ஸ்மித் - பட்லர் ஸ்லோ இன்னிங்ஸ்... பவர்பிளேவில் சுனில் நரைனுக்கு ஸ்பின்... #RRvKKR ரிப்போர்ட்! | Smith's slow start... Sunil Narine too good for KKR

வெளியிடப்பட்ட நேரம்: 14:28 (08/04/2019)

கடைசி தொடர்பு:14:54 (08/04/2019)

ஸ்மித் - பட்லர் ஸ்லோ இன்னிங்ஸ்... பவர்பிளேவில் சுனில் நரைனுக்கு ஸ்பின்... #RRvKKR ரிப்போர்ட்!

ஸ்மித் - பட்லர் ஸ்லோ இன்னிங்ஸ்... பவர்பிளேவில் சுனில் நரைனுக்கு ஸ்பின்... #RRvKKR ரிப்போர்ட்!

பிட்ச்சின் சூழலைப் புரிந்து பிளேயிங் லெவனைத் தேர்ந்தெடுப்பதிலேயே கேப்டன் பாதி ஜெயித்துவிடுகிறார். அந்த வகையில், நேற்று நடந்த #RRvKKR போட்டியில் பிளேயிங் லெவனைத் தேர்ந்தெடுத்ததிலேயே கே.கே.ஆர் கேப்டன் தினேஷ் கார்த்திக் டிஸ்டிங்ஷனில் பாஸாகி விட்டார். ஜெய்ப்பூர் சவாய் மன்சிங் ஸ்டேடியத்தில் உள்ள பிட்ச் ஸ்லோ பிட்ச். இதை ரஹானேவும் புரிந்துவைத்திருந்தார். ரஹானே கள நிலவரம் புரிந்து லெக் ஸ்பின்னர்  சுதேஷன் மிதுனை சேர்த்திருந்தார். ஆனால், பியூஷ் சாவ்லா, சுனில் நரைன், குல்தீப் ஆகிய மூன்று ஸ்பின்னர்களுடன் `ஸ்லோ பால் ஸ்பெஷலிஸ்ட்’ ஹேரி கர்னேவை முதன்முறையாக ஐபிஎல் போட்டிகளில் இறக்கிவிட்டார் டிகே! அதற்குச் சரியான பலனும் கிடைத்தது. 4 ஓவர்களில் 25 ரன்கள் கொடுத்து 2 விக்கெட் எடுத்து, ஆட்ட நாயகன் விருதை வென்றார் அந்த இங்கிலாந்து பெளலர்.

ஐபிஎல் போட்டிகளில் எதிரணியின் பவர் ஹிட்டருக்கு எதிராக ஹோம்வொர்க் செய்யும் அணிகள் வெற்றிபெறத் தவறுவதில்லை. ஜோஸ் பட்லரின் ஸ்பின்னுக்கு எதிரான ஸ்ட்ரைக் ரேட்டை கவனத்தில் கொண்டு, அதற்கேற்ப திட்டமிட்டிருந்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ். வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக 159.8 ஸ்ட்ரைக் ரேட் வைத்திருக்கும் பட்லர், சுழற்பந்துக்கு எதிராக வைத்திருக்கும் ஸ்ட்ரைக் ரேட் 132.9. இதைப் புரிந்தே முதல் ஓவரையே ஸ்பின்னுக்குக் கொடுத்தார் தினேஷ் கார்த்திக். பியூஸ் சாவ்லா வீசிய முதல் ஓவர் முழுவதையும் ரஹானே எதிர்கொண்டார். பியூஸ் சாவ்லாவின் அடுத்த ஓவரில் ஒரு பவுண்டரி அடித்தார் பட்லர். அதோடு சரி, சுழற்பந்தில் பட்லர் ஒரு பவுண்டரிகூட அடிக்கவில்லை. 

Steve smith  #RRvKKR

பட்லர் 12-வது ஓவர் வரை களத்தில் இருந்தார். 34 பந்துகளில் 37 ரன்கள் அடித்திருந்தார். அதில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக 12 பந்துகளில் 18 ரன்கள் சேர்த்தார். அதில் ஒரு சிக்ஸரும் அடக்கம். ஆனால், அவரால் சுழற்பந்தில் 22 பந்துகளில் 19 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. வேகத்துக்கு எதிரான ஸ்ட்ரைக் ரேட் 150 எனில், சுழற்பந்துக்கு எதிரான ஸ்ட்ரைக் ரேட் 86.36. பட்லர் மட்டுமல்ல ஸ்மித்தும் சுழற்பந்தை அவ்வளவு நேர்த்தியாக எதிர்கொள்ளவில்லை என்பது தனிக்கதை. தினேஷ் கார்த்திக் ஆரம்பத்தில் இருந்தே பெளலர்களை அழகாக ரொட்டேட் செய்தார். பியூஸ் சாவ்லா, சுனில் நரைன், குல்தீப் ஆகிய மூன்று ஸ்பின்னர்கள் 12 ஓவர்களில் 74 ரன்கள் மட்டுமே கொடுத்து, அணியின் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றினர்.

