ஸ்ரேயாஸ் ஐயர் அசத்தல் ஆட்டம் - ஆர்.சி.பிக்கு தொடர்ச்சியாக 6வது தோல்வி! #RCBvDC | IPL 2019: DC win by 4 wickets against RCB

வெளியிடப்பட்ட நேரம்: 19:24 (07/04/2019)

கடைசி தொடர்பு:19:25 (07/04/2019)

ஸ்ரேயாஸ் ஐயர் அசத்தல் ஆட்டம் - ஆர்.சி.பிக்கு தொடர்ச்சியாக 6வது தோல்வி! #RCBvDC

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கெதிரான போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி  4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. 

ஸ்ரேயாஸ் ஐயர்

பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் தொடரின் 20வது லீக் போட்டியில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதுகின்றன. இதில், டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் ஃபீல்டிங் தேர்வு செய்தார். இரு அணிகளுமே கடந்த போட்டியில் களமிறங்கிய அதே பிளேயிங் லெவனுடன் களமிறங்கின. 

முதலில் பேட் செய்த பெங்களூரு அணியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. அதிகபட்சமாக கேப்டன் கோலி 41 ரன்களும் மொயின் அலி 31 ரன்களும் எடுத்தனர். டெல்லி தரப்பில் ரபாடா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். 

150 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணிக்கு முதல் ஓவரிலேயே அதிர்ச்சி கொடுத்தார் டிம் சவுத்தி. அவர் வீசிய 3வது பந்தில் ஷிகர் தவான் கோல்டன் டக்காகி வெளியேறினார். இதையடுத்து, ப்ரித்வி ஷாவுடன் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் கைகோத்தார். இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இரண்டாவது விக்கெட்டுக்கு 68 ரன்கள் சேர்த்த நிலையில், பவன் நெகி ஓவரில் ப்ரித்வி ஷா ஆட்டமிழந்தார். அவர் 22 பந்துகளில் 28 ரன்கள் சேர்த்தார்.

ப்ரித்வி ஷா

மறுமுனையில் அதிரடி காட்டிய ஸ்ரேயாஸ் ஐயர், அரைசதம் கடந்து அசத்தினார். ப்ரித்வி ஷாவுக்குப் பின்னர் களமிறங்கிய இங்க்ரம் 22 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்ரேயாஸ் ஐயர், 50 பந்துகளில் 68 ரன்கள் எடுத்து வெளியேறினார். அப்போது டெல்லி அணியின் வெற்றிக்கு 15 பந்துகளில் 5 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தது. அடுத்துவந்த கிறிஸ் மோரிஸ் ரன் எதுவும் எடுக்காமலும், ரிஷப் பன்ட் 18 ரன்களிலும் வெளியேறினர். 18.5 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி வெற்றி இலக்கை எட்டியது. இதன்மூலம் அந்த அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. பெங்களூரு அணி தொடர்ச்சியாக சந்திக்கும் 6வது தோல்வி இதுவாகும்.