்றும் மயங்க் அகர்வால் ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்திய ஹர்பஜன் சிங், ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். 

ரெய்னாவின் ட்வீட்

இந்தப் போட்டிக்குப் பின்னர் மைதானத்தில் சேர்ந்த குப்பையை சி.எஸ்.கே ரசிகர்கள் அகற்றியிருக்கிறார்கள். அவர்களது புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டு சி.எஸ்.கே வீரர் சுரேஷ் ரெய்னா பாராட்டியிருக்கிறார். இதுகுறித்த அவரது பதிவில், `சென்னை சேப்பாக்கம் மைதானத்தைச் சுத்தப்படுத்தும் பணியில் சி.எஸ்.கேவின் விசில் போடு ஆர்மி பங்குபெற்றது பெருமையாக இருக்கிறது. பஞ்சாப் அணிக்கெதிரான போட்டிக்குப் பின்னர் அவர்கள் மைதானத்தில் இருந்து 10 கிலோவுக்கும் அதிகமான குப்பைகளைச் சுத்தப்படுத்தியிருக்கிறார்கள். 
நாடு சுத்தமாக இருக்க வேண்டும் என்று நீங்களும் நினைக்கிறீர்களா?. #DontBeMeanKeepItClean என்ற ஹேஷ்டேக்கில் அதுகுறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பதிவிடுங்கள்' என்று ரசிகர்களை ரெய்னா கேட்டுக்கொண்டுள்ளார்.