ஐ.பி.எல் வரலாற்றில் மூன்று விக்கெட்டுகளை மட்டும் இழந்து இவ்வளவு குறைவான ஸ்கோரை வேறு எந்த அணியும் எடுக்கவில்லை. ஸ்டீவ் ஸ்மித் 59 பந்துகளில் 73 ரன்கள் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 2017 ஐபிஎல்-க்குப் பிறகு டி-20 போட்டிகளில் ஸ்மித் அடித்த அதிகபட்ச ஸ்கோர் இதுவே. ஆனால், சுனில் நரைன் பந்தில் கிரீஸைவிட்டு இறங்கி ஒரு இமாலய சிக்ஸர் பறக்கவிட்டதைத் தவிர்த்து, ஸ்டீவ் ஸ்மித் ஆட்டத்தில் பெரிதாக ரசிக்க ஏதுவுமில்லை. ஆங்கரிங் இன்னிங்ஸ் ஆடுவதில் கவனம் செலுத்தி, ரன்கள் எடுக்கத் தவறிவிட்டார். 13 டாட் பால்கள். ஸ்மித் - பட்லர் ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 72 ரன்கள் சேர்த்தனர் என்றாலும், அவர்கள் தரத்துக்கு, அவர்கள் ஆட்டத்துக்கு, அது டீசன்ட்டான ஸ்கோர் இல்லை. 

#RRvKKR

சேஸிங்கில் 140 ரன்கள் என்பது கொல்கத்தாவுக்கு ஒரு விஷயமே இல்லை. ரஸல் பேட்டை எடுக்காமலேயே ஜெயித்துவிட்டது நைட் ரைடர்ஸ். ஸ்பின் எடுபடும் என்பதைப் புரிந்து வைத்திருந்த ரஹானே, அதை யாருக்கு எதிராக எப்போது பயன்படுத்த வேண்டும் என்பதில் சொதப்பிவிட்டார். பெங்களூருவுக்கு எதிரான போட்டியில் பவர்பிளேவில் கிருஷ்ணப்பா கெளதம் கட்டுக் கோப்புடன் வீசி ரன்களைக் கட்டுப்படுத்தி வைத்திருக்க, ஷ்ரேயாஸ் கோபால் கூக்ளியில் விராட் கோலி, ஏபி டி வில்லியர்ஸ் மற்றும் ஹெட்மயர் விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தினார். இதே ஃபார்முலா கொல்கத்தாவுக்கு எதிராகவும் எடுபடும் என நினைத்து, ரஹானே தப்பு கணக்குப் போட்டுவிட்டார்.

`பவர்பிளேவில் தனக்கு ஸ்பின் போடுவதைப் பார்த்து சுனில் நரைன் கிண்டலாகச் சிரிப்பார்’ என ஹர்ஷா போக்ளே சொன்னதுதான் நடந்தது. ஏனெனில், ஸ்பின்னுக்கு எதிரான சுனில் நரைனின் ஸ்ட்ரைக் ரேட் அப்படி... 227.3! ராஜஸ்தான் அணி பவர்பிளேவில் ஒரேயொரு ஸ்பின்னரைத்தான் பயன்படுத்தியது. ஆனால், அந்த ஒரு ஓவரிலேயே வேண்டிய அளவு டேமேஜ் செய்துவிட்டார் நரைன். கிருஷ்ணப்பா கெளதம் வீசிய 2-வது ஓவரிலேயே ராஜஸ்தானின் வெற்றிக் கனவு கலைந்துவிட்டது. சுனில் நரைனிடம் பெரிதாக டெக்னிக் என்று எதுவும் இல்லை. கிடைத்த பந்தை சுத்துவார். வந்தவரை லாபம். அவருக்கு ஸ்பின், அதுவும் பவர்பிளேவில் ஸ்பின் என்பது ரஹானே செய்த பெரும் தவறு. அந்த ஓவரில், ஒரேயொரு பந்தில் மட்டும் ரன் எடுக்கவில்லை. 4 0 6 4 4 4 என 22 ரன்கள் விளாசி ஒட்டுமொத்த கேமையும் மாற்றிவிட்டார் சுனில். 

#RRvKKR

பவர்பிளே முடிந்தும் சுழற்பந்தில் சுனில் நரைன் ரன் வேட்டை தொடர்ந்தது. லெக் ஸ்பின்னர், துருப்புச்சீட்டாக இருப்பார் என்று நினைத்து மிதுனை, ரஹானே களமிறக்கி இருக்கலாம். ஆனால், நரைனுக்கு பெளலர் யார் என்பதைப் பற்றியெல்லாம் கவலையில்லை. மிதுன் ஓவரில் இரண்டு சிக்ஸர்கள் பறக்கவிட்டார். ஆரம்பத்திலேயே சுழற்பந்தை வெளுத்து வாங்கிவிட்டதால், வேகப்பந்தை எதிர்கொள்வதிலும் அவருக்கு சிரமம் ஏதுமில்லை. கிடைத்தவரை லாபம் என வெளுத்துக் கட்டினார். ஓப்பனிங் இறக்கிவிட்டதற்கான பணியை கச்சிதமாக செய்துவிட்டார். ஒரு வழியாக ஷ்ரேயாஸ் கோபாலின் கூக்ளியில் நரைன் விக்கெட்டை இழந்தார் என்றாலும், 3 சிக்ஸர், 6 பவுண்டரி என 25 பந்துகளில் 47 ரன்கள் அடித்து, தன் பணியை நிறைவேற்றி விட்டார். இந்த மேட்ச்சைப் பார்த்து, இனி மற்ற கேப்டன்கள் இனி சுனில் நரைனுக்கு பவர்பிளேவில் சுழற்பந்தைத் தேர்ந்தெடுக்க மாட்டார்கள் என நம்புவோம்.

விளையாடிய ஐந்து போட்டிகளில் நான்கில் வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது கொல்கத்தா. பரிச்சார்த்த முயற்சியாக களமிறக்கப்பட்ட இங்கிலாந்தைச் சேர்ந்த ஹேரி கர்னேவும், ஸ்லோ பிட்ச்களுக்கு செம சாய்ஸ் என்பதை நிரூபித்து விட்டார். இப்போதைக்கு கொல்கத்தா எல்லா பாக்ஸையும் டிக் செய்து வருகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்