ராஜஸ்தானின் மோசமான சாதனை! - கொல்கத்தாவுக்கு 140 ரன்கள் இலக்கு #RRvKKR | IPL 2019: RR sets 140 runs target to KKR

வெளியிடப்பட்ட நேரம்: 21:51 (07/04/2019)

கடைசி தொடர்பு:07:30 (08/04/2019)

ராஜஸ்தானின் மோசமான சாதனை! - கொல்கத்தாவுக்கு 140 ரன்கள் இலக்கு #RRvKKR

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிரான ஐபிஎல் லீக் போட்டியில் முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் எடுத்தது. 

ஸ்மித்

ஜெய்ப்பூர் மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் தொடரின் 21வது லீக் போட்டியில் ரஹானே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன. இதில், டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் ஃபீல்டிங் தேர்வு செய்தார். 

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் ஒரே ஒரு மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. பெர்குசனுக்குப் பதிலாக ஹேரி கர்னி பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டிருக்கிறார். அதேபோல், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. ஸ்டூவர்ட் பின்னி மற்றும் வருண் ஆரோன் ஆகியோருக்குப் பதிலாக பிரசாந்த் சோப்ரா மற்றும் மிதுன் ஆகியோர் இன்றைய போட்டியில் களமிறங்குகின்றனர். 

ராஜஸ்தான் அணி, இரண்டாவது ஓவரின் முதல் பந்திலேயே கேப்டன் ரஹானேவின் விக்கெட்டை இழந்தது. பிரஷித் கிருஷ்ணா ஓவரில் எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டமிழந்த ரஹானே 5 ரன்களுடன் நடையைக் கட்டினார். இதையடுத்து தொடக்கவீரர் ஜோஸ் பட்லருடன் ஸ்டீவன் ஸ்மித் கைகோத்தார். இந்த ஜோடி நிதானமாக ரன் சேர்க்கத் தொடங்கியது. 2வது விக்கெட்டுக்கு 71 ரன்கள் சேர்த்தநிலையில், பட்லர் 37 ரன்களில் வெளியேறினார். அடுத்துவந்த திரிபாதி 8 பந்துகளில் 6 ரன்களுடன் திருப்திப்பட்டுக் கொண்டார். கொல்கத்தா அணியின் நேர்த்தியான பந்துவீச்சில் திணறிய ராஜஸ்தான் பேட்ஸ்மேன்கள் ரன்குவிக்க முடியாமல் திணறினர்.

கொல்கத்தா வீரர்கள்

15 ஓவர்களில் 100 ரன்கள் எடுத்த ராஜஸ்தான், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் மட்டுமே எடுத்தது. 44 பந்துகளில் அரைசதமடித்த ஸ்மித் 59 பந்துகளில் 73 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். மறுமுனையில் பென் ஸ்டோக்ஸ் 14 பந்துகளில் 7 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். கொல்கத்தா தரப்பில் அறிமுக வீரர் கர்னி 4 ஓவர்களில் 25 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகள் எடுத்தார். 4 ஓவர்கள் பந்துவீசிய பியூஷ் சாவ்லா 19 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். அவர் விக்கெட் எதுவும்  எடுக்கவில்லை. ஐபிஎல் தொடரில் 20 ஓவர்கள் பேட் செய்து 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்த ஒரு அணி எடுக்கும் குறைந்தபட்ச ஸ்கோர் இதுவாகும்.