`அவர்கள்மீது பழிபோடுவதை நிறுத்துங்கள்; தோல்விக்கு பொறுப்பேற்றுக்கொள்ளுங்கள்!'- கோலியைச் சாடும் கம்பீர் | he is still Apprentice - Gambhir slams virat Kohli

வெளியிடப்பட்ட நேரம்: 11:25 (08/04/2019)

கடைசி தொடர்பு:11:25 (08/04/2019)

`அவர்கள்மீது பழிபோடுவதை நிறுத்துங்கள்; தோல்விக்கு பொறுப்பேற்றுக்கொள்ளுங்கள்!'- கோலியைச் சாடும் கம்பீர்

பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலியை, முன்னாள் இந்திய வீரர் கெளதம் கம்பீர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

விராட் கோலி

photo credit: iplt20

நடப்பு ஐபிஎல் தொடரில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, தொடர் தோல்விகளைச் சந்தித்துவருகிறது. நடந்து முடிந்த 11 சீசனில் ஒரு முறைகூட ஐபிஎல் கோப்பையைத் தொட்டுப்பார்க்காத பெங்களூரு அணி, இந்த முறை கோப்பையைக் கைப்பற்றும் முனைப்புடன் களமிறங்கியது. ஆனால், முதல் போட்டியிலிருந்து தோல்வி முகத்தையே சந்தித்துவருகிறது. நேற்று வரை ஆறு போட்டிகளில் விளையாடிய பெங்களூரு அணி, தோல்வியில் சிக்ஸர் அடித்துள்ளது. இது, பெங்களூரு ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே, இந்தத் தோல்விகளுக்கு விராட் கோலியின் கேப்டன் ஷிப் தான் காரணம் என முன்னாள் இந்திய வீரர் கெளதம் கம்பீர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

விராட் கோலி

இதுகுறித்து ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில், ``பேட்டிங்கில், விராட் கோலி ஒரு மாஸ்டர் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. அதேநேரம், கேப்டன் ஷிப்பில் இன்னும் அவர் ஒரு அப்பரன்டிஸ் தான். கேப்டன் ஷிப் குறித்து அவர் இன்னும் கற்றுக்கொள்ள நிறையவே உள்ளது. ஒவ்வொரு முறையும் தோல்விக்குப் பின் பந்துவீச்சாளர்கள்மீது பழியைப் போட்டு, அவர்களைத் திட்டுவதை விடுத்து, தோல்விக்குக் காரணம் நாம்தான் எனப் புரிந்துகொண்டு, அதற்கான பொறுப்பை கோலி ஏற்றுக்கொள்ள வேண்டும். 

விராட் கோலி

கோலியை ஒரு புத்திசாலி கேப்டனாகவோ, ஒரு தந்திரமான கேப்டனாகவோ நான் பார்க்கவில்லை. ஒரு முறைகூட ஐபிஎல் கோப்பையை வென்றதில்லை. ஒரு கேப்டன் என்பவரை அவரது சாதனைகள்தான் சொல்ல வேண்டும். ஆர்சிபி அணிக்கு, கடந்த எட்டு ஆண்டுகளாக கேப்டனாக இருப்பது அவருக்குக் கிடைத்த அதிர்ஷ்டம். ஏனென்றால், எந்த ஒரு கேப்டனும் கோப்பையை வெல்லாமல் இவ்வளவு காலம் ஒரு அணியில் இருக்க முடியாது. வேறு ஒரு அணியாக இருந்தால், இந்நேரம் கோலியை கேப்டன் பதவியை விட்டு தூக்கியிருப்பார்கள். இப்போதைக்கு ஆர்சிபி அணியுடன் கோலி ஒட்டிக்கொண்டுள்ளார்.

கெளதம் கம்பீர்

பெங்களூரு போன்ற சிறிய, பேட்டிங்கிற்குச் சாதகமான மைதானத்தில் ரஸ்ஸலுக்கு எப்படிப்பட்ட பந்துவீச்சாளர்களைக்கொண்டு பந்துவீச வேண்டும் என்பது கோலிக்குத் தெரியவில்லை. யாராவது ரஸ்ஸல் போன்ற அதிரடி வீரர்களுக்கு, கடைசி நேரத்தில் வேகப்பந்து வீச்சாளர்களைப் பயன்படுத்துவார்களா? பவான் நெகி சிறப்பாகப் பந்துவீசி குறைவான ரன்களையே விட்டுக்கொடுத்திருந்தார். அவரை பௌலிங் செய்யச் சொல்லாமல் ஸ்டோனிஸ், சவுத்தியைப் பந்துவீசவைத்தது எவ்வளவு பெரிய முட்டாள்தனம். அதேபோல, ஐபிஎல் தொடர் தொடங்கும்போதே ஸ்டானிஸ், கவுல்டர்-நைல் ஆகியோரால் இந்தத் தொடர் முழுவதும் விளையாட முடியாது என அணிக்கு நன்றாகத் தெரியும். அப்படி இருந்தும், அவர்களை ஏலத்தில் எடுத்தது ஏன் எனத் தெரியவில்லை" என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


அதிகம் படித்தவை